செய்திகள்

பெண்களுக்கு உரிமை, பாதுகாப்பு, தன்னம்பிக்கை, தைரியத்தைச் சொல்லி பெற்றோர் வளர்த்தால் புதுமைப் பெண்களை உருவாக்க முடியும்

Spread the love

சென்னை, ஜன.25-

பெண்களுக்கு உரிமை, பாதுகாப்பு, தன்னம்பிக்கை, தைரியம் ஆகியவை வருவது அவர்களின் பெற்றோர் வளர்க்கும் முறையிலிருந்தே ஆரம்பமாகிறது. பெற்றோர் தங்களது பெண் குழந்தைகளுக்கு மிகப் பெரிய பலமாகவும் பாலமாகவும் இருந்து அவர்களின் சாதனைகளுக்கு ஆணி வேராக இருந்து உதவினால் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று கூறும் புதுமைப்பெண்களை உருவாக்க முடியும்.

நம் நாட்டின் முதல் பெண் பிரதமராக இந்திரா காந்தி 1966 ம் ஆண்டு ஜனவரி 24 ந் தேதி அன்று பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற அந்த தினத்தை அடிப்படையாகக் கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசு ஆகியவை இணைந்து 2008 ம் ஆண்டில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை அறிவித்தது. அதைத்தொடர்ந்து 2009 ம் ஆண்டு முதல் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் நேற்று தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. அதையொட்டி கல்லூரி மாணவிகள் பெண் குழந்தைகளின் முன்னேற்றம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கான வழிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

பெண்களை தெய்வமாகக் கொண்டாடும் இதே இந்தியாவில்தான் அவர்களை வன்கொடுமைகளுக்கும் ஆளாக்குகின்றனர். நாம் எவ்வளவுதான் பெண்ணியம் குறித்துப் பேசிக் கொண்டிருந்தாலும் இன்றளவும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுதான் வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் அவர்களின் வளர்ச்சி, உரிமை, பாதுகாப்பு ஆகியவற்றுக்காக ஆண்களும் பெண்களும் ஆதரவளித்து குரல் கொடுத்து போராட்டம் நடத்தி பல்வேறு உரிமைகளைப் பெற்று வருகின்றனர் என்பது மறுக்க முடியாது.

பெண் குழந்தைகளைப் பாதுகாப்பது, பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பது, பெண் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான, பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தருவது, பெண் குழந்தைகளுக்கு உரிமைகள் பெற்றுக்கொடுப்பது, பெண் குழந்தைகளுக்கு எதிரான சமூக கொடுமைகளைத் தடுப்பது, ஆண், பெண் பாகுபாட்டைத் தடுப்பது போன்றவை குறித்து அனைவரிடத்திலும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.

1996 ம் ஆண்டு முதல் இன்று வரை பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டேதான் வருகிறது.

பெண் குழந்தைகளுக்கு சீர் செய்து திருமணம் செய்து கொடுக்க மிக அதிகமாக செலவாகிறது என்ற ஒரே காரணத்தால் ஆண்களும் பெண்களும் பெரும்பாலும் ஆண் குழந்தைகளை விரும்புகின்றனர். இதனால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டேதான் வருகிறது. .

இதனால் கருவில் உள்ள குழந்தை ஆண் குழந்தையா? அல்லது பெண் குழந்தையா? என கண்டறிந்து அதனை கருவிலேயே அழித்துவிடுவதும் நடந்துகொண்டு இருந்தது.

ஜெயலலிதா கொண்டு வந்த தொட்டில் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் பலன்

கருவில் உள்ள குழந்தை ஆண் குழந்தையா? அல்லது பெண் குழந்தையா? என கண்டறிந்து சொல்வதற்கு இந்திய மருத்துவத் துறைக்கு இந்திய அரசு தடை விதித்திருப்பதாலும் தமிழகத்தை 15 ஆண்டுகள் ஆட்சிசெய்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த தொட்டில் குழந்தை பாதுகாப்பு திட்டத்தினாலும்

இப்போது இந்த நிலைமை மாறிப் பெண் குழந்தைகளுக்கான வரவேற்பு அதிகமாகவே காணப்படுகிறது.

ஒருபுறம் பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதனை புரிகிறார்கள். இதற்காக அவர்கள் தங்களை சிறு வயதில் இருந்தே தயார் படுத்திக் கொண்டு வருகின்றனர்.

மற்றொரு புறம் பெண் குழந்தைளுக்கு எதிராக பாலியல் வன்முறை சம்பவங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த நிமிடம் கூட ஒரு பெண் குழந்தை பாலியல் தொந்தரவை அனுபவித்துக் கொண்டிருக்கிறதோ என்ற எண்ணம் அனைவரிடத்திலும் தோன்றும் வண்ணம் உள்ளது.

பெண் குழந்தைகள் கோரிக்கைகளை காது கொடுத்துக் கேளுங்கள்

எனவே இந்த நிலைமைகள் மாறவும் பெண் குழந்தைகளின் முன்னேற்றம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கான வழிகள் குறித்தும் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நமது மக்கள் குரல் பத்திரிகை பல்வேறு மாணவிகளிடம் கருத்துகள் கேட்டது.

அதன் விவரங்கள் பின்வருமாறு:-

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் ஊடக அறிவியல் துறையைச் சேர்ந்த மாணவி க.ஸ்ரீஅருணா கூறியதாவது:-

பொதுவாக தொடுதலிலேயே இரண்டு வகைகள் உள்ளன. அதிலும் பெண் குழந்தைகளை ஒருவர் தொடும்போது அது சரியான தீண்டலா அல்லது தவறான தீண்டலா என்பதைப் தெரிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு பெற்றோரும் ஆசிரியர்களும் விளக்கி அவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாலியல் தொடர்பான பாடங்களை ஆசிரியர்கள் ஆபாசமின்றி விளக்க வேண்டும். புகைப்படங்கள், கார்ட்டூன்ஸ் போன்றவை மூலமாகவும் விளக்க வேண்டும்.

தங்களுக்கு ஏற்பட்ட சில பிரச்சனைகளை குழந்தைகள் பெற்றோரிடம் பேச வருவார்கள். அப்போது குழந்தைகளைப் பேச விடாமல் தடுக்காமல் அவர்கள் என்ன கூற வருகிறார்கள் என்பதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். பழங்காலங்களில் வயதுக்கு வந்த பெண்கள் வெளியே செல்லக் கூடாது என்ற நிலைமை இருந்தது. இதையே இன்றளவும் பல கிராமங்களில் கடைபிடித்து வருகின்றனர். எனவே பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக பெற்றோர் இந்த நிலைமையை மாற்றி அவர்களை ஆண் குழந்தைகள் போல சமமாக நடத்த வேண்டும். இதுபோன்ற சிறு சிறு மாற்றங்கள் பெண் குழந்தைகள் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ வழிவகுக்கும் என்று மாணவி க.ஸ்ரீஅருணா கூறினார்.

சமமாக நடத்த வேண்டும்

ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தில் மாஸ்டர் ஆப் டிசைனிங் படிக்கும் சென்னை ராயப்பேட்டை கோபாலபுரத்தைச் சேர்ந்த மாணவி சு.மோனிஷா நம்மிடம் தெரிவித்ததாவது:-

முதலில் நமது வீட்டிலேயே பெண் குழந்தைகளுக்கு சம உரிமை வழங்குவதை தொடங்க வேண்டும். நமது அம்மாவுக்கு நம் அப்பா மரியாதை கொடுக்க வேண்டும். இதை வீட்டில் உள்ள ஆண் குழந்தைகள் பார்க்கும் போது அவர்களும் பெண் குழந்தைகளிடம் மரியாதையுடனேயே பழகுவார்கள். இது பிற்காலத்திலும் ஆண்கள் பெண்களிடம் மரியாதையுடன் பேசுவதற்கும் பழகுவதற்கும் வழிவகுக்கும். பள்ளிகளில் பெண் குழந்தைகளின் ஆரோக்கியம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒரு குடும்பத்தில் எப்படி நிர்வாகம் செய்வது என்பதை சிறு வயதிலிருந்தே பெண்களுக்கு சொல்லித்தர வேண்டும். இது பிற்காலத்தில் பெண் குழந்தைகள் ஆளுமைத்திறனில் சிறந்து விளங்குவதற்கு ஒரு படிக்கல்லாக அமையும் என்று கூறினார்.

தோழன், தோழி போல பழகுங்கள்

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் ஊடக அறிவியல் துறைக் கல்வி பயிலும் மாணவி ரா.ஹரிணி கூறியதாவது:-

பெண் குழந்தைகள் ஒரு சில காரணங்களால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதனை அவர்கள் பெற்றோரிடம் சொல்லியிருக்கமாட்டார்கள். அவர்களது பிரச்சனையை சொல்லும் அளவிற்கு பெற்றோர்கள் அவர்களிடம் தோழன், தோழி போல பழக வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் ‘ஒன்றும் இல்லை, எல்லாம் சரியாகிவிரும், நான் இருக்கிறேன்’ என்பது போன்ற ஆறுதலான வார்த்தைகளைக் கூறி அதிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவர வேண்டும். அந்த நேரத்தில் அவர்களுடைய நிலைமையை அறிந்து அவர்களுக்கு பெற்றோர் ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருக்க வேண்டும்.

பெண் குழந்தைகள் எது பேசினாலும் ‘உனக்கு எதுவும் தெரியாது. நீ வாயை மூடு’ என்று சொல்லாமல் அவர்கள் கூறும் வார்த்தைகளுக்கு செவிசாய்க்க வேண்டும். அவர்களைப் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும். அவர்களுடைய கருத்துகளைக் கேட்டு அது சரியானதாக இருந்தால் எடுத்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்களிடம் அதைப் பற்றி புரிதல் ஏற்படுத்த வேண்டும். இது அவர்கள் எந்த சூழ்நிலையில் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்பதற்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

உளவியல் பயிற்சி வேண்டும்

எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் தகவல் தொடர்பியல் முதுகலை மாணவி சுப்ரிஜா சிவக்குமார் நமமிடம் கூறியதாவது:-

பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிராக பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடப்பதால் வெளியே சென்றால் அவர்களுக்கு எதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தில் அவர்களிடம் மொபைல் ஃபோனைக் கொடுத்து வீட்டிலேயே விளையாடச் செய்கின்றனர். அப்படி செய்யாமல் பெற்றோர்களுடைய கண்காணிப்பில் அவர்களை வெளியே சென்று விளையாட அனுமதிக்க வேண்டும்.

இதுதான் சமுதாயத்தைப் பற்றி அவர்கள் தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பாகவும் அமைகிறது. பள்ளிகளில் உளவியல் கல்வியும் உளவியல் பயிற்சிகளும் கற்றுத்தர வேண்டும். இது மனதளவில் குழப்பம் ஏற்பட்ட பெண் குழந்தைகள் மேலும் பாதிப்படையாமல் விரைவிலேயே அவர்கள் தெளிவடைய வழிவகுக்கும். என்ன நடந்தாலும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அவர்களே சரியான முடிவை எடுக்கும் அளவுக்கு பெற்றோர்கள் அவர்களை சிறு வயதிலிருந்தே பக்குவமாக வளர்க்க வேண்டும்.

இவர்கள் கூறும் இந்த கருத்துகளை வைத்துப் பார்க்கும்போது பெண்களுக்கு உரிமை, பாதுகாப்பு, தன்னம்பிக்கை, தைரியம் ஆகியவை வருவது அவரவர் பெற்றோர் வளர்ப்பதிலேயே ஆரம்பமாகிறது என்பதே உண்மை. எனவே பெற்றோர் தங்களது பெண் குழந்தைகளுக்கு மிகப் பெரிய பலமாக இருந்து அவர்களின் சாதனைகளுக்கு ஆணி வேராக இருக்க வேண்டும்.

இந்த கருத்துகளை மனதில் வைத்தும் இதனைப் பின்பற்றியும் பெண் குழந்தைகளைப் பேணி வளர்ப்போம்; அவர்களைப் போற்றுவோம்! பெண்ணுக்குப் பெருமை செய்யும் புதியதோர் சமுதாயம் படைப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *