சிறுகதை

இடம் பெயர்தல் – ராஜா செல்லமுத்து

கண்மணிக்கு அன்று நடந்தது ரொம்ப உறுத்தலாகவே இருந்தது. தான் செய்த தவறுக்கு தான் இப்போது தண்டனை கிடைத்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள்.

ஆனால் அன்று நடந்ததை வேண்டுமென்றே அவள் செய்யவில்லை. ஆனால் இன்று நடப்பது அன்று நடந்ததின் பிரதிபலிப்போ என்று கவலை கொண்டாள்.

இருக்கலாம் காலம் எல்லாவற்றிற்கும் பதில் தரும் என்பதை அவள் அன்று உணரத்தான் செய்தாள்.

நகரில் உள்ள பிரதான மருத்துவமனையில் தன் குழந்தைக்கு காய்ச்சலுக்காக அமர்ந்திருந்தவளை முன்னால் பதிவு செய்தவர்கள் அனுமதிக்கவே இல்லை. பிள்ளைக்கு காய்ச்சல் கொதிக்கிறது என்று கெஞ்சிப் பார்த்தாள். என் பிள்ளைக்கும்தான் காய்ச்சல் அடிக்கிறது .உங்க பிள்ளைக்கு மட்டுமா காய்ச்சல் அடிக்கிறது? என்று வரிந்து கட்டி முன்னுக்கு போனவர்கள்தான் அதிகமாக இருந்தார்கள் .

கண்மணியின் குழந்தைக்கு அவ்வளவாக காய்ச்சல் இல்ல தான். சீக்கிரம் மருத்துவரை பார்த்துவிட்டு சென்றுவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்குத் தான் ஏற்கனவே அங்கு அமர்ந்திருந்தவர்களின் பதில் இப்படிக் கிடைத்தது. கண்மணியுடன் வந்த அவளது கணவன் முருகேசன் கண்மணியைச் சமாதானப்படுத்தினான்.

பரவாயில்லமா அவங்க போயிட்டு வரட்டும். பின்னாடி நாம போகலாம் என்று கண்மணியைத் தட்டிக் கொடுத்தான்.

சின்னப் புள்ள முன்னாடி பார்த்தா குறைந்து போய்விடுவார்களா என்ன? இப்படியும் மனுஷங்க இருப்பாங்களா ? என்று அவளுக்குள்ளே பேசிக் கொண்டாள். அதற்குப் பதில் சொல்லாத முருகேசன் அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டான்.

வரிசையாக அமர்ந்திருந்த ஆட்கள் எல்லாம் மருத்துவரைப் பார்த்து திரும்பினார்கள்.

கடைசியாக வந்த கண்மணி கடைசியாகத்தான் போனாள்.

இதே விஷயத்தைத்தான் கண்மணி சில நாட்களுக்கு முன்பு செய்திருந்தாள்.

முன்பு பதிவு செய்திருக்கிறேன்; யாரையும் விட மாட்டேன் என்று மற்ற நோயாளிகளை அமர வைத்துவிட்டு அவள் முன்னாடி சென்றது இப்போது அவளுக்கு ஞாபகம் வந்தது.

அப்போதும் தீவிரமான சிகிச்சை அவளுக்கு இல்லைதான். இருந்தாலும் ஒரு குழந்தைக்கு சீக்கிரம் மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதை அவள் அலட்சியமாக நினைத்துக் கொண்டு அந்தக் குழந்தையை மருத்துவரிடம் செல்ல விடாமல் தடுத்த அந்த நினைவு இப்போது அவளுக்கு வந்து வந்து போனது.

இனிமேல் எதையும் விட்டுக் கொடுத்து வாழ்வதில் தான் நம் வாழ்க்கை இருக்கிறது.

நாம் ஒரு நல்லது செய்தால் அதற்கான பலன் உடனே கிடைக்கிறது. கெட்டது செய்தாலும் அதற்கான பலன் உடனே கிடைத்து விடுகிறது.

இனிமேல் கெட்டதை விட்டு நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்பதை நினைத்துக் கொண்டு அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறினாள்.

அதுவரையில் அழுது கொண்டிருந்த அவளின் குழந்தை கண்மணியையும் முருகேசனையும் பார்த்துச் சிரித்தது.

இந்நாள் வரை அவள் மனதில் ஒட்டிக் கொண்டிருந்த சுயநலமென்ற அழுக்கு அன்று கரைந்தாேடியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *