செய்திகள்

ஜப்பான் பனிப்புயல்: 130 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

டோக்கியோ, ஜன. 20–

ஜப்பானில் வீசிய கடும் பனிப்புயலில் சிக்கி, விரைவு நெடுஞ்சாலை ஒன்றில் சென்றுகொண்டிருந்த சுமார் 130க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாயின.

ஜப்பானில் வீசிய கடும் பனிப்புயலில் சிக்கி விரைவு நெடுஞ்சாலை ஒன்றில் சென்றுகொண்டிருந்த சுமார் 130 க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாயின. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்த கார்களில் சிக்கிக்கொண்ட 200 பேரை மீட்கும் பணி நடந்து வருகிறது.

நேற்று நண்பகல் வீசிய இந்த அதிதீவிர பனிப்புயல் மியாகி மாகாணத்தில் உள்ள தோஹோகு நெடுஞ்சாலையை போர்வையை கொண்டு மூடியதுபோல் மாற்றிவிட்டது. இதில் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த 130க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு ஒரே குவியலாக காட்சியளித்தன.

நூற்றுக்கணக்கான வாகனங்கள்

மேலும், வாகனங்களை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்த முடியாததால், அவை பனியால் மூடப்பட்டுவிட்டன. சமீப வாரங்களில் ஜப்பான் கடுமையான பனிப் புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாட்டின் சில பகுதிகளில் சராசரியாக காணப்படும் பனிப்பொழிவை விட இருமடங்கு அதிகமாக தாக்கம் பதிவாகியுள்ளது.

பனிப்புயல் குறித்த அச்சம் காரணமாக இந்த விரைவுச்சாலையில் ஏற்கனவே மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கட்டுப்பாடு விதித்திருந்தாலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளன.

இந்த நிலையில், பனிப்புயல் இந்த விரைவுச்சாலையை கடக்கும்போது, அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசியதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் உணவு மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் சேவையையும் இந்த பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. டோஹோகு பிராந்தியத்தில் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த பிராந்தியத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 40 சென்டி மீட்டர் வரை பனி பொழிய வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *