செய்திகள்

குழப்பங்கள் ஏற்படுத்தும் தலைமைத் தேர்தல் ஆணையரின் ராஜினாமா


ஆர்.முத்துக்குமார்


தேர்தல் நேரம் நெருங்கிவிட்டால் அரசியல் கட்சிகளின் நிலைமை திண்டாட்டமானதாகவே இருக்கும்! ஒருவரை தேர்தலில் நிற்க வேட்பாளராக அறிவித்தால் அவரது சகாக்கள் சிலர் மனவருத்தத்துடன் கட்சி மாறும் நிலையில் வெற்றி வாய்ப்புகள் கைநழுவிப் போகும் நிலை வந்துவிடும்!

சில கட்சிகளின் மாநிலத் தலைவரே கூட மாறிவிடுவார்! அதாவது விளையாட்டுப் போட்டிகளில் டாஸ் போடும் முன் ஒரு அணியின் கேப்டனே எதிர் அணிக்கு தாவிவிட்டால் விளையாட்டு மைதானத்தில் குழப்பங்கள் ஏற்படும் அல்லவா?

அதை விட குழப்பம் ஏற்படுத்தும் நிகழ்வு நடுவர்களும் விளையாட்டு அமைப்புகளின் அதிகாரிகளும் தடுமாற்றம் அடைவதுதான். போட்டி துவங்கும் நேரத்தில், டாஸ் போட நேரம் நெருங்குகையில் போட்டியைச் சரிவர நடத்த அமர்த்தப்பட்டிருக்கும் நிர்வாகிகள் பணியாற்றாமல் ராஜினாமா செய்துவிட்டால் அது ரசிகர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்துவதுடன் விளையாட்டுப் போட்டி மீதே சந்தேகங்கள் வலுத்துவிடும்.

பிப்ரவரி இறுதிக்குள் நமது பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவது வாடிக்கை. ஆனால் தேர்தலை நடத்தும் பொறுப்பை சுமக்கும் தேர்தல் ஆணையத்தின் தலைவரே இனி பணியாற்ற மாட்டேன் என்று ராஜினாமா செய்துவிட்டு தள்ளி நின்றால் அது தேர்தல் நடைமுறைகளுக்கு மிகப்பெரிய சவாலாக மாறும்.

இம்முறை தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் அதாவது மே மாத அக்னி நட்சத்திர வெப்பமான கோடைக்காலத்தில் தான் தேர்தல் தேதி வரும் அறிகுறிகள் தெரிகிறது.

வாக்குச் சேகரிக்க பிரச்சாரம் மேற்கொள்ளும் தலைவர்களுக்கும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்களுக்கும் இது மிகப்பெரிய சவால்.

தமிழகம் எங்கும் கல்விக்கூடங்களுக்கு விடுமுறை என்பது ஏப்ரல் 20 தேதிகளுக்குப் பிறகு தான். மீண்டும் துவங்குவது ஜூன் முதல் வாரத்தில் தான்.

பெரும்பாலானோர் மே மாதத்தில் குளிர் பகுதிகளுக்கு கோடை விடுமுறையை அனுபவிக்க சென்று விடுவர் . பலர் சொந்த ஊருக்கு தாத்தா, பாட்டி வீடுகளில் போய் தஞ்சம் புகுந்து விடுவார்கள்!

அந்த தேதியில் தேர்தல் நாள் வந்தால் சாதாரணமாகவே 60 சதவிகித வாக்குப்பதிவு இருக்கும் . தமிழகத்தில் அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் பொறுப்புடன் வாக்குசாவடிக்கு வருவோர் சதவிகிதம் 20 சதவிகிதம் வரை குறைந்து விடும் அபாயம் இருக்கிறது.

அதாவது வாக்காளர்களில் 50 சதவிகிதம் பேரே வாக்களிக்கும் நிலை உருவாகி உள்ளது. அதை உருவாக்கிய தலைமை தேர்தல் ஆணையரின் செயல் கண்டிக்கத்தக்கது.

தேர்தல் பணிகளை துவக்கி விட்டவர் ஏன் தேர்தல் தேதிகளை அறிவிக்காமல் தனது ராஜினாமாவை முன்வைத்தார்?

நாளை டெல்லியில் புது தேர்தல் ஆணையர்கள் தேர்வுக்கான சிறப்பு கூட்டம் நடைபெற இருக்கிறது.

யார் பெயர் முன்மொழியப்பட்டாலும் அதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்யும் நிலை ஏற்படும். சாமானியனுக்கும் பல்வேறு சந்தேகங்கள் எழ வாக்குப்பதிவு நாளில் அவர்களது மனநிலை ஜனநாயகத்தின் மீது அவநம்பிக்கையுடன் இருக்கும்.

ஆக ராஜினாமா செய்து வெளியேறும் பொறுப்புமிக்க அப்பணிக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டு விடைபெறும் அந்தத் தலைமை ஆணையருக்கு உரிய தண்டனைகளையும் வழங்கத் தவறக்கூடாது.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி வகிக்கிறார். தேர்தல் ஆணையர்களாக அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இதில் அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் ஆணையரான அருண் கோயல் நேற்று முன்தினம் திடீரென ராஜினாமா செய்தார்.

மத்திய கனரக தொழில் துறைச் செயலராக பணியாற்றி வந்த அருண் கோயல் கடந்த 2022 நவம்பர் 18-ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். அடுத்த நாளே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். சட்ட விதிகளை மீறி அவர் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

2027-ம் ஆண்டு வரை அருண் கோயலின் பதவிக் காலம் உள்ள நிலையில் அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக அவர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் அவர் ராஜினாமா செய்தது, பல்வேறு தரப்பிலும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கும் அருண் கோயலுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் இருவரும் மேற்கு வங்கத்துக்கு சென்றிருந்தனர். தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பை அருண் கோயல் புறக்கணித்தார். தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த 5-ம் தேதி டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பையும் புறக்கணித்தார்.

இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உடனான கருத்து வேறுபாடுகள் காரணமாகவே அருண் கோயல் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் புதிதாக 2 தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடக்கி உள்ளது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய உள்துறை செயலர், மத்திய பணியாளர் துறை செயலர் உள்ளிட்டோர் அடங்கிய உயர்நிலை குழு ஆலோசனை நடத்தி, 2 பதவிகளுக்கும் தலா 5 பேரின் பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்.

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, மூத்த மத்திய அமைச்சர், மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அடங்கிய மூவர் குழு வரும் 15-ம் தேதி டெல்லியில் கூடி புதிய தேர்தல் ஆணையர்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தும்.

இக்கூட்டத்தில் 2 தேர்தல் ஆணையர்கள் இறுதி செய்யப்படுவார்கள். பின்னர், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிடுவார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *