செய்திகள் நாடும் நடப்பும்

கல்விப் புரட்சியில் செயற்கை நுண்ணறிவு: அரசியல் கட்சிகளின் தயக்கம்


வை–மை வரும் நல்ல தலைமை – பாகம் 8: ஆர்.முத்துக்குமார்


மறைந்த அரசியல் பிரமுகர் திடீரென சமூக வலைதளங்களில் தோன்றி தத்ரூபமாக இன்றைய அரசியல் பேசுகிறார். தன் மகனுக்கும் வாக்கு சேகரிக்கிறார்! இது வீடியோ புரட்சி என்பது புரிந்தது தான். ஆனால் இப்படி தத்ரூபமாக அங்க அசைவுகளும் முக பாவங்களும் அவரது பழைய வீடியோவை வைத்து செய்தது என்றால் தற்சமய சங்கதிகள் பேசும்போது மாற்றம் தெரியும் அல்லவா?

இது செயற்கை நுண்ணறிவு புரட்சி: இன்றைய தலைமுறையின் புதிய வரவு! அடுத்த சில வருடங்களில் மனித சமுதாயத்தையே புதிய திசையில் அழைத்துச் செல்ல இருக்கும் யுகப் புரட்சியும் ஆகும்.

2022ல் சாட் ஜிபிடி என்ற ஏஐ சமாச்சாரம் மெல்ல நம் கணினிகளில் நுழைந்தவுடன் அட பிரமாதமாக கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆய்வு அறிக்கைகள் தயார் செய்து கொடுக்கிறதே அதுவும் நொடிப்பொழுதில் என வியந்தோம்.

இது கூகுள் தேடல் விவகாரத்தின் அடுத்த வாரிசு என யோசித்துக் கொண்டிருக்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வீடியோ, ஓவியங்கள் பெரிய தரவுகளில் சாப்ட்வேர் எழுதப்பட்டதில் உள்ள தவறுகள், அதை திருத்தம் செய்வது வரை எல்லாமே ஏ.ஐ. என்று வந்துவிட்டது.

சர்வீசுக்கு போன் செய்து தொடர்பு கொண்டால் பேசுவது தொலைபேசி ஆப்பரேட்டர் கிடையாது – ஏ.ஐ. தொழில்நுட்ப வல்லமையாகும்.

முதல் நான்கு கேள்விகளில் பதில் கிடைத்து விட்டால் அதோடு செயற்கை நுண்ணறிவு நிறுத்திக் கொண்டு விட்டு இதற்கு மேல் விபரங்களை மனித பணியாளர் தருவார் என கூறிவிட்டு அதுவே சும்மா இருக்கும் ஒருவரிடம் இணைப்பை தர அடுத்த கட்ட கேள்வி பதில் தொடர நுகர்வோருக்கு உரிய திருப்தியான தீர்வு வருகிறது.

விரைவில் நமது செயற்கை நுண்ணறிவு உரிய கேள்விகளுக்கு பதிலை கோரும் நாள் வெகு தொலைவில் இல்லை!

இப்படி தொடரும் ஓரு புது யுகப்புரட்சியை எத்திசையில் வர இருக்கும் ஆட்சியாளர்கள் கொண்டு செல்ல இருக்கிறார்கள்? அது பற்றிய தெளிவான தங்களது கருத்துக்களை பதிவு செய்யவில்லை.

தேசிய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் செயற்கை நுண்ணறிவு, ரோபாடிக் படிப்புகளுக்கு உரிய முக்கியத்துவம் தருவோம் என உறுதி தந்து இருக்கிறார்கள்.

ஆனால் பள்ளிகளில், கல்லூரிகளில் சாட் ஜிபிடி பயன்பாடுகள் பற்றியும் பாடபுத்தகத்தில் அதுபற்றிய பாடமும் இருக்குமா? என்பது பற்றி எந்த அறிவிப்பும் கிடையாது.

ஏ.ஐ. எதிர்காலத்தை முற்றிலும் மாற்றி அமைக்கப் போவது உறுதி என யுனெஸ்கோ சமீபத்தில் அவர்களது அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் அறிவிப்பாகவே கூறிவிட்டது.

ஐக்கிய சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு தான் UNESCO. இது ஐ.நா. சபையின் அதிமுக்கிய அங்கமாகும்.

யுனெஸ்கோவின் முக்கிய பணியே கல்வி, அறிவியல், கலாச்சாரம் முதலியவற்றை மனித பாதுகாப்புக்கும் நிலையான வளர்ச்சிக்குமான சர்வதேச ஈடுபாடுகள், ஒத்துழைப்புக்கு எடுக்கப்படும் முடிவுகளை ஊக்குவிக்கும் அமைப்பாகும்.

தவறான சிந்தனை ஏதேனும் நுழையுமேயானால் அதை சீர் செய்ய ஆய்வுகள், சர்வதேச விவாதங்கள் நடத்தி அதில் இருந்த திட்ட வரைவுகளை உருவாக்குகிறது.

அவர்கள் சமீபத்தில் கூறியிருப்பது இனி செயற்கை நுண்ணறிவு தான் கல்வியில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் அதைக் கொண்டே கல்வி முறைகளை புதுப்பிப்பது தான் சரியான முடிவாக இருக்கப்போகிறது எனக் கருதுகிறது.

அப்படி என்றால் நமது சங்ககால கல்வி முறையை மாற்றம் கொண்டு வர செயற்கை நுண்ணறிவா? என நமக்கு எரிச்சல் தரலாம்!

ஆனால் பல நூற்றாண்டு தகவல்கள், கல்வி முறைகள், பல தேசத்து நடைமுறைகள் என பல சமாச்சாரங்களை நிமிடங்களில் ஆய்வு செய்து புதுப்புது திட்ட வரைவுகளை நடுநிலையோடு நல்ல தீர்வுகளை தரும் சக்தியாக அவை இருப்பதை உணர வேண்டும்.

அப்படி ஓர் நடுநிலையான சக்தி உருவாக நடப்பு ஆண்டு முதலே பணியாற்றும் நல்லாட்சி வரவேண்டும்.

கடந்த சில மாதங்களாக ஆழமான போலிகள், அதாவது deep fakes நடிகர், நடிகைகளின் வாழ்வில் பல புதுப்புது சோதனைகள் ஏற்படுத்திய செய்திகள் சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியாக இருந்தது.

அவை இனியும் தொடரலாம்; அதைத்தடுப்பது பற்றியும் யோசித்தாக வேண்டும்.

ஆனால் அவை நம்மை திசை திரும்பி விடக்கூடாது. செயற்கை நுண்ணறிவு கற்கால ஓவியங்களுக்கும் நவீன டிஜிட்டல் செல்பி படங்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகளுக்கு இணையான இன்றைய கல்விக்கான இடைவெளி இருக்கிறது.

நாம் குருகுல பாடத்திட்டத்தை மறக்க ஆங்கிலேயர் ஏற்படுத்திய பள்ளிக்கட்டுமானம் உதவியது, இன்று அதுவே நமக்கு சிறந்ததாக இருக்கிறது.

ஆனால் செயற்கை நுண்ணறிவு வீட்டில் இருந்தே படித்த கால கட்டத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு வருங்கால கல்வியியல் சமாச்சாரங்களை உருவாக்கும், உருவாக்க வேண்டும் அல்லவா?

அப்படி வர இருக்கும் புரட்சியை மத்திய மாநில அரசுகள் மனதில் கொண்டு புதிய கல்வி கொள்கையில் புதுமைகள், மாற்றங்கள் கொண்டு வரவேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *