செய்திகள்

தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

காஞ்சீபுரம், பிப்.19–-

காஞ்சீபுரத்தில் நடந்த தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்ட விழிப்புணர்வு பேரணியை காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட மருத்துவ பணிகள் (தொழுநோய்) சார்பில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்த தொழுநோய் விழிப்புணர்வு பேரணி நடந்தது.இந்த பேரணியை காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு காவலான் கேட் மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.

இதில் சிவந்த, உணர்ச்சியற்ற தேமல் தொழுநோயாக இருக்கலாம். பரிசோதனை செய்து கொள்ளுங்கள், கூட்டு மருந்து சிகிச்சை சக்தி வாய்ந்தது. தொழு நோய் முற்றிலும் குணமாக்குகிறது. அனைத்து அரசு மற்றும் சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் தொழு நோய்க்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது. நரம்புகள் தடித்திருத்தல், தோலில் மினுமினுப்பு, கை, கால்களில் மதமதப்பு ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்ற பல்வேறு கோஷங்களை மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துவ பயிற்சி மாணவிகள் எழுப்பினர்.

மேலும் தொழுநோய் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும், காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ஜீவா, தொழுநோய் துணை இயக்குநர் டாக்டர் கனிமொழி, காஞ்சீபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை துணை இயக்குநர் டாக்டர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *