செய்திகள்

டோக்கன் மூலம் ஒரு வாரத்தில் ரூ.6 ஆயிரம் வெள்ள நிவாரணம்

அமைச்சர் உதயநிதி பேட்டி

சென்னை, டிச. 10–

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருவாரத்தில் ரூ. 6 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெரிய பாதிப்பு என்பதால் மக்களிடம் சிறிய அதிருப்தி இருக்கத்தான் செய்யும்,

போர்க்கால அடிப்படையில் பணியாற்றியதால் நிலைமை சீரானது என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது. இந்த மழை வெள்ளத்தால் தாழ்வான பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொருட்கள் அனைத்தையும் இழந்து தவித்தனர். ஆற்றங்கரையோரம் வசித்தவர்களும் ஏரி–கால்வாய் நீர்நிலைகள் அருகே வசித்தவர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் வேகமாக நடைபெற்றன.

இந்த நிலையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

இதன் பின்னர் மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணமாக வழங்கப்படும். இந்த நிவாரண நிதி, அந்தந்த பகுதி ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், சேதமடைந்த குடிசைகள், பயிர்கள், படகுகள், கால்நடைகள் உயிரிழப்பு, போன்றவற்றுக்கும் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை மெளலிவாக்கம் ஊராட்சி, கோவிந்தராஜ் நகரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 600 மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் தொகுப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அமைச்சர் தா.மோ அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:–

சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியிருந்த மழைநீரில் 95 சதவீதம் வடிந்துவிட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, ஒரு வாரத்துக்குள் டோக்கன் வழங்கி ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படும்.

சிலபகுதிகளில் ரேஷன் கடைகளிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அவை சரி செய்யப்பட்டு ரேஷன் கடைகள் மூலம் விரைவில் டோக்கன் வழங்கப்படும்.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

யாரும் எதிர்பார்க்காத மழை பெய்துள்ளது. என்ன பண்ண முடியுமோ, அதனை செய்துள்ளோம். முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள், மேயர், கவுன்சிலர், தன்னார்வலர்கள் இணைந்து பணி செய்தனர். விரைவாக நடவடிக்கை எடுத்துள்ளோம். முழுவீச்சில் நிவாரண பணிகள் நடந்து வருகிறது. அமைச்சர்கள், அதிகாரிகள் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் பணியாற்றியதால் நிலைமை சீரானது.

பெரிய பாதிப்பு என்பதால் நிவாரண பணிகளில் சிலர் குறை சொல்லலாம், மக்களிடம் சிறிய அதிருப்தி இருக்கத்தான் செய்யும். எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கத்தான் செய்வர்கள். பேரிடர் காலங்களில் நாம் நம் வேலையைச் சேய்ய வேண்டும்.

இவ்வாறு உதயநிதி கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *