நாடும் நடப்பும்

சீனா படை குறைப்பால் சிக்கல் தீர்ந்ததா?

கடந்த ஆண்டு இந்தியா சந்தித்த இரு பெரும் சவால்களில் ஒன்று கொரோனா பெறும் தொற்று; மற்றது சீன ராணுவச் சீண்டல்கள்.

சமீபமாக கோவிட் தடுப்பூசி மருந்துகள் ஓர் அளவு நிம்மதியை தந்தாலும் பெறும் தொற்றின் அச்சம் நீடிக்கிறது. இதற்கு முன்பு வந்த சார்ஸ் கிருமிகள் ஏற்படுத்திய நோயின் தாக்கம் முழுமையாக குறைந்து விட்டது என்று சொல்லி விட முடியாது.

இது சீனச் சதி என்று ஒரு வியாதியை வர்ணித்து அதை அரசியலாக்கி மக்களை திசை திருப்பி விடலாம். ஆனால் அதன் உண்மையான வீரியத்தை முழுமையாக குறைத்து விடாத நிலையில் உலகமே பாதிப்பின் அச்சத்தில் தானே வாழ்ந்தாக வேண்டும்.

சார்ஸ், கோவிட் போன்ற சமீபத்திய கிருமிகள் உண்மையில் எங்கே? எப்படி? ஜனித்தது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை பெறாத நிலையில் மீண்டும் இது போன்ற உயிர்ச் சேதம் ஏற்படத்தான் செய்யும்.

நாம் சாப்பிடும் உணவு, மருந்து மாத்திரைகள் நம் உடலில் ஏதேனும் பாதகத்தையும் மறைமுகமாக விதைக்கிறது, அதையே குறி வைத்து தான் புதுப்புது வைரஸ் கிருமிகள் நமது உடலுக்குள் புகுந்துவிடும் சில நாட்களில் புதிய வீரியம் பெற்று பூதாகாரமாக மாறுகிறது.

ஆக திருவள்ளுவர் கூறியது போல் ‘நோய் நாடி, நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்கிறார். இது என்ன நோய் என்பதை ஆராய வேண்டுமாம்; அந்நோயின் காரணம் என்ன என்பதையும் ஆராய்ந்து தெரிந்த பிறகே அதை தணிக்கும் மருத்துவத்தை உபயோகித்தால் பூரண குணமடைய முடியுமாம்!

இன்று நோய் என்ன? அதன் தாக்கம் என்ன? என்பது தெளிவாகத் தெரிந்தாலும் அந்நோய் எப்படி உற்பத்தியானது? அந்த துவக்க கட்டத்தில் இருந்த அல்லது நேர்ந்த தவறுகளை கண்டுபிடித்தால் மட்டுமே இப்படிப்பட்ட விஷக் கிருமிகளிடமிருந்து முழு விடுதலையை மனித குலம் பெற முடியும்.

உலகமே கை கோர்த்து ஊரடங்கை நிலை நிறுத்தியதால் கோவிட் தொற்றின் பரவல் சில மாதங்களில் தடை பெற்றது.

உலகமே ஒரே குறிக்கோளுடன் தடுப்பூசியை தயாரிக்க களம்யிறங்கியதால் சில மாதங்களிலேயே நமக்கு தடுப்பூசியும் கிடைத்து விட்டது.

அடுத்ததாக அரசியல் நிலைகளை மறந்து பிரிவினை சித்தாந்தங்களையும் மறந்து ஒரே குறிக்கோளாய் இந்த கிருமியின் துவக்கத்திற்கான காரணத்தை கண்டுபிடித்து விட்டால் இது முழுமையாக அழிக்கப்பட ஏதுவான திட்டத்தை உருவாக்க முடியும்.

அதே சிந்தனையோடு, அதற்கு இணையாக சீன அத்து மீறலை முற்றிலும் தடுத்து நிறுத்த நம் தலைவர்கள் களப் பணியில் ஈடுபட்டாக வேண்டும்.

மியான்மரில் ஏற்படும் மாற்றங்கள், பாகிஸ்தான் எடுக்கும் முடிவுகள், ஐரோப்பிய யூனியனுடன் ஒப்பந்தம் என்று உலக நடப்புகளில் எதில் இந்தியா ஓர் முடிவு எடுத்தாலும் அதில் சீனாவின் நிலைப்பாட்டை எதிர்த்து இருப்பதாக உலக அரசியல் பின்னி இருப்பது நமது வளர்ச்சிக்கு பாதகமானது.

கடந்த 2 நாட்களாக சீன ராணுவம் லடாக் எல்லைப் பகுதியில் இருந்து பின் வாங்குவதாக கூறி வெளியேற துவங்கி இருப்பதே நல்ல செய்தி தான்.

ஆனால் ஏன் சீன அத்துமீறல் ஏற்பட்டது? குறிப்பாக சீனத் தலைவர் நமது பிரதமரிடம் அதீத நட்பை வெளியிட்டு தென்னிந்தியா வரை பயணித்து 2 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு பிரதமர் மோடியுடன் மனம் விட்டுப் பேசிய சில மாதங்களில் எல்லைச் சிக்கலை அவிழ்த்து விட என்ன காரணம்?

சீனாவின் கனவு எப்படியாவது உலகின் முன்னணி பொருளாதாரமாக உயர்வது என்பது தெரிந்தது தான். அதை உறுதி செய்ய ‘யுத்த’ அரசியலை அவிழ்த்து விட தேவை என்ன?

அமெரிக்காவும் வளரும் வல்லரசான இந்தியாவும் சீனா வளர்ச்சியை என்றேனும் தடை கற்களாக மாறும் என்று அவர்கள் அஞ்சலாம். அதற்காக நமது வளர்ச்சியை ஆரம்பத்திலேயே தடுத்து தடை செய்ய இப்படிப்பட்ட அரசியல் சதிகளை அவிழ்த்து விடத் துணிந்து இருக்கலாம்.

எது எப்படியோ, லடாக்கில் பாங்காங் ஏரியின் தெற்கு கரையில் உள்ள மலைகளில் இருந்து இந்தியாவும் சீனாவும் குறைந்த அளவில் படைகளை விலக்கிக்கொள்ளும் நடவடிக்கையை தொடங்கி விட்டன.

இந்நிலையில் லடாக்கில் பாங்காங் ஏரியின் தெற்கு கரையில் உள்ள மலைகளில் இருந்து பீரங்கிகள், கவச வாகனங்களுடன் நிலை கொண்டிருந்த படையினரை இரு நாடுகளும் பகுதி அளவில் திரும்பப் பெறத் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிழக்கு லடாக்கில் இந்திய – சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்படும் இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த படைக்குறைப்பு குறித்து தகவல், சீன பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் அதிகாரபூர்வமாக வெளியானது. இதில் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வூ கியான்,” பாங்காக் கேரி பகுதியிலிருந்து இந்திய – சீன ஆயுதப் படைகளின் முன்கள பிரிவுகள் பிப்ரவரி 10 வெளியேறத் தொடங்கியுள்ளன. இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் அளவிலான 9 வது சுற்று பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட ஒருமித்த கருத்தின் அடிப்படையில் படைக்குறைப்பு தொடங்கியுள்ளது. இரு நாடுகளும் ஒரே நேரத்திலும் முறையாகவும் படைகளை குறைத்து வருகின்றனர் ” என்று கூறியுள்ளார்.

இது இந்திய பொருளாதார நிபுணர்களுக்கு நிம்மதி பெருமூச்சை விட வைத்தாலும் நோயின் ஆரம்பம் ஏன்? என்பதை புரிந்து கொள்ளாத நிலையில், நமது பாதுகாப்புத் துறை புதுப்புது சவால்களை எதிர்பார்த்து தான் கண் விழித்து தயார் நிலையில் இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *