சிபிஐ அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
மும்பை, டிச. 26–
ஐசிஐசிஐ வங்கி மோசடி வழக்கில் வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் தூத்தை மத்திய புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.
வீடியோகான் குழும நிறுவனங்களுக்கு வங்கி வழங்கிய கடன் மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பான வழக்கில், ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும், எம்டியுமான சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோர் சிபிஐ அமைப்பால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சில நாட்களுக்குப் பிறகு ஐசிஐசிஐ வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில், வீடியோகான் நிறுவன தலைவர் வேணுகோபால் கைது நடந்துள்ளது.
கடன் வழங்கியதில் மோசடி
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள், வங்கி ஒழுங்குமுறை சட்டம் மற்றும் வங்கியின் கடன் கொள்கையை மீறி வீடியோகான் குழும நிறுவனங்களுக்கு ஐசிஐசிஐ வங்கி ரூ.3,250 கோடி மதிப்பிலான கடன் வசதிகளை வழங்கியதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. வீடியோகான் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் தூத்திடம் இருந்து, பெற்றதாகக் கூறப்படும் 64 கோடி ரூபாயை சந்தா கோச்சார் தனது சொந்த உபயோகத்திற்காக மாற்றியதாகவும் சிபிஐ கூறியுள்ளது.
வீடியோகான் குழுமத்தின் கடன் திட்டத்தை சந்தா கோச்சார் கையாண்ட காலகட்டத்தில், வீடியோகான் மற்றும் தீபக் கோச்சார் இடையே வழக்கு நிலுவையில் இருந்த ஒரு குடியிருப்பில் சந்தா வசித்தார் என்று சிபிஐ கூறி உள்ளது. 2016 ஆம் ஆண்டில் 5.25 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த குடியிருப்பை தீபக் கோச்சாரின் குடும்ப அறக்கட்டளைக்கு 11 லட்ச ரூபாய்க்கு மாற்றப்பட்டது எனவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.