செய்திகள்

“மங்களா பாட்டியின் செவ்வாய் பயணம்” (சிறுகதைத் தொகுப்பு) சொன்னதும் – சொல்ல தவறியதும்…!


புத்தக மதிப்புரை


ஆசிரியர்: வசந்தா ராஜமாணிக்கம்


பக்கம்– 100 விலை ரூ.80


வெளியீடு:

மக்கள் குரல் நாளிதழ்,

எண்–1, முதல் தெரு,

யுனைட்டெட் இந்தியா காலனி,

கோடம்பாக்கம்,

சென்னை–600024


இலக்கியத்தின் பெரும் நகர்வு சிறுகதைகள். மனித வாழ்வியல், கலை, கலாச்சாரம், பண்பாடு காலம் காலமாக கதைகள் வழியாகவே கடத்தப்பட்டு வருகிறது. எழுத்து உலகில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் காலூன்றி வேரூன்றி நிற்கும் காலம் இது. அந்த வரிசையில் வசந்தா ராஜமாணிக்கமும் ஒருவர்.

வசந்தா ராஜமாணிக்கம் ‘மக்கள் குரல்’ நாளிதழில் எழுதிய ‘மங்களா பாட்டியின் செவ்வாய் பயணம்’ சிறுகதைகளின் தொகுப்பு அண்மையில் அவருடைய பேத்தியின் திருமண விழாவில் வெளியிடப்பட்டது. நூல் ஆசிரியர் எம்ஜிஆரின் ரசிகர். புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இருபது தலைப்புகளில், அன்பே வா, அவள் ஒரு நவரச நாயகி, எனக்கொரு மகன் பிறப்பான், ஒரு தாய் மக்கள் நாம் என்போம், அன்றொரு நாள் இதே நிலவில்… என தலைப்புகளில் எம்ஜிஆர் பட பாடல்களின் மணம் வீசுகிறது. தலைப்பில் மட்டுமல்ல… கதைகளுக்குள்ளும்…

பெண்ணிய சிந்தனைக்கு சபாஷ்

‘பூமிக்கு வந்த முப்பெரும் தேவியர்’கதையில், லட்சுமிதேவி, சரஸ்வதி தேவி, பார்வதி தேவி மூவரும் பூமிக்கு வருகின்றனர். அவரவர் வாழ்க்கையை அவரவர் சலித்து கொள்கிறார்கள். அதில், ஆசிரியர் வசந்தா ராஜமாணிக்கம் பார்வையில், லட்சுமி தேவி பேசுகிறாள்…

” எனக்கென்று சிகப்பு சேலையைத் தவிர வேறு எதுவும் இல்லை, ஒரு நல்ல ஆசனமும் கிடையாது, இந்தச் செந்தாமரையைத் தவிர, என் கணவரும் பாற்கடலில் அல்லது பாம்பின்மேல் பள்ளி கொள்கிறேன் என்று சயனித்திருப்பார். நான் அவருக்கு காலைப்பிடித்து விட வேண்டும் எந்நேரமும், எனக்கு வர வர இந்த வேலை அலுத்துவிட்டது என்கிறார். சிவனின் பாதி சக்தியாக இருப்பதில் பார்வதியின் சலிப்பை மிக அழகாக பதிவு செய்து இருப்பதுடன் கடவுளும் பெண் தானே… என்று கூறுகிறார் கதையாசிரியர்.

கதையின் கடைசியில் நாரதர் வருகிறார். மூன்று தேவியரையும் தேவலோகம் வாருங்கள் என்கிறார். முப்பெருந்தேவியரும் நாங்கள் இனிமேல் அங்கு வருவதாக இல்லை. இதுதான் எங்கள் உலகம் என்கிறார்கள். இனிமேல் காலைப்பிடித்துவிட, உடன் நடனமாட எல்லாம் சேடிப் பெண்களை நியமித்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள்.

பெண்கள் வீட்டை தாண்டி நாட்டின் வளர்ச்சியிலும் பங்கெடுக்க வேண்டும் என கதையாசிரியர் வசந்தா அழைப்பு விடுக்கிறார். வீணையை தூர தூக்கி வை என்கிறார் சரஸ்வதியை. கடவுள்களின் வழியாக முற்போக்கு கருத்துகளை அழகாக நூலாசிரியர் கடத்தியிருப்பது பாராட்டுக்குரியது. ஆசிரியரின் பெண்ணியம் சார்ந்த சிந்தனைக்கு ஒரு சபாஷ்.

புதுமை சிந்தனை நனவாகும்

“மங்களா பாட்டியின் செவ்வாய் பயணம்” எனும் சிறுகதையில், பாட்டி ஒருவர் செவ்வாய் கோளுக்கு பயணம் செய்கிறார். பாட்டி அடிக்கும் லூட்டி சுவையாக உள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வது சாத்தியம் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியிருக்கிறார். (மங்களா பாட்டியின்… கதைக்காக அவரிடம் ஸ்பெஷலாக கேள்வி கேட்கப்பட்டு உறுதிபடுத்தப்பட்டது.) ஆக, செவ்வாய் கிரகத்துக்கு மங்களா பாட்டி செல்லும் வகையிலான கதையாசிரியரின் கனவும் ஒரு நாள் நனவாகும்.

“வானில் நீந்தும் நிலவில்

ஒரு நாள் பள்ளிக்கூடம் நடக்கும்

காற்றில் ஏறி பயணம் செல்ல

பாதை அங்கே இருக்கும்

எங்கும் வாழும் மழலைச் செல்வம்

ஒன்றாய்ச் சேர்ந்து படிக்கும்

இல்லை ஜாதி மதமும்

இல்லை என்றே பாடிச் சிரிக்கும்”… என்ற எம்ஜிஆர் பாடல் வரிகள் இந்த கதைக்கு பொருத்தமாக இருந்திருக்கும். ஏனோ ஆசிரியர் மறந்துவிட்டார்…

“நினைவிலேயே வாழ்பவள்”எனும் சிறுகதையில், ஜானகியின் காத்திருப்பு கல் மனதையும் கரைய வைக்கும். எதற்கெடுத்தாலும் விவாகரத்து வேண்டாம் என்று கதையை முடித்திருக்கிறார் நூலாசிரியர்.

சிறு தடுமாற்றம்

“அன்றொரு நாள் இதே நிலவில்…”எனும் கதையில், இரு பெண்களின் தகப்பனான கதையின் நாயகன், ஒரு பெண்ணை படிக்க வைத்து ஆளாக்கி திருமணம் செய்து கொடுப்பதற்கே தன் வாழ்நாள் முழுவதையும் இழந்ததாக ஆசிரியர் குறிப்பிட்டு இருக்கிறார். இதில் கவனிக்க தவறியது தாயின் தியாகம்.

நிலவொளியை ரசிப்பதில் கிடைக்கும் இன்பம் பற்றி கதையின் நாயகன் சிலாகித்திருக்கிறான். நட்சத்திர கூட்டங்கள், சுடர்விடும் நிலவு, அந்தி சூரியன், வைகறை மேகங்கள் என எதையும் ரசிக்க மறந்த ஒரு தலைமுறைக்கு இது ஒரு பாடமாக இருக்கும்.

“எனக்கொரு மகன் பிறப்பான், அவன்…” என்ற சிறுகதையில், காதலன் இந்து. காதலி இஸ்லாமிய பெண். மதம் மாற்றுவதிலும், மதம் மாறுவதிலும் கதாசிரியர் தடுமாறுகிறார். மனம் மாறினால் இடையில் மதம் எதற்கு என்ற கேள்வி ஆழமான காதலில் இயல்பாகவே எழும். மாப்பிள்ளையின் கருத்தை கேட்காமல் மணப்பெண் வீட்டில் மதம் மாற்ற ஏற்பாடுகள் நடப்பதை திடீரென திணித்திருக்கிறார் நூலாசிரியர்.

எழுத்துக்கு வயது 20

“மங்களா பாட்டியின் செவ்வாய் பயணம்” நூல், ஆன்மிகம், அறிவியல், காதல், மனஉறுதி, உழைப்பு, உளவியல், பெண்ணியம், பேராசை, ஒற்றுமை, நாட்டுப்பற்று என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சிறப்பான படைப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

சிறுகதைகளுக்கு இடையிடையே சிறு சிறு துணுக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது ஆசிரியர் ஆழ்ந்து ஆராய்ந்து படிக்கும் பழக்கம் உள்ளவர் என்பதையும் வாசகர்களுக்கு கோடிட்டு காட்டுகிறது.

அவரைப்போலவே அவரது கதையாடலும் கம்பீரமாக நிற்கிறது. சமையலை கடந்து, சமூகம் எனும் சமுத்திரத்தின் கரை தொட்டிருக்கிறார். தொடர்ந்து, கடலில் மூழ்கி முத்தும் எடுக்க வேண்டும். சுருங்க சொல்ல வேண்டுமானால், ஆசிரியர் வசந்தா ராஜமாணிக்கத்தின் வயது 80. ஆனால் அவரது இளமையான எழுத்துக்கு வயது 20.


–ஷீலா பாலச்சந்திரன்


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *