செய்திகள் நாடும் நடப்பும்

நிதியறிவு : நமது பணம் – நமது பொறுப்பு


இரா. திருப்பதி வெங்கடசாமி, தணிக்கைத் தலைமை இயக்குநர், சென்னை.


பணம் பத்தும் செய்யும் ; பணம் பாதாளம் வரை பாயும் என்பன அனைவரும் அறிந்த பழமொழிகள். இன்றைய சூழலில், அந்தப் பத்தும் செய்யும் பணத்தை நாம் எப்படிச் செலவு செய்கிறோம் என்று சரியாகப் புரிந்து செலவு செய்பவர்கள் வெகு சிலரே! அதேபோல் பாதாளம் வரை பாயும் பணம் தற்காலத்தில் நம் கைபேசிக்குள் ஒளித்திருக்கிறது. பணம் கையில் வைத்திருந்த முந்தைய காலத்தில் பக்கத்தில் வரும் திருடனுக்கு மட்டும் பயப்பட வேண்டியதிருந்தது. ஆனால் தற்காலத்தில் கண்காணாத இடத்திலிருக்கும் திருடனுக்கும் சரியாகக் கையாளத் தெரியாத நமக்குமே பயப்பட வேண்டியதிருக்கிறது. அதற்குக் காரணம், பாதுகாப்பு கருதியும் எளிமை கருதியும் உருவாக்கப்பட்ட தொழில் நுட்பங்களைக் கண்டு நாமே அஞ்ச வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

அதற்கான காரணங்கள் இரண்டு. முதலாவதாக, நமது செலவு செய்யும் முறையில் உள்ள கட்டுப்பாடுகளில் ஏற்பட்ட தளர்வுகளும் மாற்றங்களும் இரண்டாவதாக அதிகரித்திருக்கும் மோசடிகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள். இவை இரண்டைப் பற்றியும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.

பணத்தின் புது வடிவம்

பண்ட மாற்று முறையில் தொடங்கிய வணிகம், தோல், செப்பு, இரும்பு நாணயங்கள் என்றும், வெள்ளி மற்றும் தங்கக் காசுகள் என்று மாற்றம் கண்டன. அச்சுத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக, வெவ்வேறு மதிப்புகளைக் கொண்ட பணத்தாள்கள் அச்சிடப்பட்டன. அதன் அடுத்த படி நிலையாக, மின்னணுப் பறிமாற்றத்தைப் பயன்படுத்தும் வகையில், டெபிட் / ஏ.டி.எம் மற்றும் கிரிடிட் கார்டுகள் பயன்பாட்டிற்கு வந்தன. அதற்கு அடுத்த கட்டமாக, வலைத்தளங்கள் மூலமாகவும் செயலிகள் மூலமாகவும் பணப் பரிவர்த்தனை மற்றும் வர்த்தகம் செய்யும் முறைகள் தோன்றின. ஆகவே காலம்தோறும் பணம் அதன் வடிவத்திலும் அதன் பயன்பாட்டிலும் பரிணாம வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கின்றது.

ஆனால் இதற்கு முன்னர் ஏற்பட்ட மாற்றத்திற்கும் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றத்திற்கும் மாபெரும் வேறுபாடு உண்டு. முன்னர் நடந்த மாற்றங்கள் அனைத்திலும் நாம் பணத்தை நேரடியாகக் கையாண்டு கொண்டிருந்தோம். நம்மிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்றும் எவ்வளவு செலவழிக்கிறோம் என்றும் அறிந்து கொண்டு நம்மிடம் மீதமிருக்கும் தொகையையும் கட்டுக்குள் வைத்திருந்தோம். அதாவது பணத்தைத் தொட்டு செலவழிப்பதன் மூலம், செலவுகளைக் கட்டுப்படுத்தவும் முறைப்படுத்தவும் இயற்கையாக உடலோடு உண்டான தொடு உணர்ச்சி நம்மிடம் இருந்தது. ஆனால் அந்தத் தொடு உணர்ச்சி மூலமான கட்டுப்பாடு முற்றிலும் நீங்கி, ஒரு மாய வடிவிலான கட்டுப்பாடுகள் புகுந்திருக்கின்றன. மின்னணு பரிவர்த்தனைகளில் பணத்தைத் தொலைத்துவிடுவோம் அல்லது திருடு போய்விடும் என்ற ஆபத்து நீங்கி இருந்தாலும் அவை வேறு வகையில் தோன்றியுள்ளன. ஆகவே மின்னணு பரிவர்த்தனைகளில் அதிக விழிப்புணர்வு தேவை.

மின்னணு செலவுக் கட்டுப்பாடுகள்

பணம் கையிருப்பிலிருந்து செலவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளையும் வழிமுறைகளையும் பலரும் அறிந்திருப்பர். ஆனால் மின்னணு வர்த்தகத்தின் பல்வேறு கூறுகளைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் போது அதுகுறித்துப் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளையும் வழிமுறைகளையும் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இந்த வழி முறைகளில் நமது கட்டுப்பாட்டிற்குள் உள்ளவை பல. அவற்றைப் பின்பற்றினால் கட்டுப்பாடான வகையில் பணத்தை செலவு செய்யலாம்.

1. இணையத்திலும் யு.பி.ஐ தொழில்நுட்பம் மூலம் பணம் செலுத்தும்போது அவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகளை முழுமையாக அறிந்துகொள்ளாமல் அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இன்றைய சூழலில் யு.பி.ஐ தொழில்நுட்பம் தவிர்க்க முடியாத பணம் செலுத்தும் மூலமாக உருவாகியிருக்கிறது. நாம் விரும்பாவிட்டாலும் அல்லது அதைச் சரியாகப் பயன்படுத்துவது குறித்து முழுவதுமாக அறிந்திருக்காவிட்டாலும் அவற்றைப் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆகவே தகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

2. யு.பி.ஐ தொழில்நுட்ப செயலிகள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்த செயலியும் வங்கிக் கணக்கில் உள்ள கையிருப்பையோ, அல்லது குறிப்பிட்ட கால அளவில் எவ்வளவு செலவு செய்திருக்கிறோம் என்ற கணக்கையோ காட்டுவதில்லை. சரியான நிதித் திட்டமிடல் மூலம் செலவளிப்பது குறித்த காலத்திற்குரிய பணச் செலவு கட்டுப்பாடு நிர்ணயித்துக் கொண்டு அதற்குட்பட்டு செலவு செய்யும் நடைமுறையைப் பின்பற்றலாம்.

3. சரியான நபருக்கு அல்லது சரியான வங்கிக் கணக்கிற்குத்தான் பணம் அனுப்புகிறோமா, என்பதை உறுதி செய்வதற்கெனச் சில நடைமுறைகள் உள்ளன. அதனைப் பின்பற்றி சரியான தொகையைப் பரிமாற்றம் செய்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். சோதனைமுறையில் ஒரு ரூபாய் அனுப்பி உறுதி செய்துகொள்ளலாம். தொலைபேசி எண்ணையும் செயலியில் தெரியும் பெயரையும் பணம் செலுத்துவோரிடம் சொல்லி உறுதிப்படுத்திக்கொள்ளலாம். யு.பி.ஐ கோடை ஸ்கேன் செய்யும்போது அதில் தெரியும் பெயரையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

4. ஒரு குறிப்பிட்ட பரிவர்த்தனையை தடங்கலின்றி முழுவதுமாக செய்து முடிக்க பலமான இணைய இணைப்பும் போதுமான அளவு பேட்டரியும் இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பரிவர்த்தனை முழுமையாக நிறைவேறாத சூழல்களில், தகராறும் பண இழப்பும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

5. பணத்தைச் செலவழிப்பதற்கென்று யு.பி.ஐ தொழில்நுட்பம், வங்கிக் கடன் அட்டைகள், ஏ.டி.எம் அட்டைகள் மற்றும் வங்கியின் சேமிப்புக் கணக்கு செயலி எனப் பல வகைகள் உண்டு. பெரும்பாலானோர் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் செலவு செய்கின்றனர்; பணத்தைச் செலுத்துகின்றனர். இரண்டுக்கும் மேற்பட்ட செயலிகள் மூலம் செலவு செய்வது கட்டுப்பாடற்ற செலவு முறையை உருவாக்கும். இது திட்டமிடாமல் செலவு செய்பவர்களுக்கும் செலவுக் கணக்கு பராமரிக்காதவர்களுக்கும் சிக்கலை உருவாக்கும்.

6. ஒரு வாரத்திற்கான செலவுகளையைத் திட்டமிடுவதும் அந்த வார முடிவில் செய்த செலவை நமக்கு நாமே தணிக்கை செய்வதும் மீதமுள்ள பனத்திற்கான செலவுக் கட்டுப்பாடுகளையும் சேமிப்பையும் திட்டமிடுதலும் நல்ல பலனளிக்கும். நடுத்தர பொருளாதார நிலையிலும் வரவுப் பற்றாக்குறை உள்ள குடும்பங்களும் அவசியம் பின்பற்ற வேண்டிய நடவடிக்கை.

பண மோசடிக்கான வாய்ப்புகள்

அண்மையில் வெளியிடப்பட்ட இந்திய அரசின் அறிக்கையின்படி, இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 18 லட்சம் கோடி மதிப்பிலான 1200 கோடி யூ.பி.ஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. அண்மையில் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் தெரிவித்த தகவலின்படி, உலக அளவில் நடந்த டிஜிட்டல் பரிவர்த்தனையில் 46 விழுக்காடு பரிவர்த்தனைகள் இந்தியாவில் நடைபெறுகின்றன என்றும் இந்தியாவின் மொத்த பரிவர்த்தனையில் 80 விழுக்காடு டிஜிட்டல் முறையில் நடைபெறுகின்றன என்றும் தெரிய வருகிறது.

இதில் எண்ணிக்கையின் அடிப்படையில் பெரும்பான்மையானவை தனி நபர்கள் சார்ந்தவை. நிறுவனங்கள் சார்ந்த பரிவர்த்தனைகள் பண மதிப்பின் அடிப்படையில் அதிகமாக இருக்கின்றன. அதிக எண்ணிக்கையில் பணப் பரிவர்த்தனை நடைபெறும் போது தவறுகள் நடப்பதற்கும் பண இழப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதேவேளையில் தனி நபர்களுக்குப் பண இழப்பு ஏற்படும்போது, அவை மதிப்பளவில் சிறிதாக இருக்கையில் இழந்த பணத்தை மீட்பதற்குரிய வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன. இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் நடைபெறும் மோசடிகளில் 55 விழுக்காடு யூ.பி.ஐ பரிவர்த்தனையில் நடைபெறுகின்றன. இதில் ரூபாய 10000 த்திற்கும் குறைவான மோசடிகள் 50 விழுக்காடாகும்; 48 விழுக்காடு அளவு 10000 முதல் 10 லட்சம் வரையிலானவை. மீதமுள்ள இரண்டு விழுக்காடு மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான பண மோசடிகள். இதிலிருந்து புரிந்து கொள்வதென்ன வென்றால் யூ.பி.ஐ மூலமான பண மோசடிகளிலும் பணப் பரிமாற்றத் தவறுகளிலும் அதிகம் பாதிக்கப்படுவது தனி நபர்களே; பொது மக்களே! இந்த மோசடிகளில் நான்கில் மூன்று பகுதி பாதிக்கப்பட்டோருக்குப் பணம் திரும்பக் கிடைப்பதில்லை.

ஆகவே டிஜிட்டல் முறையான பரிவர்த்தனையில் அதிக முன்னெச்சரிக்கை வேண்டும். அது நமது பணம்; கடின உழைப்பின் மூலம் நாம் ஈட்டிய பணம். அதை சரியான முறையில் பயன்படுத்துவதும் பாதுகாப்பதும் நம் கையில்தான் உள்ளது; சரியான செலவிற்கும் முழுமையான பாதுகாப்பிற்கும் நாம்தான் பொறுப்பு. பணப் பாதுகாப்பு குறித்த சில நடைமுறைகள் நமது கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் அவை குறித்த விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மோசடிகளிலிருந்தும் பண இழப்பிலிருந்தும் நமது பணத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

1. இணையத்திலும் செயலிகளிலும் பயன்படுத்தக் கூடிய பயனீட்டாளர் பெயர் மற்றும் கடவுச் சொல் போன்றவை தனிநபர் மட்டும் பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டவை; அதே போல் ஒரு முறை பயன்படுத்தும் கடவு எண்களும் தனிநபர்கள் மட்டும் பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டவை. அவற்றை எந்தச் சூழலிலும் யாரிடமும் பகிரக்கூடாது. பல்வேறு காரணங்களைக் கூறி, அவற்றைக் கேட்பர்; அறிந்து கொள்ள முயல்வர். அவற்றிற்கு இணங்கிவிடக் கூடாது.

2. தானாகவே நம்மிடம் வந்த (அதாவது நாம் வேண்டிப் பெறாத) இணைய இணைப்பிற்குரிய லிங்கை, மறந்தும் பயன்படுத்திவிடாதீர்கள். உங்களின் தேவை கருதி, ஏதேனும் இணைப்பு வந்திருந்தால், அதை அனுப்பியவரிடமோ அல்லது அனுப்பிய நிறுவனம் உண்மையில் சரியான, நம்பத் தகுந்த நிறுவனமா என்பதை உறுதி செய்த பின்னரே அதனைப் பயன்படுத்த வேண்டும். அறிமுகம் இல்லாதவர்கள் அனுப்பும் இணைப்பையும் ஆசைகாட்டி வரும் இணைப்பையும் எந்தச் சூழலிலும் பயன்படுத்தக் கூடாது.

3. புதையல் இருக்கிறது; வாரிசு இல்லாத சொத்து இருக்கிறது; உங்கள் தொலைபேசி எண்ணிற்கோ, மின்னஞ்சல் முகவரிக்கோ, பெயருக்கோ, பரிசு விழுந்திருக்கிறது. அதனைப் பெற முன்பணம் செலுத்துங்கள் எனக் கேட்கும் எதனையும் ஏற்காதீர்கள். அப்படிக் கிடைக்கக் கூடிய பணம் தேவைப்படும் சமூகச் சூழல்களும் தொண்டு நிறுவனங்களும் போர் மற்றும் கலவரங்களால் பாதிக்கப்பட்ட நாடுகள் என அத்தகைய பணம் தேவைப்படுவோர் எண்ணற்றோர் உண்டு. நம்மைப் போன்ற தனி நபரைத் தேடி அவற்றை ஒப்படைக்க வேண்டிய அக்கறை, மோசடிப் பேர்வழிகளைத் தவிர வேறு யாருக்கும் இருக்க முடியாது.

4. சூதாட்டம் உட்பட சில குறிப்பிட்ட விளையாட்டுக்கள் விளையாடினால் அதிக பணம் ஈட்டலாம் என்றும் நான் வெற்றிபெற்று நிறைய பணம் சம்பாதித்தேன் என்றும் விளம்பரங்கள் வருகின்றன. அவற்றை நம்பி, அந்த விளையாட்டுகளில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஒரு தனி மனிதன், பல திறமைசாலிகள் சேர்ந்து உருவாக்கிய விளையாட்டுச் செயலிகளை வெற்றி கொள்வது சாத்தியமில்லை. அதில் பணம் இழப்பது உறுதி.

5. கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பொருள்கள் வாங்குவது, கூடுதல் வட்டி தருகிறோம் என்பதை நம்பி முதலீடு செய்வது போன்றவற்றில் ஆபத்து உண்டு. அவையெல்லாம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் திட்டம்தான். எந்த நிறுவனமும் முதலாளியும் நட்டத்திற்கு விற்பனை செய்வதில்லை. நமக்குத் தேவையானவற்றை விளம்பரங்களின் மூலம் அறிந்து கொண்டு வாங்கலாம். ஆனால், தள்ளுபடியில் கிடைக்கிறது; சலுகை விலையில் கிடைக்கிறது; இலவசமாகக் கிடைக்கிறது என்ற அடிப்படையில் தேவையற்ற பொருட்களை வாங்குவது வீணே!

மின்னணுப் பரிவர்த்தனை முறையில் பின்பற்ற வேண்டிய செலவுக் கட்டுப்பாடுகளும் மோசடிகளுக்குள் சிக்காமலிருக்கப் பின் பற்ற வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைள் பலவுண்டு. அவற்றை முழுமையாக அறிந்து, முழுமையாகப் பின்பற்ற வேண்டும். நமது பணத்தைச் சரியாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு நம்மைத் தவிர யாருக்கு அதிகம்?

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *