செய்திகள்

50 நாட்களுக்கு பின்னர் பழனி கோவிலில் மீண்டும் ரோப்கார் சேவை

பழனி, அக்.8–

பழனி கோவிலில் 50 நாட்களுக்கு பின்னர் மீண்டும் ரோப்கார் சேவை இன்று துவங்கியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும், யானைப்பாதை வழியாகவும் ரோப்கார், மின் இழுவை ரெயில் மூலமாக கோவிலுக்கு செல்கின்றனர்.

ரோப்கார் கடந்த ஆகஸ்டு மாதம் 19–-ந் தேதி பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. ரோப்கார் பெட்டி, உபகரணங்கள், சாப்ட் எந்திரம் ஆகியவை கழற்றப்பட்டு சீரமைக்கும் பணி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் எடைக்கற்கள் மற்றும் பஞ்சாமிர்த பெட்டிகள் வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. சென்னை ஐ.ஐ.டி வல்லுநர்குழு ரோப்காரை இயக்கி ஆய்வு செய்தனர். அதில் திருப்தி ஏற்பட்டதை தொடர்ந்து இன்றுமுதல் ரோப்கார் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று அதிகாலை ரோப்கார் பெட்டிகளுக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 50 நாட்களுக்கு பின்னர் ரோப்கார் மீண்டும் இயங்கியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். நீண்டநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனால் மலைக்கோவில், அடிவாரம், கிரிவீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சீரமைத்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *