சிறுகதை

சக்சஸ் மீட் – ராஜா செல்லமுத்து

தானே கதை, வசனம் எழுதி தானே தயாரித்து இயக்கிய படத்தில் சக்சஸ் மீட் கொண்டாடிக் கொண்டிருந்தான் ராகவ்.

இத்தனைக்கும் அந்தத் திரைப்படம் வெளியாகி ஒரு நாள் தான் ஆனது.

ஒரு நாள் ஓடிய படத்திற்கு சக்சஸ் மீட்டா? என்று திரைப்படத்தைச் சார்ந்தவர்கள் வாய் பிளந்தார்கள்.

என்னங்க முன்னாடி எல்லாம் 100 நாள் 200 நாள்ன்னு சக்சஸ் மீட் பண்ணுவாங்க. இப்ப என்னடான்னா ஒரு நாள் படம் ஓடுனதுக்கே சக்சஸ் மீட் பண்றாங்க. ஆச்சரியமா இருக்கு என்று சக்சஸ் மீட்டுக்கு வந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்.

அட நீங்க வேற. இப்ப எல்லாம் ஒரு காட்சி ஓட்றதே பெரிய விஷயம். என்னுடைய பிரண்ட் ஒருத்தனுடைய படம் ரிலீஸ் ஆகி போஸ்டர் ஒட்டுனாங்க.. போஸ்ட் மட்டும் தான் ஒட்டி இருக்காங்க. ஒருத்தரும் படம் பாக்க வரல. அதனால தியேட்டர் காரங்க எல்லாம் இப்போ புதுசா ஒரு சட்டம் போட்டு இருக்காங்க.

ஒவ்வொரு காட்சிக்கும் 15 டிக்கெட் வாங்கினால் தான் நாங்க படம் ஓட்டுவோம்னு. அதனால அந்த படத்துல நடிச்சவன், வேலை செஞ்சவன் எல்லாம் இந்த படத்தை பாக்கணும்னா ஒவ்வொரு ஷோக்கும் 15 டிக்கெட் வாங்கி அவங்க தெரிஞ்சவங்க சொந்தக்காரங்க அப்படின்னு எல்லாத்தையும் வம்படியாக கூப்பிட்டு தியேட்டர்ல உக்கார வச்சு படத்தைக் காட்டுறாங்க.

அப்படி ஒவ்வொரு காட்சிக்கும் 15 டிக்கெட் வாங்கினா தான் தியேட்டர்ல படம் ஓடும். இப்பக் கூட இவங்க ஒரு நாள் படம் ஓட்டிட்டு சக்சஸ் மீட் வச்சிருக்கறது. மூணு காட்சிக்கும் இவங்க வாங்குன டிக்கெட் தான். மத்தபடி ஒரு பய அந்த படத்தை பார்க்க வரமாட்டான். எல்லா காட்சிகளுக்கும் இவங்க தான் டிக்கெட் வாங்கப் போறாங்க. இவங்கதான் படத்தை ஓட்ட போறாங்க. இவங்களே சக்சஸ் னு சொல்லிக்கிறாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது

மேடையில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் என்று சிறப்பு விருந்தினர்கள் பேசிக் கொண்டார்கள்.

அப்போது தயாரிப்பாளரும் நடிகர் சிறப்பு விருந்தினருமாக அமர்ந்த ராகவ்வுக்கு ஒரு போன் வந்தது

“இப்ப ஷோ ஓடணும்னா 15 டிக்கெட் நீங்க வாங்கணும், அப்படி வாங்கலன்னா ஷோவ கேன்சல் பண்ணிடுவோம். பரவாயில்லையா? என்று தியேட்டர்க்காரர் எச்சரிக்க

அய்யய்யோ அப்படிலாம் பண்ணிடாதீங்க. இப்ப சக்சஸ் மீட் நடந்துட்டு இருக்கு.

ஒரு பையன அனுப்புறேன். 15 டிக்கெட் குடுத்து விடுங்க. படத்த ஓட்டுங்க என்று உறுதி சொன்னான் ராகவ்.

இந்தப் படம் தமிழ் திரை உலகில் மைல் கல். வசூலில் சாதனை படைக்கும் என்று வந்த பெரியவர் வாழ்த்தி கொண்டிருந்தார்.

15 டிக்கெட்டுக்கான பணத்தை தன் உதவியாளரிடம் கொடுத்து அனுப்பினான் ராகவ்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *