சிறுகதை

ஓர் ஓவியம் – ராஜா செல்லமுத்து

நூறடிச் சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்தது பொலிரோ கார் . எதிர் திசையில் இருந்த சிக்னல் விழ,சட்டென பிரேக் அடித்து காரை நிறுத்தினார் ஓட்டுநர்.

ஆங்காங்கே வேகமாக வந்து கொண்டிருந்த வாகனங்கள் எல்லாம் அந்த சிக்னலில் நின்று இளைப்பாறின. முன்னால் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது ஒரு இருசக்கரவாகனம் மோத ஆட்டோவில் இருந்து கீழே இறங்கிய இருசக்கர வாகனம் ஓட்டியவனை தாறுமாறாகத் திட்டினான் ஆட்டோக்காரன் .

யோவ்,எவ்வளவு தைரியம் இருந்தா வண்டியை இடிப்பே ? என்று ஆட்டோக்காரன் எகிறினான்.

நான் பாத்து தான்யா வந்தேன். நீதான் பட்டுனு பிரேக் போட்டுட்டே? என்று இருசக்கர வாகன ஓட்டியும் ஆட்டோக்காரனும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்தச் சண்டையை விலக்கி விடுவதற்கோ ? யார் பக்கம் நியாயம் என்று சொல்வதற்கோ ? யாரும் அங்கே இறங்கி வரவில்லை. இருவரும் சண்டை போடுவதை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தார்கள் வாகன ஓட்டிகள்.

பொலிரோ காரின் கண்ணாடியை இறக்கிய சந்திர மோகன் ரோட்டில் என்ன நடக்கிறது ? என்று ஓட்டுநரிடம் கேட்டான்.

சார் ஏதோ சண்டையாம் ? என்று ஓட்டுநர் சொன்னார்.

இந்த தமிழ்நாட்டுல எதுக்கு சண்டை போடணும்? எதுக்கு சண்டை போடக்கூடாதுன்னு எவனுக்கும் தெரியல? உப்புக்கல்லுக்கு பிரயோஜனம் இல்லாத விஷயத்துக் கெல்லாம் சண்டை போட்டுட்டு அலைகிறானுக என்று சொல்லிக் கொண்டே சிக்னலில் இருந்து தன் இடது கை பக்கம் திரும்பி பார்த்தான் சந்திர மோகன்.

என்ன ஆச்சரியம்? அந்த ஓவியம் அவனின் எண்ண அலைகளைக் கிளறி விட்டது.

அதுவும் “

காவல்

நிலையம்

வடபழனி .

சென்னை “ என்று எழுதிய அந்த எழுத்துக்கள் சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் அவர் எழுதிய எழுத்துகளாக இருந்தது.

60 நொடிகள் போடப்பட்ட அந்தச் சிக்னலில் அந்த ஓவியத்தை அந்த எழுத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் சந்திர மோகன். அவன் கலங்காமலே கண்களில் கண்ணீர் கசிந்தது. அடிக்கடி மூக்கை உறிஞ்சுவதை பார்த்த ஓட்டுநர்

சார் கேக்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க . எதுக்காக அந்த போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிற போர்டப் பாத்து அழுறீங்க என்றான் ஓட்டுனர் :

பதில் சொல்வதற்கு சிறிது நேரம் எடுத்துக்கொண்ட சந்திர மோகன் தன்னை ஒரு நிலைப் படுத்திக் கொண்டு 20 வருடத்துக்கு முன்னால எந்த வேலையும் வெட்டியும் இல்லாம சுத்திக்கிட்டு திரிவேன். தினமும் வடபழனி பஸ் ஸ்டாண்ட்ல தான் படுப்பேன்.

அப்படி ஒரு நாள் நான் வடபழனி பஸ் ஸ்டாண்ட்ல படுத்து இருக்கும் போது ஒரு போலீஸ்காரர் என்னைத் தட்டி எழுப்பினார்.

தம்பி நீ யாருடா? ஏன் இங்க படுத்திருக்கிற ? அப்படின்னு கேட்டாரு ? நான் போலீஸ்காரர் டிரஸ்ஸ பார்க்கவும் பயந்துட்டேன் திரு திரு என்று முழிச்சேன். என்னையப் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போயிட்டாரு. சாப்பிட்டியா அப்படின்னு கேட்டாரு ? இல்லன்னு சொன்னேன் .அந்த நேரத்திலயும் அவர் எனக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தாரு. சாப்பிட்டதும் உன் பெயர் என்ன என்று கேட்டார் .

என் பேரு சந்திரமோகன்னு சொன்னாேன். படிக்கிறயா? வேலை செய்றயான்னு கேட்டாரு ? சார் நான் 10வது வரைக்கும் படிச்சிட்டு, பிறந்த ஊரான கும்பகாேணத்த விட்டுட்டு இங்க வந்தேன். வேலை இல்லாம தெருத்தெருவா இப்ப சுவர்ல விளம்பரம் எழுதற வேலை பார்க்கிறேன் சார். வீட்டு வாடகை கட்ட காசு இல்ல. சரியான வேலையும் கிடைக்கல . அதனால காலையிலிருந்து நைட்டு வரைக்கும் வேலை செஞ்சிட்டு பஸ்ஸெல்லாம் போனதும் நைட்ல இங்கே வந்து படுத்துடுவேன் சாருன்னு சொன்னேன்

நீ நல்லா ஓவியம் வரைவியா? ன்னு அந்த போலீஸ்காரர் என்கிட்ட கேட்டார்.

ம்… நான் நல்லா வரைவேன் சாருன்னு சொன்னேன்.

அப்படின்னா காவல் நிலையம். வடபழனி .சென்னை அப்படின்னு எழுதுன்னு அந்த போலீஸ்காரர் சொன்னார்.

உற்சாகமாக அவர் சொன்ன அந்த வாசகத்தை எழுதினேன்.

எழுதுன என்ன தட்டிக் கொடுத்த அந்த போலீஸ்காரர் ஓவியக் கல்லூரியில் சேர்த்து விட்டா படிப்பியா? அப்படின்னு கேட்டார். சரி எனத் தலையாட்டினேன்.

ஓவியக் கல்லூரியில் என்னைச் சேர்த்து விட்டார். நான் படிச்சேன் உசந்த இடத்துக்கு வந்தேன்.

இப்போ டிசைன்ல , நான் தான் இன்னைக்கு நம்பர் ஒன். எல்லா சினிமா படங்களுக்கும் பெரிய பெரிய கம்பெனிகளுக்கும் நான் தான் டிசைனரா இருக்கேன்னு உனக்கு தெரியும் .

இதே ரோட்ல கால்ல செருப்பே இல்லாம நடந்திருக்கேன். இன்னைக்கு பொலிரோ கார்ல போறேன்னா ,அதுக்கு முதல்ல பிள்ளையார் சுழி போட்டது அந்த போலீஸ்காரர் தான்.

இந்த இடத்தில இந்த சிக்னல்ல நம்ம வண்டி நிக்கும்னு நான் நினைக்கல. அந்தப் பழைய ஞாபகம் என்னை கிளறி விட்டுடுச்சு. எனக்கு வழிகாட்டிய கோவில் இது

என்று தன் கைக்குட்டையை எடுத்து இரு கண்களிலும் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே தன் பழைய கதையைச் சொல்லிக் கொண்டிருந்தான் சந்திரமோகன்.

சார் சிக்னல் விழுந்துருச்சு போகலாமா ?.என்ற போது

சரி என்று தலை ஆட்டினான் சந்திர மோகன் .

அந்தக் கூட்ட நெரிசலில் உடனே வேகமாக புறப்படாத பொலிரா கார் மெல்ல மெல்ல நகர்ந்தது.

அந்தச் சிக்னலை கடப்பதற்குள் தான் எழுதிய அந்தக் காவல் நிலைய எழுத்துக்களை ஓராயிரம் முறை திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றான் சந்திரமோகன்.

அந்த நூறடிச் சாலையில் இப்போது கார் வேகம் எடுத்திருந்தது .

சந்திர மோகனின் பழைய வறுமையெல்லாம் வழிந்து இப்போது அவனின் பயணம் ஒரு காரில் பயணப்பட்டுக் கொண்டிருந்தது .

தன் விரல்களை தன் கண்களுக்கு நேராகத் தூக்கிப் பார்த்தான் என்னை உருவாக்கியது இந்த விரல்கள் தான் என்று தன் கை விரல்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டான்.அவன் கடந்து செல்லும் பாதையில் அவனுடைய ஓவியங்கள் இடது புறமும் வலது புறமும் நிறைந்திருந்தன.

இப்போது சந்திர மோகனின் கார் நேர் திசையில் வேகமாக சென்று கொண்டிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *