செய்திகள்

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் 7-ம் நாள்: சூர்ய பிரபை வாகனத்தில் பவனி

திருமலை, அக். 21–

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான இன்று சூர்ய பிரபை வாகனத்தில் மலையப்பர் இன்று பவனி வந்தபோது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த 15-ம் தேதி இரவு பெரிய சேஷ வாகன சேவையுடன் துவங்கிய இவ்விழாவில் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

தசரா விடுமுறை என்பதால், நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தொடர்ந்து 7 நாட்களாக நவராத்திரி பிரம்மோற்சவத்தில் பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டு வருகின்றனர்.

தங்க சூர்ய பிரபை வாகனம்

இந்நிலையில் 7 ஆம் நாளான இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரையில் ஏழுமலையான் தங்க சூர்ய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மலையப்பர் சுவாமியின் சூர்ய பிரபை வாகன புறப்பாடு கோயில் மாட வீதிகளில் நடைபெற்றது. கோவிலில் இருந்து வாகன மண்டபத்தை அடைந்த உற்சவர்கள் அங்கு தங்க சூர்ய பிரபை வாகனத்தில் எழுந்தருளினர். இதில் பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.

அதேபோல் இன்று மாலை 7 மணி முதல் 9 மணி வரையில் மலையப்பரின் தங்க சந்திர பிரவை வாகன புறப்பாடும் சிறப்பாக நடைபெறும் என்று திருக்கோயில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 6-ம் நாளான நேற்று காலை கோதண்டராமர் வேடமணிந்து அனுமன் வாகனத்தில் மலையப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாட வீதிகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடனக் குழுவினரின் நடன நிகழ்ச்சிகள் பரவசப்படுத்தியது. இதைத்தொடர்ந்து மாலை 4 மணி முதல் 6 மணி வரை பூப்பல்லக்கு சேவை நடந்தது.

இதில், ஸ்ரீதேவியும், பூதேவியும் மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து இரவு 7 மணி முதல் 9 மணி வரை தங்க யானை வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளினார். 4 மாட வீதிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *