சிறுகதை

மின்தகன முன்பதிவு – ராஜா செல்லமுத்து

காலைப் பொழுதில் இறந்து போன தன் தாய் துளசியின் அருகிலேயே அமர்ந்திருந்தார் சுந்தரமூர்த்தி. சோகமும் வருத்தமும் அப்பிக் கிடந்தது அவரிடத்தில்.

அவரைச் சுற்றி சொந்தங்கள், உறவுகள், நண்பர்கள் எல்லாம் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

நேற்று இரவு நன்றாக இருந்த துளசியம்மாள் திடீரென்று மரணம் அடைந்தது குடும்பத்தினர்களுக்கு பெரும் வருத்தத்தையும் சோகத்தையும் தந்தது.

சுந்தரமூர்த்தியோடு சேர்த்து ஐந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்த துளசியம்மாள் மங்களகரமாகத்தான் போய் சேர்ந்திருக்கிறாள் என்பது உறவுகளுக்கு தெரியும்.

இருந்தாலும் பெற்ற தாயின் இழப்பை அந்த குடும்பத்தினர்களால் ஈடு செய்ய முடியவில்லை.

இறப்பிற்குண்டான அத்தனை சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் செய்து முடித்துவிட்டு அன்று காலை மின்தகன மேடையில் தகனம் செய்யலாம் என்று முடிவெடுத்தார்கள் குடும்பத்தார்கள்.

சுந்தரமூர்த்தி வாழும் எல்லைக்குள்ளேயே இருந்தது ஒரு மின் தகன மேடை.

நல்ல முறையில் வாழ்ந்து முடித்த துளசியம்மாளின் இறப்பு மோட்சத்தில் சேர வேண்டும் என்பதற்காக சடங்குகள் சாங்கியங்கள் முடித்த பிறகு அன்று காலை 9 லிருந்து பத்துக்குள் தகனம் செய்யலாம் என்று ஆலோசனை செய்தார்கள் குடும்பத்தார்கள்.

ஆனால் அந்த நேரம் மின் தகன இடத்தில் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கு அடுத்து ஒரு மணி நேரம் கழித்து மின் தகனம் செய்யலாம் என்று முடிவெடுத்து அந்த நேரத்தையும் கேட்டார்கள். அதுவும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த நேரம், அடுத்த நேரம் என்று அன்று சாயங்காலம் வரை எல்லாம் முன்பதிவு செய்யப்பட்டதாகவே இருந்தது.

இத்தனை மணி நேரத்திற்கும் அத்தனை பேர் தகனம் செய்யப்படுகிறார்களா? இவ்வளவு மனிதர்கள் இன்று இறந்திருக்கிறார்களா? என்ன ஆச்சரியம் என்று வருத்தப்பட்டார் சுந்தரமூர்த்தி.

மின் மயானத்தில் பணிபுரிந்த ஊழியர் முன்பதிவு செய்யப்பட்டதற்கான அடையாளத்தை சுந்தர மூர்த்தியிடம் காட்டினார்.

இறப்பிற்குப் போயா சண்டையிடுவது? விவாதிப்பது, அது நாகரிகமற்றது என்று நினைத்துக் கொண்ட சுந்தரமூர்த்தி, இந்த நேரத்தில் யார் யார் இறந்திருக்கிறார்கள். யார் யாரை தகனம் செய்யப் போகிறார்கள்? என்ற பட்டியலை தகனம் செய்யும் இடத்திலிருந்த ஊழியரிடம் கேட்டார்.

பட்டியல் தன்னிடம் இல்லை என்றார் ஒரு மின் தகன ஊழியர்.

இல்லாத இறப்புக்கு முன்பதிவு செஞ்சு அந்த நேரங்கள நீங்க பிளாக் பண்ணி வச்சுருக்கிங்க? இறப்புல கூடவா இத செய்யணும்? இது தவறு, இறந்த ஆத்மா உங்களை மன்னிக்காதுங்க இது தப்பு என்று சொன்னார் சுந்தரமூர்த்தி.

அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. இந்த நேரங்கள எல்லாம் பிளாக் பண்ணச் சொல்லி இந்த வார்டு கவுன்சிலர் தான் சொல்லி இருக்கார் . நீங்க போய் அவரை பாருங்க. எங்களுக்கு ஒன்னும் தெரியாது. அவரு சொன்ன வேலைய நாங்க செய்றோம் என்று சுந்தரமூர்த்தியிடம் சொன்னார் மின் தகன ஊழியர்.

வருத்தமும் சோகமும் ஆற்றாமையும் தாயை இழந்த தூக்கமுமாய் இருந்த சுந்தரமூர்த்திக்கு மின் தகன ஊழியர் சொன்னது வெறுப்பைத் தந்தது.

நேராக கவுன்சிலிடம் போனார்.

சார், இறப்புங்கிறது ரயில், விமானம், பஸ்ல பயணம் போறது மாதிரி யாரும் முன்பதிவு செஞ்சிட்டு இறக்கிறதில்ல. மின்தகன மேடையில முன்பதிவு செஞ்சு எல்லா நேரத்தையும் பிளாக் பண்ணி வச்சிருக்கீங்க. இது தப்பு என்று வாதிட்டார் சுந்தரமூர்த்தி.

சார் வேற வழி இல்ல . செலவு பண்ணி தான் நான் கவுன்சிலர் ஆயிருக்கேன் .எந்தெந்த வகையில சம்பாதிக்க முடியுமோ அந்தந்த வகையில நான் சம்பாரிச்சு தான் ஆகணும். உங்களுக்கு எந்த நேரத்துல உங்க அம்மாவை தகனம் செய்ய நினைக்கிறீங்களாே நீங்க செய்யலாம். அதுக்கு கொஞ்சம் பணம் ஆகும் என்றான் வார்டு கவுன்சிலர்.

பிறந்தாலும் பெர்த் சர்டிபிகேட் வாங்குறதுக்கு காசு. ஒரு மனுஷன் செத்தாலும் அதை தகனம் பண்றதுக்கும் காசு. நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா? என்று அந்தக் கவுன்சிலர் முகத்தில் எச்சிலை உமிழ்ந்த சுந்தரமூர்த்தி கவுன்சிலர் கேட்ட தொகையைக் கொடுத்தார்.

சுந்தரமூர்த்தி தன் முகத்தில் துப்பிய எச்சிலைத் துடைத்துக் கொண்ட அந்த வார்டு கவுன்சிலர், அவர்குறித்த நேரத்தில் தன் அம்மாவைத் தகனம் செய்வதற்கான நேரத்தைக் கொடுத்தான்.

மனித வாழ்விலிருந்து விலகி, இந்த உலகத்தை விட்டு நீங்கிய துளசியம்மாவின் உடலைத் தகன மேடைக்கு எடுத்துச் சென்றார்கள்.

அந்த மின் தகனக் கட்டிடத்தில்

” இங்கு மின் தகனம் இலவசமாகச் செய்யப்படும் “

என்ற எழுத்துப் பொறிக்கப்பட்டிருந்தது.

கருவறை முதல் கல்லறை வரை லஞ்சம் கொடுத்தால் தான் இங்கு எல்லாம் நடக்கும்.

இதுல இலவசம்னு வேற எழுதி வச்சிருக்காங்க என்று அந்தத் துக்கத்திலும் சிரித்துக் கொண்டே தகன மேடைக்குள் தன் தாய் துளசியம்மாளை எடுத்துச் சென்றார் சுந்தரமூர்த்தி.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *