செய்திகள்

தொகுதி பங்கீடு: பாரதீய ஜனதாவுடன் கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை: அண்ணாமலையுடன் சரத்குமார் சந்திப்பு

சென்னை, மார்ச் 11–

தொகுதிப் பங்கீடு தொடர்பாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சந்தித்து பேசினார்.

ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

பாரதீய ஜனதா தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பாரதீய ஜனதா கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய கல்வி மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த சூழலில், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோர் சென்னைக்கு நேற்று வந்தனர். அவர்களுடன் தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை சென்னை கிண்டியில் தனியார் ஓட்டலில் நடந்தது. இந்த ஆலோசனையில் மீன்வளம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல்கள் குறித்தும், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடுகள் செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

கூட்டணியில் ஓ.பி.எஸ்.

இதற்கிடையே, மத்திய அமைச்சர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு 10.35 மணிக்கு வந்தார். அவருடன் எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் வந்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் குழுவினருடன் பாரதீய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் வி.கே.சிங், கிஷன் ரெட்டி, எல்.முருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது பாரதீய ஜனதாவுடனான ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி அமைப்பது உறுதியானது.

சரத்குமார் சந்திப்பு

இதுவரை அண்ணா தி.மு.க. கூட்டணியில் தேர்தலை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் போட்டியிடுகிறார். பா.ஜ.க.விடமிருந்து சரத்குமார் தரப்பில் கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 2 தொகுதிகளை கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சென்னை கமலாலயத்தில் இன்று சந்தித்து பேசினார். பா.ஜ.க. – சமத்துவ மக்கள் கட்சி இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மேலும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் பா.ஜ.க. குழு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.

தே.மு.தி.க. பேச்சுவார்த்தை

கடந்த 2 வாரமாக அண்ணா தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேச்சு நடத்தி வந்த தே.மு.தி.க., பா.ஜ.க. கூட்டணியில் இணைய உள்ளதாக தெரிகிறது. இன்று மாலை பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர்கள் தே.மு.தி.க. நிர்வாகிகள் சந்தித்து பேசுகின்றனர்.

தேமுதிகவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் உறுதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேமுதிக சேரும் பட்சத்தில் பா.ஜ.க. கூட்டணி பலம் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *