செய்திகள்

சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாராகும் 50–வது வந்தே பாரத் ரெயில்

சென்னை, டிச. 10–

சென்னையில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் நாட்டின் 50வது வந்தே பாரத் ரெயில் தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த ரெயிலை இம்மாத இறுதியில் ரெயில்வே வாரியத்திடம் வழங்க ஐசிஎப் திட்டமிட்டுள்ளது.

2019-ல் வந்தே பாரத் ரயில் சேவையை டெல்லி-வாரணாசி இடையே பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, டெல்லி-காத்ரா, காந்திநகர்-மும்பை என பல்வேறு வழித்தடங்களில் 45-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

தெற்கு ரெயில்வேயில் சென்னை-கோவை, சென்னை-மைசூரு, சென்னை-விஜயவாடா, சென்னை – திருநெல்வேலி, திருவனந்தபுரம் – காசர்கோடு உள்ளிட்ட வழித் தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.

இதையடுத்து, அதிக அளவில் வந்தே பாரத் ரெயிலை தயாரித்து வழங்க ஐசிஎப்-க்கு ரெயில்வே வாரியம் அறிவுறுத்தியது. இதையடுத்து, வந்தே பாரத் ரெயில் தயாரிப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை ஐசிஎப் ஆலையில் 50வது வந்தே பாரத் ரெயில் தயாரிப்பு பணி நடைபெறுகிறது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:–

வந்தே பாரத் ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. எனவே, சென்னை ஐசிஎப் 2023-24-ம் நிதியாண்டில் 736 வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. வாரத்துக்கு 2 அல்லது 3 வந்தே பாரத் ரெயில்களை தயாரித்து வழங்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தலா 16 பெட்டிகளைக் கொண்ட 46 வந்தே பாரத் ரெயில்கள் அல்லது தலா 8 பெட்டிகள் கொண்ட 92 வந்தே பாரத் ரெயில்களைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சென்னை ஐசிஎப் ஆலையில் 50வது வந்தே பாரத் ரெயில் தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இம்மாத இறுதிக்குள் இந்த ரயிலை தயாரித்து வழங்குவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *