செய்திகள் வாழ்வியல்

மேலூர் திருச்சுனை அகஸ்தீஸ்வரர் கோவில்

மேலூர் திருச்சுனை அகஸ்தீஸ்வரர் திருக்கோவில், திருச்சுனை, மேலூர் தாலுகா, மதுரை மாவட்டம்.

இது சுமார் 600 வருட பாரம்பரியம் கொண்டது. இத்திருத்தலம் மதுரையிலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு பாறையின் மீது நீரைத் தெளித்து அது களிமண் போன்று நெகிழ்வானவுடன் அதை சிவலிங்கமாக அகத்தியர் மாற்றி பூஜை செய்து வழிபட்ட தலம். இங்குள்ள சுனையின் நீரால் இதை எடுத்து செய்ததால் இந்த தலத்திற்கே திருச்சுனையூர் என்ற பெயர் ஏற்றபட்டது. பாறையை நெகிழச் செய்த இடம் என்பதால் இங்கு வந்து வீற்றிருக்கும் ஈஸ்வரனை வழிபட எத்தகைய மனக்குழப்பங்களையும் நீக்கி தெளிவு பெற அருள்புரிவார் என்பது ஐதீகம்.

அகஸ்தியர் வழிபட்ட தலம் என்பதால் அவருக்கு தனி சன்னதி உண்டு. தெற்கு நோக்கி அமைந்துள்ளார். மேலும் அநேக கோவில்களில் சூரியன் தனித்து இருப்பார். சில கோவில்களில் நவகிரக மண்டபத்தில் மனைவி உஷாவுடன் இருப்பதை காணலாம். ஆனால் இத்தலத்தில் சூரியபகவான் தன் துணைவி உஷாதேவியுடன் நுழைவு வாயில் அருகிலேயே அருள்பாலிக்கின்றார்.

சிவபார்வதி திருமணம் வடதிசையில் அமைந்துள்ள கயிலாயத்தில் நடைபெற்ற சமயத்தில் அனைவரும் வடதிசை நோக்கி சென்றதால் அந்த வடதிசை தாழ்ந்தது. அதை சரி சமன் செய்ய சிவபெருமான் தனது பக்தனான அகஸ்தியரை தென்திசைக்கு செல்ல கூறினார். அவரிடம் அகத்தியரே நீர் எந்த இடத்தில் எல்லாம் என்னை நினைத்து வழிபடுகிறீரோ அங்கு உமக்கு எங்கள் திருமணக் காட்சி தருவோம் என்று வரம் அருளினார். இந்த தலத்தில் அகஸ்தியர் இங்குள்ள குன்றின் மீது அமர்ந்து ஓய்வெடுத்து பின்னர் தீர்த்தத்தில் நீராடி, அந்த நீரையே பாறை மீது தெளித்து சிவலிங்கம் உருவாக்கி பூஜை செய்தார். அவர் வேண்டுகோளின்படி இங்கும் சிவபார்வதி திருமணக் கோலம் கண்டு ஆனந்தம் கொண்டார். எனவே தான் இன்றளவும் இந்த திருக்கோவிலில் அநேக திருமணங்கள் நடைபெறுகின்றன.

இங்குள்ள தீர்த்தக்குளம் அகஸ்தியர் தொட்டு பாறையையும் நெகிழ வைத்ததால் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த புனிதமான தீர்த்தத்தில் எந்த காலத்திலும் தண்ணீர் வற்றுவதே இல்லை என்பதும் மிகவும் அதிசயமாக கூறப்படுகிறது. பொதுவாக குன்றின்மீது குமரன்தான் அருள்பாலிப்பார். ஆனால் இங்கு சிவபெருமான் கிழக்காக அருள்பாலிக்கின்றார். அம்பாளாக பாடக வள்ளி வீற்றிருக்கிறார். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருக பெருமான், சண்டிகேஸ்வரர், நால்வருக்கும் தனித்தனி சன்னதி உண்டு. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிப்கோத்பவர், துர்க்கை அம்மன் ஆகியோர் அழகாக காட்சி தருகின்றனர்.

இங்கு வழிபட்டு தங்கள் கோரிக்கை நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கும் அம்மனுக்கும் அபிஷேக பூஜைகள் செய்து வஸ்திரம் சாத்தி அன்னதானம் செய்கின்றனர்.

பிரதோஷ நாட்கள், சிவராத்திரி, திருக்கார்த்திகை மற்றும் பண்டிகை தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தினமும் காலை 8.30 மணி முதல் பகல் 11.30 மணி வரையும் மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்களின் வருகைக்காக கோவிலில் இரண்டு கால பூஜைகள் செய்யப்பட்டு திறந்து உள்ளன.

வேத வேள்விரிய நிந்தனை செய்து உழல்

ஆதம் இல்லி அமணொடு தேரரை

வாதில் வென்று அழிக்கத் திருவுள்ளமே ?

பாதி மாதுடன் ஆய பரமனே

ஞாலம் நின்புகழே மிக வேண்டும் தென்

ஆலவாயில் உறையும் என் ஆதியே

….ஓம் நமச்சிவாய

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில், திருச்சுனை, மேலூர் தாலுகா, மதுரை மாவட்டம் மதுரை – திருச்சி செல்லும் வழியில் கருங்காலக்குடியில் இருந்து 2கிலோ மீட்டர் தொலைவில் இத்திருத்தலம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *