செய்திகள் நாடும் நடப்பும்

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகம்?


ஆர்.முத்துக்குமார்


தீபாவளி கொண்டாட்டம் நிறைவு பெற்றது. ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவும் இறுதிப்போட்டியும் நடந்து முடிந்த பரபரப்புடன் நாடே ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் பரபரப்பில் ஈடுபட தயாராகி விட்டனர்.

இம்மாதம் அதாவது நவம்பர் 7 முதல் நவம்பர் 30 வரை சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோராம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் பணிகள் மும்முரமாகவே நடந்து கொண்டிருக்கிறது.

தேசிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இம்மாநிலங்களில் நேரடியாக வந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

எல்லாக் கட்சிகளும் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளனர். அதில் பல்வேறு சலுகைகள் இருப்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

சத்தீஸ்கரில் நவ.7 நடைபெற்ற தேர்தல் எந்த பெரிய அசம்பாவிதமும் காணப்படாமல் கண்ணியமாகவே நடைபெற்று முடிந்தும் விட்டது.

இங்கு ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிசோராமிலும் தேர்தல் நடைபெற்று விட்டது.

இந்தியா கூட்டணி என பிரகடனப்படுத்தி கொண்டு வரும் காங்கிரஸ் தலைமையிலான தேசிய எதிர்க்கட்சிகளின் கூட்டணி இம்முறை இந்த ஐந்து மாநிலங்களில் மக்களின் மதிப்பைப் பெற இருப்பதை வைத்தே அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடு உருவாகும்.

பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தங்களது கோட்டையாக இருக்கும் மத்திய பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் வெற்றி சதவிகிதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை வைத்து பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா மீது இருக்கும் மக்களின் நம்பிக்கை பற்றி தெரியவரும்.

வட மாநிலங்களில் விவசாயிகளின் போராட்டமும் அவர்களுக்கு இருக்கும் மன கசப்புகளும் இந்த ஐந்து சட்டமன்ற தேர்தலின் முடிவில் ஓர் அளவு தெரிய வரும்.

நாம் ஜி–20 என்ற பணக்கார நாடுகள் கூட்டமைப்பின் தலைமையை ஏற்று லாவகமாக நடத்திய பல முக்கிய முடிவுகளை எடுத்த பாங்கை சர்வதேசத் தலைவர்கள் பாராட்டியதை அறிவோம். தினக்கூலி சாமானியனுக்கு எந்த விசேஷ சலுகைகள் கிடைக்காத நிலையில் பிரதமர் மோடிக்கு அவை சாதகமா? பாதகமா? என்பதையும் இத்தேர்தல்களின் முடிவு நமக்கு சுட்டிக் காட்டும்.

தெலுங்கானாவில் இறுதியாக நவம்பர் 30 அன்று தான் நடைபெறுகிறது. அங்கு 119 தொகுதிகளில் எப்படியாவது அதிகப்படி இடங்களை பிடிக்க பாரதீய ஜனதா பிரதமர் மோடியை முன் நிறுத்தியும் அவரையே பிரச்சாரம் செய்ய வைத்தும் வருகிறார்கள். மத்திய அமைச்சர்கள் அமீத் ஷா உட்பட பல பலசாலி அமைச்சர்கள் எல்லாம் அம்மாநிலத்தில் தங்கி இருந்து தேர்தல் பணிகளை கவனித்தும் வருகிறார்கள்.

பொருளாதார வளர்ச்சி, மகளிர் இட ஒதுக்கீடு போன்ற பலவற்றை முன்வைத்து பிரச்சாரம் செய்ததுடன் எல்லா தரப்பினருக்கும் இலவசங்கள் என்று பாரதீய ஜனதா உட்பட தெலுங்கானாவில் கட்சியில் இருக்கும் பாரதீய ராஷ்டிரிய சமித்தி மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகியவை மாநில ஆட்சியைப் பிடிக்க தேவையான 60 இடங்களுக்கு மிகத் தீவிரமாக ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

மும்முனைப் போட்டியில் மிகப் பின்தங்கி இருப்பது பாரதீய ஜனதா தான்! அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் முன்பு பிரதமர் மோடியால் நகைக்கப்பட்ட இலவச அறிவிப்புகளாகவே இருப்பது அக்கட்சியினருக்கு ஏற்பட்டு இருக்கும் தோல்வி பீதியின் எதிரொலியாகவே தெரிகிறது.

உண்மையில் இந்த மாநிலத்தில் பாரதீய ஜனதா இரண்டு இலக்கு அதாவது 10க்கும் மேற்பட்ட இடங்களை வென்றால் அதுவே அக்கட்சியின் வெற்றியாக இருக்கப் போகிறது!

எல்லா ஐந்து சட்டமன்ற தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 அன்று நடைபெறுகிறது. அன்று மதியமே வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தவர்கள் யார்? என்பதும் வெட்ட வெளிச்சமாகி விடும்!

ஆக பாராளுமன்ற பொது தேர்தலுக்கான ‘கவுண்ட் டவுன்’ துவங்கி விட்டது. பாரதீய ஜனதா மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்து விடுவார்களா? அல்லது மாற்றம் வேண்டும் என்று மீண்டும் தேசிய காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு ஆட்சிப் பொறுப்பை மக்கள் தந்து விடுவார்களா?

இந்தக் கேள்விக்கான விடையை ஓரளவு தெரிந்து கொள்ள டிசம்பர் 3 வெளிவரும் தேர்தல் முடிவுகள் நல்ல குறிகாட்டிகளாகவே இருக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *