செய்திகள்

மின்னணு யந்திரம், அமலாக்கத்துறை, சி.பி.ஐ. இல்லாமல் மோடியால் வெற்றி பெற முடியாது: ராகுல் தாக்கு

மும்பை, மார்ச்,18-–

ராகுல்காந்தியின் ‘பாரத ஒற்றுமை நீதி யாத்திரை’ நிறைவு பெற்றதையொட்டி மும்பையில் நேற்று பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பலத்தை காட்டிய ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள், பாரதீய ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்று சூளுரைத்தனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாடு முழுவதும் 2 கட்டமாக யாத்திரை மேற்கொண்டார்.

‘பாரத ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய ராகுல்காந்தி, சுமார் 4 ஆயிரம் கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொண்டார். இந்த நடைபயணம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஸ்ரீநகரில் நிறைவு பெற்றது.

2-வது கட்டமாக ‘பாரத ஒற்றுமை நீதி யாத்திரை’ என்ற பெயரில் வாகன யாத்திரையை கடந்த ஜனவரி 14-ந் தேதி மணிப்பூரில் இருந்து மும்பையை நோக்கி தொடங்கினார். பல்வேறு மாநிலங்கள் வழியாக யாத்திரை சென்று அவர் பொதுமக்களை சந்தித்தார். நேற்று முன்தினம் யாத்திரை மும்பையில் உள்ள சட்டமேதை அம்பேத்கர் சமாதியில் நிறைவு பெற்றது.

இந்த யாத்திரைகளின் போது ராகுல் காந்திக்கு வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

ராகுல்காந்தியின் 2-வது கட்ட யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ‘இந்தியா’ கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த பொதுக்கூட்டம் ‘இந்தியா’ கூட்டணியின் முதல் பிரச்சார கூட்டமாகவே அமைந்தது.

மேலும் ‘இந்தியா’ கூட்டணி சிதறியதாக கருதப்பட்ட நிலையில், தலைவர்கள் அணி திரண்டு தங்களது பலத்தை காட்டினர்.

நிகழ்ச்சியில் ராகுல்காந்தியுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் தேசியவாத காங்கிரஸ்-சரத் சந்திர பவார் கட்சி தலைவர் சரத்பவார், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா,

ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சவுரப் பரத்வாஜ், ஜார்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா, வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தங்கால்ஜி, கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

திரளாக கலந்து கொண்ட தொண்டர்கள் மத்தியில் பேசிய தலைவர்கள் பாரதீய ஜனதாவை கடுமையாக விமர்சித்தனர். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் ஒற்றுமையாக செயல்பட்டு பாரதீய ஜனதாவை தோற்கடிப்பதே தங்களது இலக்கு என்று சூளுரைத்தனர்.

பிரதமர் மோடியால்

வெற்றி பெற முடியாது

கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில்,

நாட்டு மக்களின் ஒட்டு மொத்த கவனத்தை பெறவே 4 ஆயிரம் கிலோ மீட்டர் நடந்தேன். பிரதமர் மோடி அதிகாரத்திற்காக வேலை செய்யும் ஒரு முகமூடி. மராட்டியத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவர் இந்த அதிகாரத்தை எதிர்த்து போராட முடியாது, சிறைக்கு செல்ல விரும்பவில்லை என்று கூறி எனது தாயார் சோனியா காந்தி முன்பு அழுதார். வாக்குப்பதிவு எந்திரம், அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை போன்றவை இல்லாமல் மோடியால் வெற்றி பெற முடியாது. விவிபாட் எந்திரத்தில் விழும் வாக்குகளை எண்ணும்படி தேர்தல் ஆணையத்திடம் கேட்டோம். ஆனால் எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை” என்றார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “மோடியின் வாக்குறுதி என்பது பணம் படைத்தவர்களுக்கானது. ஆனால் எங்களின் வாக்குறுதி சாதாரண மக்களுக்கானது” என்றார்.

ஓட்டுகளை பாதுகாக்க வேண்டும்

உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, “மக்கள் ஒன்றுபட்டால், சர்வாதிகாரம் முடிவுக்கு வரும்” என்று கூறினார்.

சரத்பவார் கூறுகையில், ‘வெள்ளை யனே வெளியேறு என்ற அழைப்பை மகாத்மா காந்தி மும்பையில் இருந்து விடுத்தார். அதுபோல் ஆட்சியிலிருந்து பாஜக வெளியேற வேண்டும் என்ற அழைப்பை இந்தியா கூட்டணி தலைவர்கள் விடுக்க வேண்டும்’’ என்றார்.

தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பேசுகையில், “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மற்றும் மணிப்பூர் முதல் மும்பை வரை இந்தியா ஒற்றுமை யாத்திரை நடந்துள்ளது. இந்திய நாட்டை காப்பாற்றும் பொறுப்பை நாம் ஏற்க வேண்டும். மேலும் நமது ஓட்டுகளை பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் வாக்குப்பதிவு எந்திரம் தான் திருடன், எனவே வாக்காளர்கள் வாக்களித்த பிறகு விவிபாட் எந்திரத்தில் வரும் ஒப்புகை சீட்டை கவனமாக சரிபார்க்க வேண்டும். உங்கள் வாக்குகள் சரியான கட்சிக்கு சென்றதா? என்பதை உறுதி செய்யுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் மின்னணு எந்திர வாக்குப்பதிவு முறை முடிவுக்கு கொண்டு வரப்படும். மேலும் தேர்தல் கமிஷன் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படும்” என்றார்.

மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி பேசுகையில், “பல்வேறு அரசியல் சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகள் கொண்ட தலைவர்கள் இங்கு ஒன்றாக இணைந்துள்ளனர். இதுதான் இந்தியா. இப்படி தான் ஒன்றாக இணைந்து, ஒற்றுமையுடன் செயல்படுமாறு நமது அரசியலமைப்பும் நமக்கு கற்பித்துள்ளது. தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது. இந்த நாட்டின் மக்கள் தங்கள் கையில் ஓட்டு எனும் மிகப்பெரிய ஆயுதத்தை வைத்துள்ளனர். அவர்கள் அதை தங்கள் விருப்பப்படி பயன்படுத்த வேண்டும்” என்றார்.

ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், “இந்தியா கூட்டணியின் போராட்டம் பிரதமர் நரேந்திர மோடி அல்லது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு எதிரானது அல்ல. வெறுப்பு சித்தாந்தத்திற்கு எதிரானது. பிரதமர் மோடி பொய்களின் தயாரிப்பாளர், மொத்த விற்பனையாளர் மற்றும் பொய்களை விநியோகிப்பவர். ஆனால் எங்களை போன்ற உண்மை யானவர்கள் அவருக்கு பயப்படுவதில்லை. மராட்டியத்தில் எம்.எல்.ஏ.க்களை கட்சியை விட்டு விலக வைத்தனர். ஆனால் பீகாரில் அவர்கள் பா.ஜனதாவால் கடத்தப்பட்டனர்” என்று பேசினார்.

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி மந்திரி சவுரப் பரத்வாஜ் கூறுகையில், “இந்தியா கூட்டணி தொடங்கியபோது, இவர்கள் ஒருபோதும் இணையமாட்டார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அனைவரும் ஒன்றாக இருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். அதனால் தான் நான் கூறுகிறேன், நாம் வெற்றி பெறுவோம்” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *