செய்திகள் நாடும் நடப்பும்

கட்டுப்பாட்டில் தீவிரவாதம்: மேகாலயா, நாகலாந்தில் தேர்தல்கள் வெற்றியின் பின்னணி


ஆர்.முத்துக்குமார்


மேகாலயா, நாகலாந்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பாரதீய ஜனதாவிற்கு சாதகமானதாக இருப்பது அக்கட்சிக்கு மிகப்பெரிய ஊக்க டானிக். காரணம் ஒரு வருடத்தில் நாடு தழுவிய பாராளுமன்ற தேர்தலை சந்திக்கத் தயாராக வேண்டிய சூழ்நிலையில் இத்தேர்தல் முடிவுகள் அக்கட்சி தலைமைக்கும் தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியை தருவதைப் பார்க்கின்றோம்.

மேகாலயாவில் தற்போது ஆட்சியில் இருக்கும் தேசிய மக்கள் கட்சி அருதிபெரும்பான்மையை பெற முடியவில்லை என்றாலும் தனிப்பெரும் கட்சியாக 26 இடங்களில் வென்றுள்ளது. பாரதீய ஜனதா 2 தொகுதிகளில் வென்றுள்ளது. ஆட்சியை அமைக்கப்போகும் அக்கட்சிக்கே முழு ஆதரவு என பாரதீய ஜனதா அறிவித்துள்ளது.

எந்த அசம்பாவிதமும் தென்படாமல், கலவரங்கள் ஏதுமின்றி வடகிழக்கு பகுதியில் பதட்டமின்றி தேர்தல் நடந்து, முடிவுகளும் அறிவிக்கப்பட்டிருப்பது நாட்டிற்கே மகிழ்ச்சியை தருகிறது.

கலவரங்களும் தீவிரவாத ஊடுருவல்களும் தங்குதடையின்றி தொடர அப்பகுதியில் பதட்ட அரசியல் கட்டவிழ்க்கப்பட்டு இருந்த நிலைமாறி அமைதி நிலவுவது மிகப்பெரிய மாற்றம் ஆகும்.

இது நமது ஆட்சியாளர்களுக்கும் ராணுவ கட்டுப்பாடுகளுக்கும் கிடைத்த வெற்றி என்று தான் பார்க்க வேண்டும்!

இந்த மாற்றங்களை சர்வதேச அரங்கில் உற்றுப்பார்க்கும் அமைப்புகள், நிபுணர்கள் பாராட்டி வருகிறார்கள்.

தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியா மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்று அமெரிக்காவும் புகழாரம் சூட்டியுள்ளது.

லஷ்கர்–-இ–-தொய்பா, ஜெய்ஸ்–-இ–-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன், ஐ.எஸ்., அல்-காய்தா, ஜமாத் -அல் -முஜாகிதீன், ஜமாத் -அல் -முஜாகிதீன் பங்களாதேஷ் ஆகிய தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் செயல்படுகின்றன. அந்த நாட்டில் கடந்த 2021–-ம் ஆண்டில் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மத்திய பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த நவம்பர் 1–-ம் தேதி மக்கள் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியா மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தீவிரவாதிகளின் சதித் திட்டங்களை முன்கூட்டியே கண்டறிவது, தீவிரவாத தாக்குதல்களை தடுப்பது, தீவிரவாத அமைப்புகளை அழிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

விமான நிலையங்கள், துறைமுகங்களில் பயோமெட்ரிக் சோதனை நடத்தப்படுகிறது. விமானத்தில் அனுப்பப்படும் சரக்குபெட்டகங்கள் இரட்டை எக்ஸ்ரே சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

இந்தியா முழுவதும் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் இந்திய அரசு புதிய உத்திகளை கையாண்டு வருகிறது. இதன்படி ஜம்மு-காஷ்மீரில் ராணுவம் சார்பில் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. மருத்துவ முகாம்கள், வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்திய கடல் எல்லை மிகவும் நீளமானது. கடல் எல்லையைப் பாதுகாக்க இந்திய அரசு கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பிரிக்ஸ், எஸ்சிஓ அமைப்பில் இருப்பதால் சீனாவுடன் நேரடி தொடர்பில் இருக்கிறோம். அதன் காரணமாக எல்லைப்பகுதி தலைவலிகள் ஓரளவு உடனுக்குடன் நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அமைதியை நிலைநாட்ட முடிகிறது.

அதுபோன்றே குவாட் கூட்டமைப்பிலும் இருப்பதால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளுடன் தொடர்பில் இருப்பதால் கடல் எல்லைப் பகுதிகளில் தீவிரவாதமோ, கடல் கொள்ளையர்களின் அட்டகாசமோ தலைதூக்கும் முன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடிகிறது.

வருங்காலங்களில் இந்த தீவிரவாத கட்டுப்பாடுகளின் வெற்றி இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்துதல் சக்தியாக இருக்கும்.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *