செய்திகள் நாடும் நடப்பும்

70,000 புள்ளிகளை தாண்டிய பங்கு சந்தை : புது உச்சத்தில் பொருளாதாரம்

2023ல் ரூ.45,000 கோடி புது பங்கு வெளியீடுகள்


ஆர். முத்துக்குமார்


டிசம்பர் 11, 2023 பல காரணங்களுக்கு வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தினமாக இருக்கிறது. பங்கு முதலீட்டாளர்கள் மனம் மகிழ்ந்த 70,000 புள்ளிகள் என்ற இலக்கை பங்குச் சந்தை தாண்டிய நாள் ஆகும்.

பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவோரை ‘சூதாட்டத்தில் ஈடுபடுவோர்’ என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டு வந்தனர். இன்றும் ஏற்றமும் இறக்கங்களும் கொண்ட பங்குச் சந்தை ஓரளவு சூதாட்டத்தினை நினைவுப்படுத்தி கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் சாமானிய முதலீட்டாளர்கள் முதல் கார்ப்பரேட் முதலீட்டாளர்கள் வரை பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருவது ஓரு நிலையான வருவாய் பெற நம்பிக்கையுடன் செயல்பட்டு வருவதையும் பார்க்க முடிகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்ப வசதிகளால் உடனுக்குடன் பங்கு வர்த்தகம், உடனுக்குடன் நமது வங்கி கணக்கில் வர்த்தகத்திற்கு பிந்தைய தொகையை தெரிந்து கொள்ளவும் முடிகிறது.

அதாவது குறிப்பிட்ட நிமிடத்தில் விற்றால் நமது கையை கடிக்காது என்ற உத்திவாதம் தரும் பங்குகளை நினைத்த நொடியில் விற்கவோ, வாங்கவோ முடிகிறது.

பங்கு வர்த்தகத்தில் தனிநபர் நேரடியாக நுழையவே முடியாது. அதற்கு பங்கு தரகர்கள் இருக்கிறார்கள்.

இந்த தரகர்களும் நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு பங்கு சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபடுகிறார்கள்.

அதிகப்படியான பங்கு பரிவர்த்தனைகள் வங்கிகளும் தரகர்களும் உருவாக்கியுள்ள பங்கு வர்த்தக சாப்ட்வேர்கள் வழியாகவே நடப்பதை பார்க்கிறோம். உலகெங்கும் சர்வதேச முதலீட்டாளர்கள் பெருவாரியாக இதுபோன்ற வர்த்தக ஆப்களின் உதவியுடன் தான் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நம் நாட்டிலும் பங்கு வர்த்தகம் கடந்த 15 ஆண்டுகளில் அதிகரித்து வந்தாலும் கொரோனா ஊரடங்கு சமயத்தில் பங்குகளின் விலை மிகப்பெரிய சரிவை கண்ட நாளில் பல புதுப்புது முதலீட்டாளர்கள் வீட்டில் இருந்தபடி கணினி உதவியுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.

அன்று முதலே பங்குச் சந்தையில் வர்த்தகம் பல மடங்கு உயர்ந்தது. 40,000 புள்ளிகளையும் விட குறைந்திருந்த பங்கு மார்க்கெட் அவ்வாண்டு முதல் ஏற்றம் காண துவங்கியது. பல புது முதலீட்டாளர்கள் ரிஸ்க் எடுக்கத் தயங்கினாலும் மியூட்சுவல் பண்டுகளின் ஸ்திர தன்மையையும் ஓரளவு உறுதியான லாபத்தையும் தரும் வல்லமை பெற்றிருப்பதை உணர்ந்து அதில் முதலீடுகள் செய்யத் துவங்கினர்.

மியூட்சுவல் பண்டுகள் பல புதுப்புது வெளியீடுகள் வருவதும் அதிகரிக்க பங்கு வர்த்தகம் மேலும் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

2021ல் பங்கு குறியீடு புது உச்சமாக 60,000 புள்ளிகளை தாண்டிய தருணத்தில் மீண்டும் கொரோன 2 ம் அலை காரணமாக பல்வேறு துறைகளில் வர்த்தகம் தேக்கமடைந்தது.

2022 துவக்கத்தில் பங்கு சந்தை 65,000 புள்ளிகளை தாண்டுமா? என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த கட்டத்தில் உக்ரைனில் யுத்த காட்சிகள் துவங்கியது.

அமெரிக்காவின் உத்தரவின்படி நாட்டோ அணியும் ஐரோப்பிய யூனியனும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது. வங்கி பரிவர்த்தனையை முற்றிலும் தடை விதித்து விட்டதால் ரஷ்யா உலகப் பொருளாதார விவகாரங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டது.

மேலும் சரக்கு கப்பல் வழித்தடங்களில் ரஷ்யாவின் சரக்குகள் தடை போடப்பட்டது. இதைச் சமாளிக்க ரஷ்யாவும் பல மாற்று உக்திகளை கையாண்டு உள்நாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டது.

ஆனால் உலக வர்த்தகம் பாதித்ததால் மீண்டும் பங்கு மார்க்கெட் பெரும் சரிவை கண்டது. மீண்டும் 55,000 புள்ளிகளையும் விட குறைந்தது?

ஆனால் அமெரிக்காவின் கெடுபிடி பொருளாதாரத் தடைகளுக்கு ஈடு கொடுக்க ரஷ்யாவுக்கு சீனா, இந்தியா, வளைகுடா நாடுகள் முன்வந்து விட்டதால் மீண்டும் வர்த்தக சமநிலை நிலவ ஆரம்பித்தது.

2022 இறுதியில் மீண்டும் 60,000 புள்ளிகளை தாண்டிய பங்கு குறியீடு நிமிர்ந்த நடைபோட்டு விலைவில் 70,000 புள்ளிகளை எட்டும் என்று எதிர்பார்க்கையில் இவ்வாண்டு பிப்ரவரி துவக்கத்தில் அதானி குழுமங்களின் மீது சர்வதேச மீடியா நடத்திய தாக்குதலில் அதானி நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியைக் காண இந்திய பங்குச் சந்தையில் பயத்தில் நடுங்கிய நிலையில் மீண்டும் ஒரு சரிவைக் கண்டது.

ஆனால் அதானி நிறுவனத்தின் மீது வாரி தூற்றப்பட்ட புகார்கள் வெறும் பித்தலாட்டம் என்பதை உணர ஆரம்பித்த நாள் முதலாய் பங்குகளின் விலைகள் சீராக அதிகரிக்கத் துவங்கியது.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் வரை இந்தியா ஜி20 உலக பணக்கார நாடுகளின் கூட்டமைப்பின் தலைமையில் இருந்ததால் எடுத்த பல சிறப்பான முடிவுகள் உலகத் தலைவர்களின் பாராட்டை வெகுவாகவே பெற்றது.

பிரதமர் மோடியின் நட்பு பாராட்டிய பல நாடுகளின் தலைவர்கள் பிரதமர் மோடி ஏற்படுத்தி வரும் பொருளாதாரப் புரட்சியின் பயனாக இந்தியா கண்டு வரும் வளர்ச்சியின் வேகத்தை பார்த்து வியந்து பாராட்ட ஆரம்பித்ததுடன் தங்கள் நாட்டு முதலீட்டாளர்களையும் இந்தியாவின் வளர்ச்சி சாதனையில் பங்கேற்க தவறாதீர் என ஆலோசனைகளையும் தந்து விட்டது.

அதன் பயனாக அந்நிய செலாவணி வரத்து மிகப்பெரிய வளர்ச்சியை காண முடிந்தது.

கடந்த 10 ஆண்டுகளாக நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாக நல்லாட்சி தொடர்வதுடன் எடுத்த பல முடிவுகள் திறம்பட உரிய வகையில் அமுல் படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவிற்கு வெற்றி குவிந்தது. அது அக்கட்சிக்கும் மிகப்பெரிய ஊக்க டானிக்காக இருக்கிறது.

அடுத்த 5 மாதங்களில் மீண்டும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் இத்தருவாயில் ஆளும் கட்சிக்கு எதிராக அதிருப்தி வாக்குகள் அதிகரித்து காங்கிரஸ் கட்சிக்கு அது சாதகமாக அமையுமோ? என்ற அச்சக் கேள்விக்கு விடையாய் பாரதீய ஜனதா மகத்தான வெற்றியை பெற்று 3வது முறையாக தொடர்ந்து வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து வலுவான சவாலாக மாறும் எண்ணத்துடன் செயல்பட ஆரம்பித்து வந்தாலும் தற்சமயம் பிரதமர் மோடியின் தனிப்பட்ட செல்வாக்கை தகர்த்து எறியும் ஓரு பிரதமர் முகத்தை எடுத்து முன் வைத்து பிரச்சாரம் செய்ய முடியாத நிலையில் எதிர்க்கட்சிகள் வலுவிழந்து இருப்பதை காண்கிறோம்.

ஆக 2023 நிறைவு பெற 20 நாட்களே இருக்கும் நிலையில் ஓரளவு வேளாண் தேவைக்கென பருவ மழை பொழிவும் நல்ல அறுவடையை உறுதியாக எதிர்பார்க்கும் செழிப்பும் இருக்கிறது.

இப்படி பல கோணங்களில் இந்திய பங்கு மார்க்கெட் புதிய நம்பிக்கையுடன் பரபரப்பாக இயங்கி கொண்டிருப்பதால் பங்கு குறியீடு 70,000 என்ற சாதனையை எட்டி விட்டது.

இதே நல்லெண்ண அறிகுறிகள் தொடர்ந்தால் அடுத்த சில மாதங்களில் 75,000 புள்ளிகள் என்ற உச்சத்தை தொட புதிய வேகத்துடன் பங்கு முதலீட்டாளர்கள் செயல்பட ஆரம்பித்துள்ளனர்.

இது புதிய உச்சமாக இருக்கிறதே? புதிய பங்கு முதலீட்டாளர்கள் நுழைந்தால் லாபம் பெற முடியுமா? இந்த கேள்விக்கான விடை, 2023ல் புதிய பங்கு வெளியீடுகளின் விற்பனை புது சாதனை படைத்திருப்பதை மறந்து விடக் கூடாது.

நடப்பு ஆண்டில் ஐபிஓக்கள், அதாவது புதிய பங்கு வெளியீடுகள் ரூ.41,000 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. அடுத்த 10 நாட்களில் ரூ.4,000 கோடி அளவுக்கு புது வெளியீடுகள் வரத் தயாராக இருக்கிறது.

ஆக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் அளவு கோலாக இருக்கும் பங்கு குறியீடு மேல்நோக்கி நகர்வதுடன் பங்கு முதலீட்டாளர்களுக்கும் லாபகரமாக இயங்க களம் தயாராகவே இருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *