உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வந்தார் டி.ஆர்.பி.ராஜா
உரிமைக்குழு விசாரணைக்கு அனுப்பினார் சபாநாயகர் அப்பாவு
சென்னை, ஜன.11–
கவர்னர் ஆர்.என்.ரவியுடன் வந்த அவரது விருந்தினர் தமிழ்நாடு சட்டசபை நிகழ்ச்சிகளை செல்போனில் பதிவு செய்ததாக தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா புகார் கூறி உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பி பேசினார். அவருடைய புகாரை பதிவு செய்து கொண்ட சபாநாயகர் அப்பாவு, அப்பிரச்சினையை தமிழ்நாடு சட்டசபை உரிமைக்குழு விசாரணைக்கு அனுப்பினார். உரிமைக்குழு விசாரித்து இதுகுறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் சபாநாயகர் உத்தரவிட்டார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரத்தில் தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ஒரு உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பி பேசினார்.
புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் ஆர்.என்.ரவியின் உரையுடன் ஜனவரி 9ஆம் தேதி திங்கள்கிழமை அன்று தொடங்கியது. அப்போது கவர்னருடன் வந்த விருந்தினர் பேரவை நடவடிக்கைகளை செல்போனில் பதிவு செய்ததாக உரிமை மீறல் பிரச்சினையை சட்டசபையில் எழுப்பி திமுக எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா பேசுகையில் கூறியதாவது:–
கடந்த 9–ந் தேதி தமிழ்நாடு கவர்னருடன் வந்த விருந்தினர் இந்த சட்டப்பேரவை நடவடிக்கைகளை அவரது செல்போனில் பதிவு செய்தார். இது பேரவை விதிகளின்படி தவறாகும். உடனடியாக அவைக் காவலரிடம் கூறி நடவடிக்கை எடுக்க கூறியிருந்தேன் எனத் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, உரிமை மீறல் இருப்பதாக கருதுவதால் இதுகுறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க சட்டசபை உரிமை மீறல் குழுவுக்கு உத்தரவிடுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.