செய்திகள்

எஸ்பிஐ மனு தள்ளுபடி: தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

புதுடெல்லி, மார்ச் 11–

தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட அவகாசம் கோரிய எஸ்.பி.ஐ வங்கியின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. மேலும், தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் எஸ்பிஐ வழங்க வேண்டும், மார்ச் 15க்குள் அந்த விவரங்களை தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

தேர்தல் பத்திரத் திட்டம் சட்டவிரோதமானது, அது தொடர்பாக திருத்தப்பட்ட சட்டங்களும் செல்லாது என்று கூறி, அந்த நடைமுறையை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 15–ந்தேதி உத்தரவிட்டது. மேலும், 2019-ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரம் வழங்கியது தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கு மார்ச் 6ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதனை இந்திய தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் மார்ச் 31–ந்தேதிக்குள் வெளியிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியது. ஆனால், எஸ்பிஐ வங்கி அதற்கு அளிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் விவரங்களை வழங்கவில்லை. மாறாக ஜூன் 10ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வேண்டுகோள் வைத்து மனு அளித்தது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ர ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. எஸ்பிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, ”இத்தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில் அவை ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது எனவே இவற்றை சேகரிப்பதில் சற்று பிரச்சினைகள் இருக்கிறது” என வாதிட்டார்.

என்ன சிரமம் இருக்கிறது?

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், ”தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை அளிப்பதற்கு எஸ்.பி.ஐ. வங்கி அவகாசம் கோருவது ஏன்? 26 நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

24க்கும் குறைவாக அரசியல் கட்சிகள் தான் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றுள்ளன. நாட்டிலேயே பெரிய வங்கியான எஸ்.பி.ஐ.யால் தகவல்களை எடுப்பது கடினமான செயலா? அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்பை மாற்றக்கோருவது ஏன்? உங்களால் முடியாத வேலையை நாங்கள் கொடுக்கவில்லையே? உங்களிடம் இருந்து நேர்மையான செயல்பாட்டை எதிர்பார்க்கிறோம்.

நாடு முழுவதும் பல வங்கிக் கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டாலும் அதன் அனைத்து விவரங்களும் மும்பையில் உள்ள எஸ்பிஐ மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. அப்படி இருக்கும்போது, அந்த தகவல்களை கொடுப்பதில் எஸ்பிஐ வங்கிக்கு என்ன சிரமம் இருக்கப் போகிறது? தேர்தல் பத்திர விவரங்கள் அடங்கிய உறையை பிரிக்க முடியாதா?

இணையதளம் உள்ள இந்த காலகட்டத்தில் தகவலை திரட்டுவது முடியாத காரியமா என்ன?. சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய இந்த தீர்ப்பை ஒரு வங்கியின் மேலாளர் ஒருவர் மேல்முறையீடு செய்து எதிர்க்கிறார் என்றார் இது மிகவும் தீவிரமான விஷயமாகும்.

நடைமுறை பிரச்சினைகள் என்றுக் கூறிக்கொண்டு இருக்காமல் உத்தரவை செயல்படுத்துங்கள். தகவல்களை வெளியிட வேண்டும் என நீதிமன்றம் கேட்கும்போது அதை எஸ்பிஐ வெளியிட்டுதான் ஆக வேண்டும்” எனக்கூறினார்.

மேலும், கால அவகாசம் கோரிய எஸ்பிஐயின் மனுவை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி, தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் எஸ்பிஐ வழங்க வேண்டும் என்றும், கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 15க்குள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அதேபோல் நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த தவறினால், அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *