போஸ்டர் செய்தி

மேலும் 4 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி கேட்டிருக்கிறோம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Spread the love

* 2721 செவிலியர்கள் * 1782 கிராம சுகாதார செவிலியர்

* 96 மருத்துவ அலுவலர்கள் * 524 ஆய்வக நுட்புனர்கள் உட்பட

5224 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினார்

32 கண்பரிசோதனை மையங்களை துவக்கி வைத்தார்

ஒரே ஆண்டில் பெற்ற 9 மருத்துவ கல்லூரிகள் மூலம் கூடுதலாக 900 எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்கும்

8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னை, டிச.2–

அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 4 புதிய மருத்துவ கல்லூரிகள் துவங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இந்த ஒரே ஆண்டில் 9 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றிருக்கிறோம். இதன் மூலம் புதிதாக 900 மருத்துவ இடங்கள் கிடைக்கும். 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னையில் இன்று 2721 செவிலியர்கள், 1782 கிராம சுகாதார செவிலியர்கள் உட்பட 5224 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று காலை நடைபெற்றது.திருநங்கை அன்புராஜுக்கு முதல் பணி நியமன ஆணையை வழங்கிய முதலமைச்சர், 32 ஆரம்ப சுகாதார நிலையங்களில் காணொலி கண் பரிசோதனை மையங்களை திறந்து வைத்தார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வரவேற்று பேசினார்.

இன்று (2–ந் தேதி) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், பணிநியமன ஆணைகளை வழங்கி, தமிழ்நாடு இணையவழி கண் – இயல் வலைதளம் மற்றும் 32 மாவட்டங்களில் தொலைதூர கண் பரிசோதனை மையங்கள் ஆகியவற்றை தொடங்கி வைத்து பேசியதாவது:–

தமிழக மக்கள் அனைவரும் நோயற்ற வாழ்வு வாழ, நல்ல பல திட்டங்களை நிறைவேற்றி வரும் அதே நேரத்தில், இந்தத் திட்டங்களின் பயன்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும் எனில், துணை சுகாதார மையங்கள் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை தேவையான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இருக்க வேண்டியது அவசியம் என்றார் அம்மா.

அம்மாவின் வழியில் செயல்படும் எனது தலைமையிலான அரசு, மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முதன்மை மாநிலம்

சுகாதாரத் துறையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாகவும், முன்மாதிரி மாநிலமாகவும் திகழ்ந்து வருகிறது. அம்மாவின் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய பல்வேறு திட்டங்களை சுகாதாரத் துறையில் செயல்படுத்தி வருவதுதான் இதற்கு காரணம். அம்மாவின் வழியில் செயல்படும் அரசு, சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, மக்களின் நல வாழ்வுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறைக்கு 75 ஆயிரத்து 268 கோடியே 72 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

மிகச் சிறந்த மனிதவளம் மற்றும் மருத்துவ கட்டமைப்பை ஏற்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தாய் சேய் நலம் மற்றும் குடும்ப நலத் திட்டங்களை செயல்படுத்துவதிலும், நோய்களை கட்டுப்படுத்துவதிலும் இந்த அரசு திறம்பட செயல்பட்டு வருகிறது.

8 ஆண்டுகளில் கூடுதலாக 1350 இடங்கள்

மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்பது அம்மாவினால் அறிவிக்கப்பட்ட கொள்கையாகும். இதன்படி, சிவகங்கை, திருவண்ணாமலை, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகம், கோயம்புத்தூர் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை, புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய ஆறு இடங்களில், 700 மருத்துவ பட்டப்படிப்பு இடங்களுடன், அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே செயல்பட்டு வரும் 10 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 650 மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆக கடந்த 8 ஆண்டுகளில் கூடுதலாக 1,350 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டு, 1350 பேர் கூடுதலாக மருத்துவம் படிக்கக்கூடிய வசதியை அம்மாவினுடைய அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

மேலும் 900 மருத்துவ சீட்கள்

அதுமட்டுமல்லாமல், அம்மாவின் அரசு இந்த ஆண்டு ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. எனக்கு முன்னால், சுகாதாரத் துறை அமைச்சர் சொன்னதைப் போல, இந்த ஆண்டில் மட்டும் 9 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசின் ஒப்புதலை பெற்றுள்ளது. இது தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு மைல்கல் என்று சொல்லலாம். ஒரே ஆண்டில் 9 மருத்துவக் கல்லூரிகளை பெற்ற ஒரே அரசு அம்மாவினுடைய அரசு என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. வரும் ஆண்டுகளில் மேலும் 900 மருத்துவப் படிப்பு இடங்கள் அதிகரிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படி 9 மருத்துவக் கல்லூரிகள் துவங்கியதன் விளைவாக, கூடுதலாக 900 பேர் மருத்துவர்களாக படிக்கக்கூடிய வாய்ப்பை அம்மாவினுடைய அரசு உருவாக்கியிருக்கின்றது.

இது வரை ஒப்புதல் பெறப்பட்டுள்ள புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும், மருத்துவப் பணியாளர்களை நியமிக்கவும் துரித நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். உடனடியாக மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்தவுடனேயே அந்த மருத்துவக் கல்லூரிக்கு தேவையான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக உடனடியாக ஒப்பந்தம் கோரப்பட்டு நடைமுறைப்படுத்துகின்ற அரசு அம்மாவினுடைய அரசு என்பதை செயலிலே காட்டியிருக்கின்றது.

மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள்

மேலும், 4 மருத்துவக் கல்லூரிகளை கேட்டிருக்கின்றோம். அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைப்பதற்கு மத்திய அரசிடம் நாங்கள் அனுமதி கேட்டிருக்கின்றோம் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன்.

5 ஆண்டுகளாக தேசிய விருதுகள்

மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிக அளவிலான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதில் மிகச் சிறப்பாக செயல்பட்டதற்காக, மத்திய அரசின் தேசிய விருதுகளை தமிழ்நாடு அரசு கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து பெற்று சாதனை படைத்திருக்கின்றது என்பதை இந்த நேரத்தில் நினைவுகூற கடமைப்பட்டிருக்கின்றேன்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களை அவ்வப்போது நிரப்ப வேண்டும் என்பதற்காக தனியாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், அம்மாவினால் 2012ம் ஆண்டு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த வாரியத்தால் இதுவரை 12,823 மருத்துவர்கள், 10,085 செவிலியர்கள் உட்பட 27,436 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தியை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

5224 பேருக்கு பணி ஆணை

தற்போது மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் 2,721 செவிலியர்கள், 1,782 கிராம சுகாதார செவிலியர்கள், 96 மருத்துவ அலுவலர்கள், 524 ஆய்வக நுட்புனர்கள் நிலை-2 மற்றும் 77 இயன்முறை சிகிச்சையாளர்கள் நிலை–2 என மொத்தம் 5,200 நபர்களை தேர்வு செய்துள்ளது. இவர்களுடன், பொது சுகாதாரத் துறையில் கருணை அடிப்படையில் 24 இளநிலை உதவியாளர்களுக்கும் பணி நியமன ஆணைகள் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக வழங்கப்பட உள்ளன. ஒரே நேரத்தில் சுமார் 5,224 நபர்களுக்கு இந்த நிகழ்ச்சியின் வாயிலாக பணி ஆணை வழங்கப்படுகிறது.

இன்று பணி ஆணை பெறவுள்ள நீங்கள் அனைவரும் ‘‘மக்களுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவை” என்று கருதி, ஏழை எளிய மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடமாடும் மருத்துவனை

கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவர்கள் வாழும் பகுதிக்கு அருகிலேயே தரமான மருத்துவ சேவை கிடைக்க இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிராமப்புற மக்களின் மருத்துவ வசதிக்காக இந்த அரசால் ஏற்படுத்தப்பட்ட நடமாடும் மருத்துவனைத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், கடந்த 8 ஆண்டுகளில் 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், 221 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இது தவிர, 165 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 30 படுக்கை வசதி, ஸ்கேன் போன்ற வசதிகளுடன் 190 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் நிலை உயர்த்தப்பட்டுள்ளன.

கண் பரிசோதனை மையம்

இதன் தொடர்ச்சியாக, 32 ஆரம்ப சுகாதார நிலையங்களில், நவீன இணையவழி கண் பரிசோதனை மையங்கள், அனைத்து மருத்துவ கருவிகளுடன் மாவட்டத்திற்கு ஒன்று வீதம், ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்மையங்களில் பணிபுரியும் கண் பரிசோதகர்கள் நோயாளிகளை பரிசோதித்து அதன் விவரங்களை வலைதள சேவை மூலம், மாவட்ட தலைமை மருத்துவமனை அல்லது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கண் மருத்துவர்களுக்கு அனுப்பி, அவர்கள் வழங்கும் அறிவுரையின் பேரில் மருத்துவ சிகிச்சை வழங்குவார்கள். இந்த நடைமுறையால் சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை நோய், கண்புரை நோய், கண் நீர் அழுத்த நோய் ஆகிய நோய்களுக்கு, கிராமப் பகுதி மக்கள் அவர்கள் வாழும் பகுதிக்கு அருகிலேயே உயர் சிகிச்சை பெற இயலும். இந்த வசதி 5 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு சேவை செய்யும் இந்த மையங்களை துவக்கி வைப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய தினம் பணி ஆணைகளை பெற்று மருத்துவ சேவை செய்ய உள்ள உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு மருத்துவ நிலையங்களுக்கு வரும் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுகின்ற புனிதமான சேவையை செய்ய நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உணர்ந்து பணிபுரிய வேண்டும் என்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் புதிதாக 9 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க விருக்கின்றன. இதன்மூலம், மருத்துவத் துறையில் 9 மருத்துவக் கல்லூரிகளிலும் ஏறக்குறைய 8,000 பல்வேறு பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறோம் என்ற செய்தியையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொண்டு, மிகச் சிறப்பாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்த முதல்வருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *