சிறுகதை

வடை ரூபாய் 5 – ராஜா செல்லமுத்து

பிரதான சாலையில் இயங்கிக் கொண்டிருந்த அந்த டீ ஸ்டால் எப்போதும் வியாபாரம் களைகட்டிக்கொண்டிருக்கும்..

உள்ளே வெளியே என்று ஆட்கள் குவிந்த வண்ணம் இருப்பார்கள்.

காரணம் வீதியின் திருப்பத்தில் முதல் கடை என்பதால் நான்கு புறமும் இருந்து வரும் ஆட்கள் அந்த இடத்தில் நின்று வடை காபி டீ சாப்பிட்டு விட்டு செல்வது வழக்கம்.

முதலில் சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட கடை இப்போது செழித்து விளங்கியது .

எல்லோரும் மாடி கட்டி வசதி வாய்ப்போடு இருப்பார்கள் என்று உலக நடைமுறையில் கேள்விப்பட்டிருக்கிறோம்.

அந்த டீ ஸ்டாலின் உரிமையாளர் இருக்கும் இடத்திற்கு கீழே அண்டர் கிரவுண்டில் குடைந்து குடவரைக் கோயில் போல கீழே ஹோட்டல் நடத்திக்கொண்டிருந்தார்.

வரும் ஆட்கள் எல்லாம் ஹோட்டல் எங்கே என்று தேடி பின் அண்டர் கிரவுண்டில் இருக்கிறது என்று சொல்ல படிகளில் இறங்கி போய் சாப்பிட்டுவிட்டு வருவார்கள்.

முதலில் பணத்தை கல்லாவில் வாங்கிப் போடும் பழக்கம் உடைய அந்த உரிமையாளர் இப்போது கூகுள் பே, போன் பே என்று விஞ்ஞான உலகத்திலும் அடியெடுத்து வைத்திருந்தார் .

அந்த கடைக்கு வெங்கடேஸ்வரன், ராமச்சந்திரன் இரு நண்பர்களும் அடிக்கடி போவார்கள் ..

அடிக்கடி சாப்பிடுவார்கள் வடை, காபி என்று சாப்பிட்டுக்கொண்டு வருவார்கள்.

எப்பயாவது ஒருமுறை மதிய உணவு டிபன் என்று சாப்பிடுவார்கள்.

இப்படி போய்க்கொண்டிருக்கும் அவர்களது வியாபாரத்தில் ஒருநாள் ராமச்சந்திரனும் வெங்கடேசன் இரவு 7 மணிக்கு மேலே டீ குடிக்கலாம் என்று சென்றார்கள்.

ஏழு மணி ஆகிவிட்டது என்ற காரணத்திற்காக ராமச்சந்திரன் டீக்கு பதிலாக டிபன் சாப்பிடலாம் என்று நினைத்தான்.

அண்டர் கிரவுண்டில் இறங்கிப்போய் மூன்று இட்டிலியும் சட்னி-சாம்பார் சாப்பிட்டவர் உதட்டில் வடை வேண்டும் என்று எச்சில் நாக்கு கூறியது

மேலே இருந்து கடைக்காரரிடம் ஒரு வடை வேண்டும் என்று கேட்க

சிறிது நேரத்திற்கெல்லாம் ராமச்சந்திரன் இலைக்கு வடை வந்து சேர்ந்தது.

மூன்று இட்லி வடை சட்னி சாம்பார் என்று சாப்பிட்டு முடித்துவிட்டு மேலேறினான்.

பில் என்று கேட்க

பரவாயில்ல . என்ன சாப்பிட்டீங்க சொல்லுங்க? என்றான் கடைக்காரன்.

3 இட்லி ஒரு வடை என்று சொன்னபோது ,ஐம்பத்தி ஒரு ரூபாய் விலை என்று சொன்னார் கடைக்காரர் .

ஐம்பத்து ஒரு ரூபாயை கொடுத்த ராமச்சந்திரனுக்கு ஐம்பத்து ஒரு ரூபாய்க்கான கணக்கு தென்படவில்லை. தெரியவில்லை.

எந்த வகையில் 51 ரூபாய் கணக்கு ஒரு இட்லி 15 ரூபாய் என்றார் 3 இட்லிக்கு 45 ரூபாய் .மீதமிருக்கும் ஆறு ரூபாய் வடை இல்லை. வடைக்கு பத்து ரூபாய் ஒரு இட்லி 10 ரூபாய் என்றால் 3 இட்லிக்கு 30 ரூபாய். வடை இருபத்தி ஒரு ரூபாய் என்பது சாத்தியமில்லை .

எப்படி இந்த கணக்கு? என்று குழம்பிக் கொண்டே இருந்த ராமச்சந்திரன் கடைக்காரரிடம் கேட்டான்.

ஒரு இட்லி எவ்வளவு?

என்றபோது 12 ரூபாய் என்றான் கடைக்காரன் .

அப்படி என்றால் மூன்று இட்டிலிக்கு முப்பத்தி ஆறு ரூபாய். ஒரு வடை பத்து ரூபாய் என்றால் 46 தானே வரவேண்டும் .எப்படி ஐம்பத்து ஒன்று வந்தது ?என்று கேட்டான்.

ஹலோ சார் ,அண்டர் கிரவுண்டில் இருக்கிற ஹோட்டலுக்கு போறதுக்கு முன்வரைக்கும் வடையோட விலை பத்து ரூபா. அண்டர்கிரவுண்ட் கீழே உள்ள வட போனா அதனுடைய விலை 15 ரூபாய் என்றான்.

என்னய்யா இது .வம்பா போச்சு டீக்கடையில் சாப்பிட்டா வட பத்து ரூபா .அதையே ஹோட்டலில் சாப்பிட்டா 15 ரூபாயா ?இது என்ன அநியாயம் ?என்று கேட்க

ஆமா சார் .நீங்க கீழே கொண்டுபோய் சட்னி-சாம்பார் அது இதுன்னு சாப்பிடுறீங்க. அதுக்கு பில்லு போட வேண்டாமா? என்றவன் ,

டீக் கடைக்கும் ஹோட்டலுக்குமான ஒரு கோட்டை கிழித்தான்.

இந்த கோடு வரைக்கும் தான் சார் இந்த வடைக்கு பத்து ரூபா. இந்த கோட்டுக்கு வெளியே அண்டர்கிரவுண்ட் ல இருக்கிற ஹோட்டலுக்கு போனா, இந்த வடையோட விலை 15 ரூபாய் என்றான்.

ராமச்சந்திரனுக்கு தூக்கிவாரிபோட்டது .

என்ன இது அநியாயமா இருக்கு? இந்த கோட்டுக்கு வெளியிலிருந்து நான் ஐம்பது ரூபாய் கொடுத்தா அது நூறு ரூபா ஆகுமா? இல்ல இந்த கோட்டுக்கு மேலே நான் சாப்பிட்டா பத்து ரூபாய் இட்லியே நீங்க அஞ்சு ரூபாய்க்கு தருவீங்களா? என்று பேசிய போது

உங்ககிட்ட விதண்டாவாதம் எல்லாம் பேச முடியாது . அண்டர் கிரவுண்டில் போய் சாப்பிட்டதற்கு வடை ரூ 15 தான் என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார் கடைக்காரர்.

அது என்னவோ நமக்கு அஞ்சு ரூபா இன்னைக்கு லாஸ் என்றபடியே ராமச்சந்திரனும் வெங்கடேசனும் அந்த ஹோட்டலில் இருந்து நடையைக்கட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.