செய்திகள் வாழ்வியல்

‘பொருத்தமான’ கல்யாணப் பரிசு; மழலைகள் வளர்ப்புக்கு ‘விழி திறக்கும்’ நல்வழிகாட்டி!

தலைப்பு: ‘குழந்தைகளை வளர்க்காதீர்கள், வளர விடுங்கள்’

ஆசிரியர் : எஸ்.குருபாதம்.

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,

41பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர் சென்னை–600 095.

044–26251568, 262558410

பக்கங்கள் 500, விலை ரூ.450.

* * *

‘‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே… அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே…!’’

இது பிரபலமான திரைப்பட பாடல் வரிகள் (எம்ஜிஆர் படம்). இதில் ஒரு சேர்க்கை–

அதாவது– அன்னை மட்டுமல்ல, பெற்றோர்கள் வளர்ப்பினிலே… என்பதை பசுமரத்தாணி போல் பதியவைத்திருக்கிறார் எஸ்.குருபாதம், தனது ‘குழந்தைகளை வளர்க்காதீர்கள், வளர விடுங்கள்…!’ என்னும் தலைப்பிலான புத்தகத்தில்.

எடுத்தோம்– படித்தோம்– முடித்தோம்… என்ற நிலையிலான புத்தகமல்ல, இது. அமைதிச் சூழலில் படிக்க வேண்டும். அதுவும் ஆழமாய் ஊன்றிப் படிக்க வேண்டும். படித்ததை மீண்டும் மீண்டும் அசை போட்டு விட்டு, மனத் திரையில் ஓட விட்டுத் தான் அடுத்த அத்தியாயத்துக்குள்ளேயே போக வேண்டும். முழுப் புத்தகத்தையும் படித்து முடித்து விட்டு சும்மா இருந்து விடக்கூடாது.

புத்தகத்தின் முழு சாராம்சத்தையும் உள் வாங்கி, குடும்பத்தில் உள்ளவர்களிடம் – உறவினர்களிடம் – அலுவலக சக ஊழியர்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும். அந்த ஒரு முயற்சி– எத்தனையெத்தனை பேரின் குழந்தைகளின் நல்வாழ்வுக்கு நல்லுரமாகும் தெரியுமா? நல்லுறவு இறுகும் புரியுமா? (ஊதுகிற சங்கை ஊதிவிடுங்களேன்…!)

சிறு குழந்தைப் பருவம், சிறு பிராயத்தில் பெற்ற அறிவு, தகவல்கள், சிறு வயதில் ஏற்பட்ட அனுபவங்கள் போன்றவை வாழ்வில் பிரதிபலிக்கும் என்பதால் குழந்தைகளின் ஆரம்பக்கால மூளை வளர்ச்சி, சிறு பருவச் செயல்கள், மன வளர்ச்சி, புத்திக்கூர்மை போன்றவைகளை விளக்க பல உளவியல் நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் (சு)வாசித்திருக்கிறார். குழந்தைப் பருவத்திலும், சிறு பிராயத்திலும் மூளையில் பதிந்தது– ஒருவரது வாழ்வில் பிரதான பங்கு வகிப்பதால் ஒருவர் இருக்கும் நிலைக்கும், அவரது உள்ளுணர்வுக்கும் குழந்தைப் பிராயமே முக்கியமானது என்பது தெளிவாகின்றது.

நூலாசிரியர் தான் பார்த்த, சந்தித்த பல குழந்தைகள், சிறு பிள்ளைகள், வாலிபர்கள், முதுமைப் பருவத்தினர் எனப் பலதரப்பட்டவர்களை அவருக்குள் இருக்கும் அவரது மன ஆய்வுக் கூடத்தில் விருந்தினராக ஏற்றி இருக்கிறார். இப்படிப் பார்த்து படித்து கேட்டறிந்திருக்கும் அனுபவங்களின் முதிர்ச்சியில் அருமையான உளவியல் நூலை பிரசவித்திருக்கிறார் எஸ்.குருபாதம்.

‘‘குழந்தை பிறந்த நாளில் இருந்து குழந்தையுடன் அன்பாகக் கதையுங்கள் (பேசுங்கள்), பாடுங்கள் தன்னம்பிக்கை முயற்சி நிரம்பியக் கதைகளை வாசியுங்கள், பயமற்ற அன்பான –ஆதரவான சூழலையும் நிரந்தரமாக அமையுங்கள், வளர வளர அறிவுப் பூர்வமான காரணங்களுடன் விஷயங்களை விளக்கி வாருங்கள். குழந்தை அறிவுப் பூர்வமாக மலரும்…!’’

என்று நம்பிக்கையை விதைக்க, எஸ்.குருபாதம் வடித்திருக்கும் உன்னத நூல்– ‘குழந்தைகளை வளர்க்கதீர்கள், வளர விடுங்கள்!’ (பல்கலைக்கழகத்திலிருந்து டாக்டர் பட்டம் பெற எம்.பில். மாணவன் தாக்கல் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைப் போல…இந்நூர்)

* * *

* அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியாக (1861–1865) இருந்த ஆப்ரகாம் லிங்கன், சிறுவனாக இருந்த தன் மகனுக்குப் பள்ளியில் அதிக முன்னுரிமை கொடுப்பதைக் கவனித்ததும், பள்ளி நிர்வாகத்துக்கு எழுதிய கடிதம்– அருமையான நுழைவாயில், புத்தகம் வாசிப்பை தூண்டும்!

* அன்புள்ள அம்மா, அப்பா… என்று அழைத்து, ‘கருப்பையிலிருந்து ஒரு சிசுவின் குரல்’ 2ம் அத்தியாயம், விறுவிறுப்பைக் கூட்டும்!

* * *

55 அத்தியாயங்கள், 4 பாகங்கள்; பெற்ற குழந்தைகளை வளர்ப்பதெப்படி? என்று பல அரிய கருத்துக்களை சொல்லியிருக்கும் நூலாசிரியர், வியப்பூட்டும் தகவல்களையும் தந்திருப்பது தனிச் சிறப்பு.

உயிரியல் விஞ்ஞானத்தின் உச்சமான கண்டுபிடிப்புகளையும், உளவியல் சார்ந்த கருத்துக்களையும், மெய்யியலில் முகிழ்த்தெழுந்த தத்துவங்களையும், வாழ்க்கையின் அனுபவங்களில் திளைத்தெறிந்த உதாரணங்களையும் ஆசிரியர் காட்டாறு கரை புரண்டு ஓடுவது போல் நூல் முழுவதும் பரவ விட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் உள மருத்துவ நிபுணர் டாக்டர் சா.சியோகன் முன்மொழிந்திருப்பதை நானும் வழிமொழிவது இந்நூலுக்கு ஆரோக்கியம், தனி அழகு.

எதிர்காலத்தில் பிள்ளைகள் நல்ல சிந்தனையாளர்களாக வரவேண்டும்; நல்ல முடிவெடுப்பாளர்களாக மாற வேண்டும்; உணர்வு ரீதியில் மகிழ்வானவர்களாக இருக்க வேண்டும்; விவேகமானவர்களாக வளர வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக உலகளவில் சிறந்த குடிமகனாக – மனித நேயப் பண்பாளனாக மலர வேண்டும் என்பது நம் ஒவ்வொருவரின் எதிர்ப்பார்ப்பு.

குழந்தைகள் உலகம், சுயமரியாதை, சுயமதிப்பு தன்மான உணர்வு, மனித விழுமியங்கள், உன்னத விழுமியங்கள் மனதில் பதியட்டும், சிறந்த உலகப் பிரஜைகளாக மலர்வார்கள் – என்று 4 பாகங்கள். ஒவ்வொரு அத்தியாயத்திலும் அழுத்தந்திருத்தமான பார்வை, அணுகுமுறை, குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் உள் மனசில் ஆழ இறங்கும் விதத்தில் அடுக்கடுக்கான அறிவுரைகள், உபதேச மொழிகள்: படிக்கிற ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம் பெறும் விஷயங்களைபடித்த பின் – நாம் எப்படி? நம் குழந்தைகள் எப்படி? –என்று அடிக்கொரு தரம் சுயபரிசோதனை செய்து கொள்ளவைத்திருக்கும் அறிவார்ந்த எழுத்துக்கள்.

‘‘குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள்

மழலைச் சொல் கேளாதவர்…’’

இது திருக்குறள்.

அன்பு மழலைகள் தவழும் வீட்டுக்கும், இல்லற வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும் புது மணத் தம்பதிகளுக்கும் அவசியம் பரிசாக அளிக்க (மொய்ப் பணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு) முழுத் தகுதி பெற்றிருக்கும் அருமையான புத்தகம்!

–வீ.ராம்ஜீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *