செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி, இலவச வீட்டுமனை பட்டா

கடலூர், பிப். 19–

கடலூர் மாவட்டத்தில் ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வழங்கினார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஜி.என்.மஹால் திருமண மண்டபத்தில் விருத்தாசலம், மங்களுர், நல்லூர், கம்மாபுரம் ஒன்றியங்களை சார்ந்த 1116 பயனாளிகளில் பட்டம், பட்டயம் படித்த 566 பயனாளிகளுக்கு ரூ.50,000 -வீதம் மொத்தம் ரூ2,83,00,000 மதிப்பீட்டிலும், 10ம் வகுப்பு 12ம் வகுப்பு படித்த 550 பயனாளிகளுக்கு ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.1,37,50,000 மதிப்பீட்டிலும் மொத்தம் ரூ.4,20,50,000 மதிப்பீட்டில் நிதியுதவியும், அனைத்து பயனாளிகளுக்கும் தலா 8 கிராம் வீதம் மொத்தம் 8.928 கிலோ கிராம் தாலிக்கு தங்கத்தினையும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் வி.டி.கலைச்செல்வன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வழங்கினார்.

விருத்தாசலம் கே.பி.எம்.வாசகம் மஹாலில் நடைபெற்ற விழாவில் விருத்தாசலம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் ஏழை எளிய மற்றும் சாமானிய மக்களை கண்டறிந்து அவர்களது ஆக்கிரமிப்புகளை நில வகைப்பாடு மாற்றம் செய்து வரன்முறை படுத்தும் திட்டத்தின் மூலம் விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் ஆகிய வட்டங்களை சார்ந்த 342 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1,51,11,100 மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனை பட்டா விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் வி.டி.கலைச்செல்வன் முன்னிலையில் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பேசியதாவது:

அனைவரும் ஆண் பெண் பாகுபாடு பார்க்காமல் சமமாக கருதப்படவேண்டும், பெற்றோர்கள் அனைவரும் பெண் கல்வியின் அவசியத்தை உணர்ந்து செயல்படவேண்டும், மாணவர்கள் கல்வி இடை நீற்றலை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும், அனைவருக்கும் பட்டயபடிப்பு வருங்காலங்களில் அவசியமான ஒன்றாக கருதி குறிப்பாக பெண்கள் தங்கள் சுயமாக செயல்பட கல்வி இன்றியமையாதது.

அனைத்து பணிகளிலும் பெண்கள் திறன்பட செயல்பட்டு சாதித்து வருகின்றனர். மேலும் அரசு ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி அளிக்கும் திட்டம், மகளிர் சுயஉதவிக்குழு மூலம் கடனுதவி பெறும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி பெண்கள் முன்னேற்றம் அடையவும். பெண்சமுதாயத்ததை முன்னேற்றும் வகையில் செயல்படுத்த வேண்டும்.

அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை வரன்முறைபடுத்தி ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட ஒருங்கிணைந்த சிறப்பு வரன்முறைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வருவாய் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் விருத்தாசலம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட விருத்தாசலம். மங்களுர். நல்லூர் கம்மாபுரம் ஆகிய வட்டங்களில் சிறப்பு வரன்முறை படுத்தி வீடற்ற சாமானிய ஏழை மக்களுக்கு தகுதியின் அடிப்படையில் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கு நிலையான இருப்பிடம் அமைத்துக்கொண்டு தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவின்குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன், சமுக நல அலுவலர் அன்பழகி, நல்லூர் ஒன்றிய குழு தலைவர் ஆடியபாதம், வட்டாட்சியர்கள் செல்வகுமார், சையத் அமுதாஹீர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *