சென்னை, டிச.2-
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று உலக எஸ்ட்ஸ் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சென்னை மாவட்ட கலெக்டர் ஆர்.சீதாலட்சுமி தலைமை தாங்கினார்.
மருத்துவமனை டீன் டாக்டர் பாலாஜி முன்னிலை வகித்தார். மேலும் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் விமலா மற்றும் டாக்டர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். இதையடுத்து உலக எயிட்ஸ் தினத்தில் ‘உலகளாவிய ஒற்றுமை, பகிரப்பட்ட பொறுப்பு’ என்ற கருப்பொருளை முன்வைத்து அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். பின்னர் மருத்துவமனை டீன் டாக்டர் பாலாஜி பேசியதாவது:-
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இதுவரை 36 ஆயிரத்து 77 பேர் எச்.ஐ.வி. பரிசோதனை செய்துள்ளனர். அதில் 163 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, 2 ஆயிரத்து 667 பேர் எய்ட்ஸ் நோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.