நாடும் நடப்பும்

நாளை தாக்கல் செய்யும் தமிழக பட்ஜெட்: வாகன உற்பத்தி வளர்ச்சிக்கு ஸ்டாலின் சலுகைகள் உண்டா?


ஆர்.முத்துக்குமார்


தமிழகம் வாகன உற்பத்தி, தோல் பதனிடல், ரசாயன தயாரிப்பு, ஐடி சேவை துறைகளில் முன்னிலையில் இருப்பதை அறிவோம். நான்கு சர்வதேச விமான நிலையங்கள், நான்கு துறைமுகங்கள் மற்றும் நாட்டின் அனைத்து பகுதிகளையும் சென்றடைய ரெயில் தடம் கொண்ட மாநிலமாக இருப்பதால் எல்லா தரப்பினரும் இங்கு வந்து வர்த்தகம் மேற்கொள்வது எளிதாகவே இருக்கிறது.

ஆனால் நாடெங்கும் வாகன உற்பத்தி துறையில் இருக்கும் தேக்கம் அறிந்ததே. 2019 முதலே வாகன உற்பத்தியாளர்களின் சங்கடங்கள் சீர் செய்ய மத்திய மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவிக்க தயாராகி வந்தது.

ஆனால் 2020 ல் கொரோனா பெரும் தொற்று காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் எல்லா உற்பத்திகளும் தடைபட்டது. அதி் கார், இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பும் நின்றதை கண்டோம். ஆனால் வாகனங்கள் வாங்க வாடிக்கையாளர்கள் வருகையில்லாத நிலையில் தயாரிப்பு நின்றது. ஒரு வகையில் நல்லதாகவே இருந்து இருக்கும்.

தயாரிக்கப்பட்ட கார்களை விற்காமல் சும்மா எங்கே நிறுத்தி வைத்து இருப்பது? ஆனால் மெல்ல ஊரடங்கு விலகி வருவதால் வாகன விற்பனையும் தயாரிப்பும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சமர்ப்பிக்க இருக்கும் பட்ஜெட் வாகன உற்பத்தியாளர்களுக்கு விசேஷ வசதிகளையும் சலுகைகளையும் தர இருக்கிறார்களா? என்று மிக உன்னிப்பாக உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டு இருக்கிறது.

காரணம் தென் ஆசியப் பகுதியில் வாகன விற்பனை அதிகரிக்க ஆரம்பிக்கும் இந்தக் காலக் கட்டத்தில் முழு வீச்சுடன் தயாரிப்பு தமிழகத்தில் உள்ளதால் கார் தயாரிப்பு பன்னாட்டு நிறுவனங்கள் மகிழ்ச்சியுடன் தங்களது முதலீடுகள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுவதை பார்க்க முடியும்.

இந்நிலையில் தமிழகம் கார், இரு சக்கர வாகன தயாரிப்பில் மேலும் சாதனை புரிய சவால்கள் நிறைந்த மின் வாகன உற்பத்தியையும் அதிகரித்தாக வேண்டும்.

பெட்ரோல் விலை ரூ.100 தாண்டிவிட்ட நிலையில் மின் வாகன முதலீடு சரியான தேர்வாக இருக்கப் போகிறது.

மின் வாகனங்கள் கரும் புகையை வெளியேற்றாது, முன்பை விட நீண்ட தூர பயனிக்க முடியும், பல மணி நேரமும் ஓடிக் கொண்டும் இருக்கும். வாகனங்கள் போதிய வேகத்தில் செல்லும் சக்தி வாய்ந்ததாக மாறி வருகிறது.

இந்த வசதிகளால் சமீபமாக அறிவிக்கப்பட்ட ‘ஓலா’ இருசக்கர மின் வாகனத்திற்கான முன் பதிவு அறிவிக்கப்பட்ட முதல் நாளிலேயே ஒரு லட்சத்திற்கும் மேல் விண்ணப்பம் பெறப்பட்டதை சென்ற மாதம் கண்டோம்.

இந்த இ – ஸ்கூட்டர் விலை ரூ.85 ஆயிரத்துக்கும் அதிகமாகவே இருக்கப் போகிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த இருசக்கர வாகனச் சந்தையில் ஏறக்குறைய சரிபாதியை இலக்காகக் கொண்டே ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் வாகன உற்பத்தியில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் வருடாந்திர சராசரி விற்பனை 2.1 கோடியாக இருக்கிறது. அவற்றில், ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை மட்டும் 65 லட்சம். ஆண்டொன்றுக்கு ஒரு கோடி ஸ்கூட்டர்களை தயாரிக்க ஓலா எலக்ட்ரிக் இலக்காக வைத்துள்ளது.

விரைவில் இந்தியாவுக்கு வெளியே தெற்காசிய அளவிலும் ஐரோப்பாவிலுமாக உலகளாவிய சந்தையை விரித்தெடுக்கும் விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. மின் சக்தியால் இயங்கும் இருசக்கர வாகனச் சந்தையில் சீன நிறுவனங்களுடனாக போட்டி ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்துக்கு ஒரு சவாலாக இருக்கக்கூடும். ஆனால் உலக அளவிலான உற்பத்தி அளவில் ஏறக்குறைய 15% உற்பத்தித் திறன் கொண்ட தயாரிப்பு ஆலைகளை தாம் திட்டமிட்டிருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உற்பத்தி ஆலையைத் தொடங்குவதற்கு தமிழ்நாட்டில் ரூ.2,400 கோடியை ஓலா நிறுவனம் முதற்கட்டமாக முதலீடு செய்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பகுதியில் 500 ஏக்கரில் அமையவுள்ள ஓலா நிறுவனத்தின் வாகனத் தயாரிப்பு தொழிற்சாலையானது 2020 டிசம்பரில் அன்றைய முன்னாள் முதல்வர் பழனிசாமி மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது. இதன் மூலமாக படிப்படியாக 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொழிற்சாலை பணிகளில் தமிழ்நாட்டின் மனிதவளத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்காக வாய்ப்புகள் அதிகம். ஓசூரிலிருந்து ஏற்கனவே மின் சக்தியால் இயங்கும் இரு சக்கர வாகனங்களை தயாரித்து வரும் ஏதர் எனெர்ஜி நிறுவனமும் தமது உற்பத்தியை அதிகரி்க்கத் திட்டமிட்டுள்ளது. சென்னையை மையம் கொண்டுள்ள கார் உற்பத்தி தொழிற்சாலையை போல கிருஷ்ணகிரியில் மின் சக்தியால் இயங்கும் வாகனங்களுக்கான தொழிற்சாலைப் பகுதியை திட்டமிட்டு உருவாக்குவதற்கான வாய்ப்பாக இவற்றை கொள்ள வேண்டும். இதர வான தயாரிப்பாளர்களும் தங்களது உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்து மின் வாசன தயாரிப்பை தொடங்க யோசிக்க ஆரம்பித்து வரும் இத்தருணத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களையெல்லாம் எப்படி வசப்படுத்தப் போகிறார் என்பதை நாளை ஆகஸ்ட் 13 அன்று சமர்ப்பிக்க இருக்கும் தமிழக பட்ஜெட் சுட்டிக் காட்டும் என்று எதிர்பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *