சிறுகதை

அபிப்பிராயம் வேறு – ராஜா செல்லமுத்து

சோ….. என்று கொட்டிக்கொண்டு இருந்தது மழை. பெரும்பாலான வீடுகளுக்குள் கடைகளுக்குள் மழைத் தண்ணீர் புகுந்து அன்றாட வாழ்க்கையை சிதைத்து கொண்டிருந்தது. ஒரு சிலர் வைத்திருக்கும் கடை தரைத்தளத்தில் இருக்கும். தரைத் தளத்திற்கு மேலே இருக்கும், ஒரு சில கடைகளை சிலர் திறந்து இருந்தார்கள்.

கீழ்தளத்தில் இருப்பதால் மூழ்கும் தண்ணீரில் சில கடைகள் இருந்தன. சில வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கியிருந்தது. தெருக்களிலும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.

இந்த நேரத்தில் அர்ஜுன் தன்னுடைய புராஜெக்ட் விஷயமாக எல்லா டாக்குமெண்ட்டையும் பிரண்ட், ஒரு நிறுவனத்தில் ஒப்படைக்க வேண்டும். அன்று தான் கடைசி நாளாக இருந்தது.

தனியார் நிறுவனம் என்பதால் சாக்குப்போக்கு எல்லாம் சொல்ல முடியாது. அவர்கள் தன் நிறுவனத்திற்கு வேலைக்கு ஆட்கள் சரியாக இருக்கிறார்களா? என்று தான் கவனிப்பார்கள். அதனால் மழையோ? புயலோ? எதுவும் அவர்கள் சொன்ன தேதியில் தன்னுடைய டாக்குமெண்ட்டை ஒப்படைத்து விட வேண்டும் என்று பரபரப்பாக இருந்தான் அர்ஜுன்.

பிரிண்ட் அவுட் இருக்கும் இடம். அவன் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் இருந்தது .அவன் நடந்து போனான், பிரிண்ட் அவுட் இடத்திற்கு.

அந்தக் கடையின் ஓனரான சரவணனிடம், இதை பிரிண்ட் எடுக்க வேண்டும்.? எது ஜெராக்ஸ் எடுக்க வேண்டும்? என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.

அப்போது அவன் எதிரே இருந்த இரண்டு சேர்களில் இரண்டு பேர் அமர்ந்து கொண்டு கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாமல் சத்தமாகப்

பேசிக் கொண்டிருந்தார்கள். அர்ஜுன் பேசுவது அதற்கு சரவணன் பதில் சொல்வதும் சரவணன் பேசுவதற்கு அர்ஜுன் பதில் சொல்வதும் என்று இருவர் காதிலும் சரியாக விழாமல் இருந்தது .

ஆனால் எதிரே அமர்ந்திருந்த இரண்டு பேர் எதற்காக அவ்வளவு சத்தமாக பேசுகிறார்கள் என்பது அர்ஜுனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன் ஹலோ….. ஏன் இவ்வளவு சத்தமா பேசுறீங்க? உங்க பக்கத்துல உட்கார்ந்திருக்கிற ஆளுக்கு கேட்கணும், அப்படின்னா மெல்ல பேசலாமே. நீங்க இவ்வளவு சத்தமா பேசி ரோட்டில் போறவங்க திரும்பிப் பார்க்கிற அளவுக்கு சத்தமா இருக்கு. இது அவசியம் இல்லை. அது மட்டும் இல்லாம இந்த மாதிரி வேலை செய்த இடத்தில் இவ்வளவு சத்தமா பேசிக்கிட்டு இருந்தீங்கன்னா நான் சொல்றது சரவணனுக்கு கேட்கல. சரவணன் சொல்றது எனக்கு கேட்கல. ஏதாவது தப்பான ஒரு டாக்குமெண்டை சேர்த்துவிட்டாலோ, இல்ல ஒரு சர்டிபிகேட்டை இணைக்காமல் விட்டாலோ எனக்கு வேலை போய்டும் .எனக்கு மட்டும் இல்ல இந்த மாதிரி ஏதாவது முக்கியமான டாக்குமென்ட் சர்டிபிகேட்டோட இருக்கிறவங்களுக்கு, நீங்க போடுற சத்தத்தில் ஏதாவது ஒன்னு மறந்துட்டாங்கன்னா அவங்களுக்கு இழப்பு இருக்கு.

அதனால தயவு செஞ்சு கொஞ்சம் அமைதியா பேசுங்க என்றான் அர்ஜுன்.

அதைக் கேட்டவர்களுக்கு ஈகோ வந்திருக்கும் போல. இவன் என்ன சொல்றது நாம என்ன கேட்கிறது என்பது போலவே அர்ஜுனை ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.

ஒரு 2 நிமிடம் அமைதியாக இருந்தவர்கள், மறுபடியும் அதே தொனியில் பேச ஆரம்பித்தார்கள். இவர்கள் மனிதப் பிறவிகள் தானா? அடுத்தவர்களை தொந்தரவு செய்வது இவர்களுக்கு வாடிக்கையாக இருக்கிறதா? நாமெல்லாம் பொது இடங்களில் இல்லை… நமக்கு சம்பந்தம் இல்லாத இடங்களில் பேசுவதற்கு கூச்சப்படுகிறோம். வெட்கப்படுகிறோம். அடுத்தவர்களுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்று நினைக்கிறோம்.

இவர்கள் அடுத்தவர்களுக்கு தொந்தரவு செய்வதையே வாடிக்கையாக வாழ்க்கையாக வைத்திருக்கிறார்களே? இவர்களை நம்பித்தான் எதிர்கால இந்தியா இருக்கிறதா? என்று தலையிலடித்துக் கொண்டான் அர்ஜுன்.

சரவணன் அவர்களை மெதுவாக பேசும்படி சைகை செய்தான்.

ஆனால் அவர்கள் சொல்லும்போது மட்டும் அமைதியாக இருந்துவிட்டு மறுபடியும் ….மறுபடியும் பேச ஆரம்பித்தார்கள்.

அதை நினைத்து கோபமான அர்ஜுன் ஒரு கட்டத்தில் தனக்கு தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.

இந்த மாதிரி மூடர்களை எல்லாம் திருத்துவது நம் வேலை இல்லை. இவர்களெல்லாம் நல்வழிப்படுத்துவது நம் பணி இல்லை…

நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது போல. இவர்கள் பிறப்பிலிருந்து இந்த கேவலமான புத்தி வந்து இருக்கிறது.

இவர்கள் பட்டு திருந்தும்ம் போதும் இல்லை இவர்கள் வேலை செய்துகொண்டு இருக்கும்போது இவர்களுக்கு இடைஞ்சலாக வேறொருவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது தான், இந்த சத்தமான பேச்சுக்கு அர்த்தம் தெரியும் .

மற்றபடி யாரும் யாரைச் சொல்லியும் திருத்த முடியாது. அப்படி சொன்னால் அவர்களுக்குத் தான் என்கின்ற அகம்பாவம் வரும். ஈகோ வரும்.

அதனால் இவர்கள் பேசுவதை காதில் வாங்காமல் நாம் வேலை செய்தாலே அந்தப் பிரச்சனை நமக்கு கோபத்தை ஏற்படுத்தாது. நமக்கு டென்ஷன் வராது . உடலும் கெடாது. அவர்களுக்கு ஒரு பிரச்சனை; இதுபோல் ஒரு பிரச்சினை வரும்போது தான் அவர்களாக திருந்துவார்கள் என்று நினைத்து அர்ஜுன் அதிலிருந்து அவர்கள் சத்தமாகப் பேசினால் கூட எதுவும் பேசாமல் இருந்தான், .

அவனுடைய வேலையில் கவனம் செலுத்தினான். அந்த நிறுவனத்திற்கு அனுப்பவேண்டிய டாக்குமெண்டரி சர்டிபிகேட்டை இணைத்து அடுக்கிக் கொண்டிருந்தான்.

அவர்கள் சத்தமாக ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள்’ சத்தமாக பேசுபவர்களை கேட்டபோது கோபப்பட்ட அதே அர்ஜுன் இப்போது தெளிவடைந்து அவர்களை பேசுவதை பார்த்து சிரித்துக் கொண்டே வெளியே வந்தான்.

அப்போது தான் சத்தமாக பேசுபவர்களுக்கு,முன்னால் நம்மைப் பார்த்துக் கோபப்பட்டவன், ஏன் இப்போது சிரித்துக் கொண்டு போகிறான்?என்று நினைத்தவர்களின் கன்னத்தில் பளார் ….பளார்…. என்று அறைவது போல் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *