செய்திகள்

59 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது டெல்லி கேபிட்டல்ஸ்

துபாய், அக். 6–

ஐ.பி.எல். 19வது லீக் ஆட்டத்தில் 59 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்திய டெல்லி கேபிட்டல்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு வந்தது.

ஐ.பி.எல் டி20 போட்டியில் துபாயில் நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. ‘டாஸ்’ வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி பவுளிங்கை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரிலேயே உதனா பந்து வீச்சில் பிரித்வி ஷா 3 பவுண்டரிகள் விளாசினார். பிரித்வி ஷா 42 ரன்னில் (23 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) முகமது சிராஜ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டிவில்லியர்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து ஷிகர் தவான் 32 ரன் (28 பந்து 3 பவுண்டரி) எடுத்த நிலையில் அவுட்டானார். ஸ்ரேயாஸ் அய்யர் 11 ரன்னில் அவுட்டானார். இதைத்தொடர்ந்து மார்கஸ் ஸ்டோனிஸ், ரிஷாப் பண்டுடன் ஜோடி சேர்ந்தனர். ரிஷாப் பண்ட் 37 ரன்னில் (25 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) போல்டு ஆனார். அடுத்து ஹெட்மயர் களம் இறங்கினார். அபாரமாக ஆடிய மார்கஸ் ஸ்டோனிஸ் அரைசதத்தை தாண்டினார். நடப்பு தொடரில் அவர் அடித்த 2-வது அரைசதம் இதுவாகும். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.

மார்கஸ் ஸ்டோனிஸ் 26 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 53 ரன்களும், ஹெட்மயர் 7 பந்துகளில் ஒரு சிக்சருடன் 11 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

197 ரன் இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணியின் வீரர்கள் தேவ்தத் படிக்கல் 4 ரன்னிலும், ஆரோன் பிஞ்ச் 13 ரன்னிலும், டிவில்லியர்ஸ் 9 ரன்னிலும், மொயீன் அலி 11 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டானார்கள். சிறிது நேரம் அடித்து விளையாடிய கேப்டன் விராட்கோலி 39 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் ரபடா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், துபே சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களே எடுத்தது. இதனால் டெல்லி அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

5-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி 4-வது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. 5-வது ஆட்டத்தில் விளையாடிய பெங்களூரு அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.

டி20 கிரிக்கெட்டில் 9,000 ரன்கள்: விராட் கோலி சாதனை

துபாயில் நேற்று நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய கேப்டன் விராட் கோலி 10வது ரன் எடுத்த நிலையில் டி20 கிரிக்கெட்டில் 9000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

இதில் 5 சதங்கள் 65 அரைசதங்கள் அடங்கும்.கெய்ல் 13,296 ரன்களையும், கிரன் பொலார்ட் 10,370 ரன்களையும், ஷோயப் மாலிக் 9,926 ரன்களையும், பிரெண்டன் மெக்கல்லம் 9,922 ரன்களையும், டேவிட் வார்னர் 9,451 ரன்களையும் ஏரோன் பிஞ்ச் 9,148 ரன்களையும் எடுத்து முன்னிலையில் உள்ளனர்.

இன்றைய போட்டி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 20-வது ஆட்டம் அபுதாபியில் இன்று மாலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடிய மும்பை அணி 3 வெற்றிகளையும், 4 ஆட்டங்களில் விளையாடிய ராஜஸ்தான் 2 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *