தூத்துக்குடி, டிச. 22–
தமிழ் கிரிக்கெட் வர்ணனையாரும் லண்டன் ஐபிசி வானொலியின் முன்னாள் அறிவிப்பாளருமான சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் இன்று காலமானார். அவருக்கு வயது 81.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பார் 980ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளின் தமிழ் வர்ணனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அப்போது தமிழ்நாடு கேரள அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் தமிழ் வர்ணனையை வானொலியில் செய்தார். 1982ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இந்திய இங்கிலாந்து போட்டியில் இவரது தமிழ் வர்ணனையைச் மிகவும் ரசித்த அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர், இவரை நேரில் அழைத்துப் பாராட்டினார்.
1999ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளராக செயலாற்றும் படி ஐ.பி.சி தமிழ் வானொலி விடுத்த அழைப்பை ஏற்று, இலண்டன் சென்று 45 நாட்கள் வர்ணனை செய்தார். மீண்டும் 2004 ஆம் ஆண்டு இலண்டன் சென்று உலகக் கிரிக்கெட் போட்டிகளை தமிழில் வர்ணனை செய்தார்.
2007ம் ஆண்டு சிங்கப்பூர் சென்று இஎஸ்பிஎன் – ஸ்டார் கிரிக்கெட் தொலைக்காட்சிக்காக, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 20:20 உலகக்கோப்பை கிரிக்கெட்டை தமிழில் வர்ணனை செய்தார். இதுவரை 35 கிரிக்கெட் மற்றும் ஹாக்கி போட்டிகளின் வர்ணனையாளராக சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.
மேலும் பல சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களுக்கு வானொலியில் வர்ணனை செய்துள்ளார். அவரது தமிழ் வர்ணனைக்கு உலகம் முமுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
மூன்று நூல்களை எழுதியுள்ள அவர், அழைத்தார் பிரபாகரன் என்கிற நூலில் இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்த அனுபவங்களை எழுதியுள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக அப்துல் ஜப்பார் இன்று காலை 8 மணிக்கு காலமானார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.