செய்திகள் முழு தகவல்

உள்ளூர் ஓமியோபதி மருத்துவராக இருந்து ஊரறிந்த மருத்துவராக மாறிய ஜெயக்குமார் !

2020 ஆம் ஆண்டு தொடங்கிய போதே, கோவிட்-19 பெருந்தொற்று குறித்த அச்சம் பல நாடுகளில் இருந்து வந்த வண்ணம் இருந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை வெளிநாட்டில் இருந்து வந்தவர் மூலமாக, பிப்ரவரி மாதம்தான் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மார்ச் 24 முதல் கொரோனா ஊரடங்கு முழுமையாக நடைமுறை படுத்தப்பட்டது. முதலில் 21 நாட்களும் அடுத்து 14 நாட்கள் என முழுமையான ஊரடங்காக இருந்தது.

பொதுவாக, சாதாரண மனிதர்கள் மட்டுமே தடைகளை இடர்களாக கருதுவார்கள். சாதனை மனிதர்கள் எப்போதும் தடைகளையே படிகளாக்கி முன்னேறுவார்கள் என்பது காலம் காலமாக நிரூபிக்கப்பட்ட பேருண்மை. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டின் கோவிட்-19 தடை காலங்களில், ஆலந்தூர் பகுதியில் மருத்துவமனை நடத்தும் ஓமியோபதி மருத்துவர் ஜெயக்குமார், முதலில் ஆலந்தூர் பகுதியில் தனது நோய் எதிர்ப்பாற்றல் மருந்துகளை இலவசமாக மக்களிடம் வினியோகிக்கத் தொடங்கினார்.

சிக்கன் குனியா நோய் தொற்று தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தபோதே, இதற்காக ஒரு மருத்துவ வாகனம் தயார் செய்து, வீடு வீடாக மருத்துவமனை அருகில் உள்ள தெருக்களில் இலவசமாக நோய் எதிர்ப்பாற்றல் மருந்து வினியோகம் செய்த அனுபவம் இருந்தது. அது இப்போதும் கைகொடுத்தது. ஒரு நாளைக்கு எத்தனை தெருவில் இலவச மருந்து வினியோகம் செய்ய முடியும் என திட்டமிட்டு, மருத்துவ வாகனம் மூலம், அந்தந்த தெருவிற்கும் சென்று, டாக்டர் ஜெயக்குமார் மற்றும் அவருடைய மருத்துவ பணியார்கள் ஒலிபெருக்கி மூலம், அந்த பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் மருந்தின் பயன் செயல்பாடு, பயன்படுத்தும் விதம் குறித்து எடுத்து சொல்லி உள்ளனர்.

அதன் பின்னர், மக்களை முகக்கவசத்துடன் வரிசையில் வர வைத்து, கொரோனா தடுப்புக்கான உடலில் நோய் எதிர்ப்பாற்றலை தரும் ஓமியோபதி மருந்துகளை வினியோகம் செய்துள்ளனர். நன்றாக திட்டமிட்ட செயல் எதுவும் வெற்றியில் முடியும்தானே. அதேபோல், நாளொன்றுக்கு இத்தனை தெரு, இவ்வளவு பேருக்கு மருந்து என பல மாதங்கள் தொடர்ந்து இந்த சேவையை, மதன் ஓமியோ கிளினிக் மூலம் ஜெயக்குமார் தம்பதிகள் செயல்படுத்தி வந்தனர். தங்கள் மருத்துவமனைக்கு வரும் வாடிக்கையாளர்களிடமும், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்து மருந்து கொடுப்பதை தொடக்கத்திலேயே செயல்படுத்த தொடங்கினர்.

மத்திய அரசின் ஆயூஷ் அமைப்பின் வழிகாட்டுதல்படி, சமூக இடைவெளியை கடைபிடித்து, ஹோமியோபதி டூ ஹோம் என்ற முறையில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு ஆர்சானிக் ஆல்ப்-30 ஓமியோபதி மருந்தை ஜூலை மாதத்துக்குள்ளாகவே கொடுத்து டாக்டர் ஜெயக்குமார் தம்பதிகள் சாதனை படைத்தனர். இந்த சேவை பத்திரிகைகள் வாயிலாக, புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு தெரிய வந்தது. இதனையடுத்து, புதுவை அரசின் சுகாதாரத்துறை டாக்டர் ஜெயக்குமாரை அழைத்து , விவரங்களை கேட்டறிந்தனர். உடனடியாக, புதுவை மாநிலத்திலும் ஓமியோபதி மருந்து வினியோகத்தை செயல்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கேதான், உள்ளூர் மருத்துவர் ஊரறிந்த மருத்தவராக பரிணமித்த இடம். மற்ற மருத்துவர்கள் மட்டுமின்றி, பெரிய பெரிய மருத்துமனைகளும், சிறிய கிளினிக்குகளும் கூட , அரசு மருத்துவர்கள் தவிர்த்த பெரும்பாலான அனைத்து மருத்துவர்களும் கொராேனாவில் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடிவெடுத்து, மருத்துவமனைகளையும் கிளினிக்குகளையும் மூடி விட்டனர். திறந்திருந்த சில மருத்துவர்களும், நோய்த் தொற்று காலத்திலும் எப்படி சம்பாதிக்கலாம் என்பதிலேயே முனைப்பு காட்டி வந்தனர்.

ஆனால், அந்த நேரம்தான், மருத்துவர்களின் தேவை மக்களுக்கு அதிகமாக இருக்கிறது என்பதை அறிந்து, சேவை நோக்கத்தில் திட்டமிட்டார் டாக்டர் ஜெயக்குமார். அதற்கு மருத்துவரான அவருடைய மனைவியும், மருத்துவ பணியாளர்களும் ஒத்துழைப்புத் தந்தனர். அதன் விளைவு, சென்னை ஆதம்பாக்கத்தில் ஒருசில தெருக்களில் உள்ள மக்களுக்கு மட்டுமே அறிமுகமாகி இருந்த மதன் மருத்துவ கிளினிக்கும் டாக்டர் ஜெயக்குமார் தம்பதிகளும், உள்ளூரிலிருந்து ஊரறிந்த மருத்துவர்களாக பரிணமித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, டாக்டர் என். ஆர். ஜெயக்குமார் எம்.டி., பி.எச்.டி, அப்போது மக்கள் குரலுக்கு அளித்திருந்த நேரகாணல் வருமாறு:-

நாங்கள் சென்னை கிண்டி அடுத்த ஆதம்பாக்கத்தில் கடந்த 30 ஆண்டுகளாக மதன் ஓமியோபதி கிளினிக் நடத்தி வருகிறோம். அதனால், இந்த பகுதி மக்களிடம் பரவலாக அறிமுகம் உள்ளது. இதனால், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் சிக்கன் குனியா பாதிப்பு ஏற்பட்டபோது, நாங்கள் இந்த பகுதியில் சிக்கன் குனியா வராமல் தடுக்கும் வகையில் தடுப்பு மருந்தை இலவசமாக கொடுத்தோம். அப்போது நல்ல பலன் இருந்தது. அதனால், மக்களிடம் நம்பிக்கை ஏற்பட்டது.

இதனையொட்டி, தற்போது, கொரோனா நோய் பாதிப்பு சீனாவில் ஏற்பட்டதிலிருந்து, நோயின் தன்மைகளை கவனித்து வந்தோம். இந்நிலையில் இந்தியாவில் பிப்ரவரி மாதம் 3 வது வாரத்திலேயே ஆயூஷ் அமைப்பு, ஓமியோபதி மருந்தான ஆர்சானிக் ஆல்ப்-30 மருந்தை சிபாரிசு செய்திருந்தது.

இதனையடுத்து, மார்ச் மாதம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழக அரசும் ஏப்ரல் 23 ந்தேதி ஆரோக்கியம் என்ற பெயரில் அரசு ஆணையை வெளியிட்டது. அதில், ஓமியோபதி மருந்தான ஆர்சானிக் ஆல்ப்-30 என்ற மருந்தை, நோய் எதிர்ப்பு தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என்று கூறி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, நாங்கள் ஒரு செயல்திட்டத்தை வகுத்து, ஆதம்பாக்கம் பகுதியில் இலவசமாக மருந்து கொடுப்பது என திட்டமிட்டோம். எங்கள் இலக்கு ஒரு லட்சம் பேருக்கு மருந்து கொடுப்பது என்ற பெரும் விநியோக திட்டமாகும்.

முதல்கட்டமாக, ஏப்ரல் 30 ந்தேதி ஆதம்பாக்கம்

காவல் நிலையத்தில் கடிதம் கொடுத்து, அவர்கள் கேட்டுக்கொண்டபடி, மருந்து விநியோகத்தை தொடங்கினோம். அடுத்து இங்குள்ள நியூகாலனி தொடங்கி, ஒவ்வொரு பகுதியும் தொடர்பு விட்டுவிடாமல், தெருதோறும் சமூக இடைவெளியுடன் “ஹோமியோபதி டூ ஹோம்” என்ற முறையில் மக்களை முகக்கவசம் அணியவைத்து, கைகளில் சேனிடைசர் மூலம் சுத்தம் செய்ய சொல்லி விநியோகத்தை தொடங்கினோம்.

முதலில், மருந்தை எப்படி, எந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து, மக்களிடம் ஒலிபெருக்கி மூலம் விளக்கி கூறி விட்டு, மத்திய அரசின் ஆயூஷ்அமைப்பு இந்த மருந்தை பயன்படுத்தலாம் என கூறி இருப்பதையும் எடுத்துச்சொன்னோம். இதனால், மக்கள் நம்பிக்கையுடன் வாங்கி பயன்படுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, ஊழல் ஒழிப்பு துறையினருக்கும், அடுத்து நந்தனம் தீயணைப்பு நிலையத்தில் பணியாளர்கள் குடும்பத்தினர் உள்ளிட்ட 2500 பேருக்கு என தொடர்ந்து அரசு அலுவலர்கள் மட்டுமின்றி, ஜெம் கிரானைட்ஸ் நிறுவன ஊழியர்கள், சோழிங்கநல்லூரில் தோல் நிறுவன ஊழியர்கள் என பெரிய நிறுவனங்களிலும், அங்குள்ள ஊழியர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் விநியோகம் செய்தோம்.

இதுவரை, நாங்கள் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் வரையில் இந்த மருந்தை இலவசமாக விநியோகித்துள்ளோம். இந்த தடுப்பு மருந்தை பயன்படுத்திய பகுதிகளில் நோய் தொற்று பரவல் குறைவாக இருப்பதையும், எங்கள் ஆய்வில் காண முடிந்தது.

அந்த வேளையிலேயே பல்வேறு செய்தி தொலைக்காட்சிகளிலும் கூட இந்த செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, புதுவையில் இருந்து சுகாதாரத்துறை சார்பின் எனக்கு அழைப்பு விடுத்து, அவர்கள் வாகனத்திலேயே அழைத்துச் சென்றனர். நான் இங்கு விநியோகம் செய்த முறை, அந்தந்த பகுதியிலுள்ள அமைப்புகளின் நிர்வாகிகள் மூலம் விநியோகித்து, அவர்களிடம் கையெழுத்தும் பெற்றிருந்தோம். இந்த புள்ளிவிவரங்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் படங்களுடன் தொகுத்து வைத்திருந்தேன்.

அவற்றை, புதுவை முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் விளக்கமாக எடுத்துக்கூறினார். அது அனைத்து பத்திரிகைகளிலும் வெளியானது. அனைத்தையும் விளக்கமாக கேட்டுக்கொண்ட முதல்வர் நாராயணசாமி இதனை புதுவை மாநிலத்தில் செயல்படுத்துவது குறித்து விரைவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்ததோடு நில்லாமல், உடனடியாக சில நாட்களிலேயே புதுவையில் அதனை செயல்படுத்தவும் செய்தார் என்று ஜூன் மாதம், மக்கள் குரல் நாளிதழுக்கு அளித்த தொலைபேசி நேர்காணலிலேயே டாக்டர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

ஆம் தடைக் கற்கள் எல்லாமே, சாதனையாளர்களுக்கு படிக் கற்கள்தானே.. அது மருத்துவர் ஜெயக்குமாருக்கும் பொருந்தும்தானே.

மா. இளஞ்செழியன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *