சிறுகதை

அவர் எழுதியது – மு.வெ. சம்பத்

ராஜம்மா, கிருஷ்ணமூர்த்தி இருவருக்கும் குழந்தை பாக்கியம் இல்லாதது ஒரு பெரிய குறையாகவே தோன்றியது. இவர்கள் பெரும்பாலும் விழாக்களுக்குச் செல்வதைத் தவிர்த்தார்கள். இவர்கள் அடிக்கடி செல்வது காஞ்சீபுரம் மட்டுமே. மகா பெரியவாளைச் சந்தித்து வந்தால் மன சாந்தி கிடைப்பதாக உணர்ந்தார்கள். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பெரியவா சொல்லுவதையெல்லாம் குறிப்பெடுத்துக் கொள்வார் மனதில். இவர்களுக்கு இது தவிர வாழ்வில் ஒரே பிடிமானம் ரவி தான். அவன் இவர் தம்பி பையன். ரவி வந்தால் வீடே கலகலவென மாறி விடும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ரவியை நீங்கள் தத்து எடுக்கலாமே என்றால் கிருஷ்ணமூர்த்தி எனக்கும் விருப்பம் தான். கேட்டு தம்பி ஒத்துக் கொள்ளாவிடில் உறவில் விரிசில் வந்து விடுமோ என்ற பயம் தான் அவருக்கு.

வீட்டின் பின்புறம் தோட்டம் அமைத்து அதை பராமரிப்பதிலேயே கிருஷ்ணமூர்த்தி நிறைய நேரம் செலவிடுவது அவர் வாடிக்கை. காய்கறிகள், பூக்கள், வாழை போன்ற கனி தரும் மரங்கள், சில மூலிகைச் செடிகள் என தோட்டமே பச்சைப் பசேல் என்று இருக்கும்படி பாதுகாப்பதில் அவருக்கு ஆனந்தமே. பறித்த காய்கறிகள், பூக்கள், கனிகள் போன்றவற்றை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தானமாகவே தந்து விடுவார்கள்.

ஒரு நாள் காலையில் தோட்டவேலை முடித்து வந்த கிருஷ்ணமூர்த்தி சற்று அசதியாக உள்ளதெனக் கூறி, சாய்வு நாற்காலியில் சாய்ந்தவர் தலை சிறிது நேரத்தில் சாய்ந்தது கண்டு பதறிய ராஜம்மா மருத்துவரை அழைக்க அவர் வந்து பார்த்து கிருஷ்ணமூர்த்தி இறந்ததை உறுதி செய்தார். ராஜம்மா வாழ்க்கையில் பெரிய இடி விழுந்தது கண்ட ரவி பெரியம்மாவை எவ்வளவு தேற்றியும் ஒரு வித ஈடுபாடுமின்றி, என்னை விட்டு விட்டு எப்படி அவர் செல்லலாம் என்ற வார்த்தையையே திரும்பத் திரும்ப கூறியது கண்டு, ரவி சில நாட்கள் சென்றால் மாறுதல் ஏற்படலாம் என்று நினைத்து மேற்கொண்டு எதுவும் பேசாமல் இருந்தான்.

ஒரு வார காலம் ஊருக்குச் சென்ற வந்த ரவி தோட்டத்தைப் பார்க்க, தண்ணீர் விடாமல் எல்லா மரம் செடி கொடிகளும் காய்ந்து கிடந்தன. தண்ணீர் பாய்ச்சி விட்டு வந்த ரவியைக் கண்ட ராஜம்மா ஏதும் பேசாமல் அறைக்குள் சென்றாள். ரவி நான் வருகிறேன் என்று சொன்னதும் வாசற்கதவை சும்மா சாத்தி விட்டு போ என்றாள்.

அலுவல் வேலையாக வெளியூர் சென்று விட்டு, அன்று ஊர் திரும்பிய ரவி பெரியம்மா வீட்டிற்கு வந்த போது பெரியம்மா சற்று சுறுசுறுப்பாக இருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான். பின் தோட்டத்தைச் சென்று பார்க்கையில், நீர் போகும் பாதியெல்லாம் சரி செய்யப்பட்டு, தோட்டமே பச்சைப் பசேல் என்று பெரியப்பா காலத்திற்கு நினைவை கொண்டு சென்றது.

ரவி என்ற அழைத்த பெரியம்மாவின் குரலைக் கேட்ட ரவி ஹாலுக்கு வந்து அமர்ந்து பெரியம்மா தந்த காப்பியைக் குடித்தான். பெரியம்மா காப்பி சூப்பர் என்றவன் கண்ணில் ஒரு கையெழுத்து நூல் தென்பட்டது. அதை எடுத்த போது முதல் பக்கத்தில் மகா பெரியவர் அருளிய வேத வாக்குகள் என்ற தலைப்பில் பெரியப்பா தான் பெரியவாளுடன் தான் அனுபவித்ததை எழுதியிருந்ததைக் கண்டு அதை புரட்ட, அந்த பக்கத்தில் மனிதன், மிருகங்கள் மற்றுமின்றி தாவரங்களுக்கும் உயிர் உண்டு, நாம் அவைகளையும் பராமரிக்க வேண்டும் எனவும் வாழ்க்கையில் நாம் பெரிய இழைப்பைச் சந்திருந்தாலும் நமக்கு விதிக்கப்பட்ட காரியங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று எழுதியிருந்ததைப் படித்த ரவி பெரியம்மாவைப் பார்த்தபோது ராஜம்மா அவர் எழுதியது தான் என்னை மாற்றியது என்றார். சிறு உளி சிலையை செதுக்குவது போன்று, அந்த வரிகள் தந்த மாற்றமே என்று ரவி நினைத்தான். பின் பெரியம்மாவிடம் இனி உங்களுக்கு உங்கள் செயல்கள் நிறைவேற உறுதுணையாக இருப்பேன் என்றதும் ராஜம்மா இனிமேல் இங்கேயே இரு என்றதும் ரவி அப்பா அம்மா இருவரும் அப்போது வந்து ராஜம்மாவிடம் நாங்களும் மாடிப் போர்ஷனில் வந்து தங்கலாமா என்றதும் ராஜம்மா இது இனிமேல் ரவி வீடு அவனிடம் உத்தரவு கேளுங்கள் என்றார். இதுகாறும் அமைதியிழந்து கிடந்த வீடு எல்லோரது சிரிப்பலையிலும் புத்துணர்வு பெற்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *