செய்திகள்

கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 2500 மோசடி கடன் செயலிகள் நீக்கம்

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

டெல்லி, டிச. 19–

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2022 ஆம் ஆண்டு ஜூலை வரை, 2500 மோசடி கடன் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, ”மோசடி கடன் பயன்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் ஒன்றிய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. நிதிநிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சிலின் கூட்டங்களிலும் இந்த விவகாரம் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும், கண்காணிக்கப்பட்டும் வருகிறது.

2500 கடன் செயலிகள் நீக்கம்

மோசடியான கடன் செயலிகளை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ரிசர்வ் வங்கியானது ஒன்றிய அரசுடன் சட்டப்பூர்வமான பயன்பாடுகள் குறித்த வெள்ளை பட்டியலை பகிர்ந்துள்ளது. இந்த பட்டியலை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது கடன் செயலிகளை வழங்கும் கூகுள் நிறுவனத்துடன் பகிர்ந்துள்ளது.

இதன் அடிப்படையில், பிளே ஸ்டோரில் கடன் வழங்கும் செயலிகளை அமலாக்குவது தொடர்பான தனது கொள்கைளை கூகுள் புதுப்பித்துள்ளது. கூகுளின் திருத்தப்பட்ட கொள்கையின்படி, ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களால் வெளியிடப்பட்ட அல்லது அவற்றுடன் இணைந்து செயல்படும் செயலிகள் மட்டுமே பிளே ஸ்டோரில் அனுமதிக்கப்படும்.

2021ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2022ம் ஆண்டு ஜூலை வரையிலான காலகட்டத்தில் சுமார் 3500 முதல் 4000 கடன் செயலிகள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 2500 மோசடி கடன் செயலிகள் நீக்கப்பட்டுள்ளது’ என்று நிர்மலா குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *