செய்திகள்

சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் நுண்வழி அறுவை சிகிச்சைக்கு தனித்துறை அமைப்பு

சென்னை, செப். 26–

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுண்வழி சிகிச்சை துறையால் நடத்தப்படும் தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சியினை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் இன்று துவக்கி வைத்தார்.

பின்னர் சென்னை அரசு மருத்துவமனைக்கு பல்வேறு மருத்துவ உபகரணங்களையும் நுண்வழி அறுவை சிகிச்சை துறைக்கு புத்தகம், கணினி, நுண்வழி அறுவை சிகிச்சை கருவிகளையும் வழங்கிய பேராசிரியர் அபீ ஆஸ்மா, சுல்தான், கணேசன், ஹரிமாதவன் ஆகியோரை கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியதாவது:–

புரட்சித் தலைவி அம்மாவின் அரசில் தமிழ்நாட்டின் சுகாதார நலத்திட்டங்கள் மற்றும் மருத்துவ கல்வியியல் இந்தியாவிற்கு மட்டுமல்ல, அகில உலகத்திற்கே முன்னோடியாக திகழ்கிறது. புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடுத்து தமிழகத்தில் தான் சென்னை மருத்துவக் கல்லூரியில் நுண்வழி அறுவை சிகிச்சைக்கு தனித்துறை அமைக்கப்பட்டு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

2014 முதல் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இரண்டு வருட பட்ட மேற்படிப்பு (Post Doctoral Fellowship in Minimal Access Surgery) தொடங்கப்பட்டு தற்போது ஆண்டிற்கு 4 மாணவர்கள் வீதம் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டு முதல் நாட்டிலேயே முதன் முறையாக சென்னை மருத்துவக் கல்லூரியில்தான் அரசுத்துறையில் Fellowship in National Board in Minimal Access Surgery எனப்படும் தேசிய அளவிலான இரண்டு வருட பட்ட மேற்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து இந்த பட்ட மேற்படிப்பை ஒரு மருத்துவர் பயின்று வருகிறார் என்ற தகவல் எனக்கு மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.

இச்சிகிச்சைத் துறை துவக்கிய நாள் முதல் ஏழை எளிய நோயாளிகளுக்கு சிறந்த தொண்டாற்றி சிறு துளைகள் மூலம் அறுவை சிகிச்சை அளித்து வருகிறது. லேப்ரோஸ்கோபி சிகிச்சை முறைகள் தற்போது அனைவரும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு கடந்த 5 ஆண்டுகளில் 3,819 அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 645 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவத் துறையில் முன்னேற்றம், உயரும் தேவைகள், அனைத்து குடிமகன்களுக்கும் சுகாதார சேவைகள் ஆகியவற்றில் தனியாரின் பங்களிப்பு அரசுக்கு அவசியமாகிறது. அரசுத்துறையில் தனியாரின் பங்களிப்பு மூலமாக நவீன மருத்துவத்தின் அனைத்து வசதிகளும் தேவையான நபர்களுக்கு தேவையான நேரத்தில் எளிதில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

கனியின் மூலம் ஒரு மரம் அறியப்படும், தன் செயல்கள் மூலம் ஒரு மனிதன் அறியப்படுவான் என்ற வகையில் அன்பு மற்றும் பண்பின் மூலமே மருத்துவர் அறியப்படுவார் எனக்கூறி இங்கு கூடியுள்ள இளம் மருத்துவர்கள் அனைவரும் நன்கு பயிற்சிபெற்று அன்போடும் கனிவோடும் இச்சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார். மேலும், அரசு மருத்துவமனைகளுக்கு இதுபோன்ற பல்வேறு வளர்ச்சிப் பணி திட்டங்களுக்காக உதவிட கொடையாளர்கள் தாமாக முன்வரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின்ஜோ, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி, அப்போலோ மருத்துவமனை இயக்குநர் வெங்கடாசலம், லைப் லைன் மருத்துவமனை தலைவர் ராஜ்குமார், நுண்வழி சிகிச்சை துறை தலைவர் பாலாஜி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *