செய்திகள் நாடும் நடப்பும்

உறுப்பு தானத்திற்கு பெருமை சேர்த்து விட்டார் முதல்வர் ஸ்டாலின்


ஆர்.முத்துக்குமார்


காலையில் மகிழ்ச்சியாக வீட்டை விட்டுச் செல்பவர் அன்று மாலையில் சவமாய் மாலையும் கழுத்துமாய் இருப்பது குடும்பத்தாருக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை தரும். அந்நிலையில் சமூகச் சிந்தனை மேலோங்கி பலர் உயிர் காக்க உடல் உறுப்பு தானம் செய்வோரை உலகம் போற்றத்தான் செய்யும்.

உயிரற்றுப் போய்விட்ட உடலுக்கு எந்த வலியும் இருக்காது, ஆனால் அவரது உடல் உறுப்புகளால் பலர் உயிர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்ற நற்செய்தி பின்னர் வாழும் காலம் வரை அவரது குடும்பத்தாருக்கு மிகப் பெரிய ஆறுதலாகவே இருக்கும்.

ஆனால் நம்மிடம் இருக்கும் பல பண்டைய பழக்க வழக்கங்கள் உயிர் பிரிந்த உடலை சவமாய் மதிக்காமல் தெய்வத்தின் திருஉருவாய் மதித்து உரிய பிரியாவிடை வைபவங்களை காரியமாய் செய்து தான் எரித்து விடுகிறோம். இதனால் உயிர் வாழ்ந்த அவரது வாழ்க்கை இறுதியில் கருகி மண்ணோடு மண்ணாய் போய் விடுவது தான் உண்மை.

இம்மன நிலை மாற உயிருடன் இருக்கும்போதே ஒருவர் தன் உடல் உறுப்புகளையும் முழு உடலையும் தானம் செய்யும் மனதுடன் வாழ்வது தான் சமூக சிந்தனையில் மாற்றம் வரும்.

சமீபத்தில் தேனியில் கணவர் மூளை செயல் இழந்து மூளைச் சாவு எய்தி விட்டார் என கேட்டு அதிர்ந்த அவரது துணைவியார் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்து விடுங்கள் என்று அந்த சோகச் சூழல் நிலையிலும் மனம் உவந்து தான நடவடிக்கைக்கு ஒப்புதல் தந்து தானத்தை செய்திருப்பது பாராட்டப்பட வேண்டிய நற்செயலாகும்.

இறந்தவர் வடிவேலு ஓர் அரசு அதிகாரி, ஆனால் ஹெல்மெட் அனிந்தும் பைக்கில் வீடு திரும்பும் முன் இரவு நேரத்தில் தறிக்கெட்டு திரிந்து கொண்டு இருந்த மாடுகள் அவருக்கு எமனாய் மாற ஹெல்மெட்டில் பெல்ட்டை போடாததால் அது தலைப்பகுதியில் பாதிக்க, தீவீர சிகிச்சையால் உயிர் பிழைத்து விட்டாலும் அவரது மூளை முற்றிலும் செயலிழந்து விட்டது.

இந்நிலையில் அவர் சவமாய் ஒப்புக்கு வாழக்கூடாது என்று உணர்ந்து அவரது மனைவி பட்டுலெட்சுமி தனது 10 வயது மகன் மற்றும் ஐந்து வயதே ஆன மகள் மற்றும் வடிவேலுவின் தாயார் உரிய பத்திரங்களில் மனநிறைவோடு ஒப்புதல் கையெழுத்திட்டு யார் என்றே அவர்களுக்கு தெரியாது. ஆறுபேரின் தலையெழுத்தை மாற்றி அவர்கள் உயரைக் காத்து உடல் உறுப்பு தானத்தை செய்து அவருக்கு கிட்டதட்ட யுத்தக் களத்தில் வீர மரணம் செய்த கண்ணியத்தை தந்து விடை கொடுத்து அனுப்பியுள்ளார்.

அவர் உயிர் மண்ணில் இல்லை; ஆனால் அவரது கண்கள், சிறுநீரகம், தோல், கல்லீரல் இன்றும் நம்மோடு தான் இருக்கிறது என்ற ஆறுதலுடன் வாழ்கிறார்கள் அவரது குடும்பத்தார்கள்.

கடந்த மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் இப்படி உடல் உறுப்பு தானம் செய்பவரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தார் அல்லவா? அதன்படி

உறுப்பு தானம் செய்தவர் உடலுக்கு அரசு மரியாதை உரிய வகையில் செலுத்தப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டம் சின்னமனூர் கிராமமே வியந்து பாராட்டும் வகையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அரசு மருத்துவர்கள் நேரில் வந்து அவரது உடலுக்கு மாலை மரியாதை செய்து குடும்பத்தாருக்கும் ஆறுதலும் தந்து செய்று இருக்கிறார்கள்.

உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு. தமிழ்நாடு அரசு உடல் உறுப்பு தானத்துக்காகத் தனி நாளாக செப்டம்பர் 23 ஐ அறிவித்து முன்னுதாரணமாகச் செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. அரசின் புதிய அறிவிப்பு உறுப்பு தானத்தை மேலும் ஊக்குவிப்பதாக அமையும்.

இதன் மூலம் உறுப்பு தானத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பெருமை சேர்த்து

விட்டது போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.

தமிழ்நாட்டில் 6,179 பேர் மாற்று சிறுநீரகத்துக்காகவும் 449 பேர் கல்லீரலுக்காகவும் 72 பேர் இருதயத்துக்காகவும் 24 பேர் நுரையீரலுக்காகவும் காத்திருக்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் மாற்று உடல் உறுப்புக்காகக் காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கணையம், கைகள், எலும்புகள் போன்ற உடல் உறுப்புகள் தேவைப்படுவோரும் உள்ளனர்.

தமிழக அரசு மேலும் சிந்திக்க வேண்டிய ஒரு அம்சம் முழு உடல் தானம் செய்ய முன் வருபவர்கள் பற்றியதாகும்.

கடந்த ஆண்டு 2022 ஆகஸ்ட் –9 அன்று மதியம் எனது தந்தையார் எம்.ராஜமாணிக்கம் இயற்கை மரணம் எய்தினார். அவர் பல ஆண்டுகளாகவே தன் உடலைத் தானம் செய்யப்பட வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியும் வந்தார். அதற்காக ஆரோக்கியமான வாழ்வியலை அரவணைத்தும் அவர் வாழ்ந்து வந்தார். அனுதினமும் காலையில் உடற்பயிற்சிக்காக தனது 83 வது வயது வரை படுதீவிரமாக ஈடுபட்டும் வந்தார்.

ஆனால் பின்னர் வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாது ‘கட்டில்’ குழந்தையாய் மாறினாலும் முடிந்த வரையில் தன் உடல் ஆரோக்கியத்திற்கு இறுதி வரை முழு ஒத்துழைப்பு தந்தவர். மறைந்த நாளில் அடுத்த மூன்று மணி நேரத்தில் முதலில் டாக்டர். அகர்வால் கண் மையத்தில் கண் தானத்திற்கு உதவி கோர மறு நிமிடமே ஒரு மருத்துவர் குழுமம் வந்து கண்களை அறுவை செய்து எடுத்துச் சென்று அன்று இரவே பயனாளிக்கு கண் பார்வை பெற வைத்துள்ளனர்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவர் முழு உடலையும் நானும் எனது இளைய சகோதரரும் மற்றும் அம்மாவும் சில மிக நெருங்கிய சொந்தங்கள், நட்பு வட்டமும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவரது சவ உடலை தானமாக கொடுத்து விட்டு உரிய ரசீதுகளையும் வாங்கிக் கொண்டோம்.

பிறகு அவரது மரண சான்றிதழை மாநகராட்சி எங்களுக்கு தர சுமார் 45 நாட்கள் ஆகிவிட்டது.

அத்தனை நாட்களுக்கு அவரது வங்கிக் கணக்கும் இறந்த பிறகு செய்ய வேண்டிய பணிகளும் கால தாலதாமதம் ஆகியது.

அரசு தரப்பில் இவரது மரணம் இயற்கையாக நடந்துள்ளதா? வேறு கொடூர சம்பவமா? என்பதை ஆராய்ந்த பிறகு தான் இது போன்ற சான்றிதழ் தரப்படவேண்டும் என்பது புரிகிறது.

ஆனால் முழு உடல் தானம் மருத்துவ மாணவர்களுக்கும் மற்ற ஆய்வாளர்களுக்கும் மிக தேவையான ஒன்று என்பதால் அது போன்ற ஆய்வுகளை 10 நாட்களில் முடித்து அச்சான்றிதழை அரசு இறந்தவரின் குடும்பத்துக்கு அரசு மரியாதையுடன் தர உத்தரவு பிறப்பிக்கலாம் அல்லவா?

முழு உடல் தானம் பலருக்கு பிடிக்காத ஒன்றுதான். ஆனால் நம் மருத்துவ மாணவர்களுக்கு போதிய உடல் உறுப்பு படிப்பிற்கு கிடைப்பதில்லையாம், ஆகவே இனியாவது உயிருடன் இருக்கும்போதே தனது ஒப்புதலை தந்து விடும் வாய்ப்பைத் தர வேண்டும் ; அதிலும் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக இருக்க வேண்டும்.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *