செய்திகள்

நிலைமை சீரடைய தன்னார்வல தொண்டு நிறுவனங்களும் அரசுடன் கைகோர்த்து செயல்பட வேண்டும்

கமல்ஹாசன் பேட்டி

சென்னை, டிச. 8–

நிலைமை சீரடைய தன்னார்வல தொண்டு நிறுவனங்களும் அரசுடன் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்று கமல்ஹாசன் கூறினார்.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நிவாரணப் பொருட்களை வழங்கினார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது:

கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு கனமழை பெய்திருக்கிறது. இது ஒரு சவாலான காலகட்டம். பருவநிலை மாற்றங்களால் இதுபோன்ற பேரிடர்கள் எதிர்காலத்தில் அடிக்கடி நிகழும் என அறிவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள். அதற்கு நாம் தயாராக வேண்டும். குறுகிய கால அவகாசத்திற்குள் அதிகளவு மழைப்பொழிவு என்பது சமீபகாலமாக வடஇந்தியாவிலும், உலகின் சில நாடுகளிலும் அடிக்கடி நிகழ்கிறது. பொதுமக்களிடம் பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசின் கடமை.

நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவதும், நோய்த்தொற்று பரவாமல் பார்த்துக்கொள்வதும்தான் இப்போது அரசு உடனடியாகச் செய்யவேண்டியவை. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்கள் முறையாக ஆய்வு செய்த பிறகே பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்கள் நிகழாமல் இருக்கவும், நிகழ்ந்தால் நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குமான வழிமுறைகளை இதற்குரிய நிபுணர்களுடனும், அறிஞர்களுடனும் அரசு கலந்து பேசி புதிய வழிவகைகளைக் காண வேண்டும்.

மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் மீட்புப் பணிகளில் பல்வேறு வகைகளில் உதவிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் செய்து வரும் நிவாரணப் பணிகளின் ஒரு பகுதியாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5000 குடும்பங்களுக்கு பால் பவுடர், அரிசி, கோதுமை, ரவை, டீத்தூள், சர்க்கரை, உப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பையை கொண்டு சேர்க்க இருக்கிறோம்.

இன்னும் நிவாரணப் பொருட்கள் வந்துகொண்டிருக்கின்றன. சூழலை ஆராய்ந்து எங்கே என்ன தேவைப்படுகிறதோ அங்கே அவற்றைக் கொண்டு சேர்க்க ஒரு மையம் அமைத்துள்ளோம். ஒரு உணவு தயாரிப்பு கூடம் அமைத்து தினமும் 5000 பேருக்கான உணவு தயாரிக்கப்பட்டு வினியோகம் செய்யும் பணியை இன்று முதல் தொடங்குகிறோம். நிலைமை சீரடையும் வரை இந்த கிட்சன் செயல்படும்.

மழை வெள்ளத்தின் காரணமாக மக்களுக்கு பல்வேறு நோய்த்தொற்றுக்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதால், வரும் நாட்களில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொடர் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றன. இந்த நிவாரணப் பணிகளில் பொதுமக்களும் தன்னார்வல தொண்டு நிறுவனங்களும் அரசுடன் கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *