செய்திகள்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சாணம் கலந்த விவகாரம்: ஊராட்சி செயலருக்கு நோட்டீஸ்

புதுக்கோட்டை, ஏப். 27–

புதுக்கோட்டை அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சாணம் கலந்த விவகாரத்தில் ஊராட்சி செயலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கம்விடுதி அடுத்த குறுவாண்டான் தெரு பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து நேற்று முன்தினம் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் தொட்டியின் மேலே ஏறி பார்த்தபோது நீரில் மாட்டு சாணம் கலக்கப்பட்டது தெரியவந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். புகார் தொடர்பாக கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து குடிநீர் மாதிரியை சோதனைக்கு அனுப்பினர். இதையடுத்து தொட்டி சுத்தம் செய்யப்பட்டது. குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணத்தை கரைத்த மர்ம நபர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நீர்த்தேக்க தொட்டியில் சாணம் கலந்த விவகாரத்தில், தொட்டியை ஏன் முறையாக சுத்தம் செய்யவில்லை? என்று விளக்கம் கேட்டு ஊராட்சி செயலர் காளிமுத்து மற்றும் டேங்க் ஆபரேட்டர் ரங்கசாமி ஆகியோருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *