போஸ்டர் செய்தி

கூட்டணியை மதிக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க. தான்: சேலம் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சேலம், ஜன.22–

கூட்டணியை மதிக்கும் ஒரே கட்சி அண்ணா தி.மு.க. என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

காரியம் நடக்க வேண்டுமென்றால் தி.மு.க.வினர் காலைப் பிடிப்பார்கள். காரியம் முடிந்ததும் காலை உதறிவிடுவார்கள். இது தான் அவர்களது இயற்கை குணம் என்று முதலமைச்சர் காட்டமாக கூறினார்.

சேலம் ஆத்தூரில் எம்.ஜி.ஆரின் 103–வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் மிக பிரமாண்டமாக நடந்தது.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–

புரட்சித் தலைவர் மறைந்தார், அப்பொழுது கருணாநிதி கனவு கண்டார், இந்த இயக்கம் உடைந்து விடும், கட்சி அழிந்துவிடும் என்று நினைத்தார். ஆனால் கட்சி பிரிந்தது. ஆனால் எம்.ஜி.ஆரின் கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காக பிரிந்த இயக்கத்தை ஒன்றாக சேர்த்த பெருமை அம்மாவைச் சாரும். இன்றைக்கு எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன, எந்தக் கட்சியாவது இணைந்திருக்கின்றதா? கிடையவே கிடையாது, பிரிந்தது பிரிந்ததுதான். ஆனால் புரட்சித்தலைவர் மறைவிற்குப் பிறகு கட்சி இரண்டாகப் பிரிந்தது, பிரிந்த கட்சியை மீண்டும் ஒன்றாகச் சேர்ந்தது. எம்.ஜி.ஆர். பத்தரை ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியைத் தந்தார். அம்மா பதினைந்தரை ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியைத் தந்தார். அம்மா மறைவிற்குப் பிறகு கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கின்றோம். இன்றைக்கு அண்ணா தி.மு.க. ஆட்சி தமிழ் மண்ணிலே சுமார் முப்பது ஆண்டுகாலம் ஆட்சியிலே, அதிகாரத்திலே இருக்கின்றது. இன்றைக்கு தமிழகத்திலே அதிகமாக ஆட்சி புரிந்த கட்சி அண்ணா தி.மு.க. கட்சி.

முப்பது ஆண்டு காலம் வரலாற்றைப் படைத்த கட்சி, இன்றைக்கு ஸ்டாலின் பேசுகிறார். இந்த ஆட்சி எத்தனை காலம் இருக்கும், ஆரம்பத்திலே அப்படித்தான் கணக்கு போட்டார். 10 நாட்கள் இந்த ஆட்சி தாக்குப் பிடிக்குமா? ஒரு மாதம் தாக்குப் பிடிக்குமா? பட்ஜெட் போடுகின்ற வரைக்கும் தாக்குப் பிடிக்குமா? மானிய கோரிக்கை முடியும்வரை இந்த ஆட்சி தாக்குப் பிடிக்குமா? என்று கணக்கு போட்டார், பிப்ரவரி மாதம் வருகின்றபொழுது 3 ஆண்டு நிறைவு பெறவிருக்கிறது. அம்மா மறைவிற்குப் பிறகு நான் முதலமைச்சராக உங்களுடைய ஆதரவிலே பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெறவிருக்கிறது. நீங்கள் (ஸ்டாலின்) தவறான கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

எடப்பாடி பழனிசாமி ஒருவன் மட்டும் தான் அண்ணா தி.மு.க.வில் இருப்பவரைப்போல் நீங்கள் எண்ணுகின்றீர்கள். இவர் ஒருவர் தான் முதலமைச்சர் என்று எண்ணுகிறீர்கள், அல்ல, மேடையில் இருப்பவர்கள் மட்டுமல்ல, இங்குள்ள அத்தனைபேரும் முதலமைச்சர். ஒரு பழனிசாமி அல்ல, ஓராயிரம் பழனிசாமி அண்ணா தி.மு.க.வில் இருக்கின்றார்கள். நான் இல்லாவிட்டால் இங்கே அமர்ந்திருக்கின்றவர் எவராவது ஒருவர் அண்ணா தி.மு.க.வை சார்ந்தவர்தான் இந்த நாட்டை ஆளக்கூடியவர்.

ஸ்டாலின் கனவு பலிக்காது

ஆகவே, உங்களுடைய கனவு என்றைக்கும் பலிக்காது, என்றைக்கும் நீங்கள் முதலமைச்சர் ஆகவே முடியாது. உங்களுடைய கட்சியிலே நீங்கள் முதலமைச்சராக நினைத்துக் கொண்டிருக்கலாம். எங்களுடைய கட்சியிலே அத்தனைபேரையும் முதலமைச்சராக நினைத்துக் கொண்டிருக்கின்றேன். ஆகவே, எங்களுடைய பலம் அதிகம், நீங்கள் ஒருவர் தான், ஆனால் எங்களிடத்தில் லட்சக்கணக்கான பேர் இருக்கின்றார்கள், லட்சக்கணக்கான முதலமைச்சர்கள் இங்கே அமர்ந்திருக்கின்றார்கள், நாட்டில் இருக்கின்றார்கள். என்னை மட்டும் நீங்கள் பேசிக் கொண்டேயிருக்கின்றீர்கள், மற்றவர்களை மறந்து விட்டீர்கள். இங்கே அமர்ந்திருக்கின்ற அத்தனைபேரும் தகுதியானவர்கள்.

நான் முதலமைச்சர் ஆவேனென்று எண்ணினேனா? இல்லை. உங்களைப் போல கீழே அமர்ந்து கேட்டுத்தான் மேலே வந்திருக்கின்றேன். அதேபோல இங்கே இருக்கின்றவர்களும் ஒரு காலத்திற்கு உயர்ந்த இடத்திற்கு வர முடியும். அது அண்ணா தி.மு.க.வில் மட்டும் தான் நடக்கும். வேறு எந்தக் கட்சியிலும் நடக்காது.

இங்கே மேடையிலே இருக்கின்ற சந்திரசேகரன் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். நகர செயலாளர், மாநிலங்களவை உறுப்பினராக இருக்கின்றார். அவரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்வதற்காக நானும், ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளர்களும் பேசிக் கொண்டிருந்தபொழுது, யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று எண்ணியபொழுது, ஒரே நாள் தான் இருந்தது, நாமினேஷன் வந்தது, அப்பொழுது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கு நாம் வழங்க வேண்டுமென்று உடனே முடிவெடுத்தோம்.

தி.மு.க.வில் முடியுமா?

அதேபோல, யாரை தேர்வு செய்வது என்று பார்க்கின்றபொழுது சகோதரர் சந்திரசேகர் நகர செயலாளராக இருக்கிறார், ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவர் பிரதிநிதியாக வர வேண்டும், மாநிலங்களவை உறுப்பினராக வர வேண்டுமென்று நாங்கள் எண்ணினோம், அவர் இன்றைக்கு மாநிலங்களவை உறுப்பினராக வந்திருக்கின்றார். எதற்காகச் சொல்கிறேன் என்று சொன்னால், ஒரு சாதாரணவர்கூட அண்ணா தி.மு.க.விற்கு நாடாளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, முதலமைச்சாக வர முடியும். தி.மு.க.வில் வர முடியுமா?

ஸ்டாலின் வரவிடுவாரா? இப்பொழுதே யார் வந்திருக்கின்றார் என்று பார்த்தீர்களே, உதயநிதி. யாரையும் விட மாட்டார்கள், யாரும் முதலமைச்சர் நாற்காலிக்கு வரமுடியாது அது வேறு விஷயம். அவர் எந்தக் காலத்திற்கும் வர முடியாது, மக்கள் தீர்மானித்து விட்டார்கள். ஏனென்றால் நாங்கள் இவ்வளவு பேர் முதலமைச்சராக இருக்கின்றோமே, எப்படி வர முடியும், முடியாது.

வாரிசு அரசியல்

ஆகவே, ஸ்டாலின் தனக்குப் பின்னாலே ஒரு வாரிசு, உதயநிதி வருவதற்காக தயார் பண்ணிக் கொண்டிருக்கிறார். அது வாரிசு அரசியல். கருணாநிதி இருந்தார், அதற்குப் பிறகு ஸ்டாலின், அதற்குப் பிறகு உதயநிதி. என்ன அக்கிரமம் பாருங்கள். அந்தக் கட்சிக்கு கஷ்டப்பட்டு உழைத்து ஓடாக தேய்ந்து போனவர்களை விட்டுவிட்டு, கருணாநிதி அவருடைய மகன் என்ற காரணத்தினாலே அவர் ஸ்டாலின் தி.மு.க. தலைவரானார்.

ஸ்டாலினின் மகன் உதயநிதி என்பதால் இளைஞரணி தலைவர். ஸ்டாலின் 70 வயது வரைக்கும் அவர் இளைஞரணி பதவியை யாருக்கும் கொடுக்கவில்லை. பிறகு அவருடைய மகனுக்குக் கொடுத்துவிட்டார். ஆனால், இங்கிருப்பவர்களுக்கு அப்படியா? எல்லோருக்கும் எல்லா பதவியும் கிடைக்கின்றது. இங்கே வாரிசு அரசியல் கிடையாது. கட்சிக்கு யார் விசுவாசமாக இருக்கின்றார்களோ, யார் கட்சிக்கு உழைக்கின்றார்களோ அவர்கள் எந்தப் பதவிக்கு வேண்டுமானாலும் வர முடியும்.

தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் எவ்வளவோ அரசியல் கட்சி இருக்கின்றன. ஆனால், எந்தக் கட்சியிலும் ஜனநாயக முறைப்படி கிடையாது. அண்ணா தி.மு.க.வில் தான் ஜனநாயக முறைப்படி இருக்கின்றது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட சாதாரண ஆட்களைத் தான் நாங்கள் நிறுத்தினோம். அதேபோல, சட்டமன்ற இடைத் தேர்தலிலும் சாதாரண ஆட்களைத் தான் நிறுத்தினோம். மிட்டா, மிராசுதாரரை நிறுத்தவில்லை, தொழிலதிபரை நிறுத்தவில்லை.

அண்ணா தி.மு.க.விற்கு கொடி பிடிக்கின்ற தொண்டன் இந்த இயக்கத்திற்காக உழைக்கின்றவரை நாங்கள் நிறுத்தினோம், வெற்றி பெறச் செய்தோம். உங்கள் கட்சியில் அது முடியுமா? துரைமுருகனுக்குப் பிறகு அவருடைய மகன் தான் வர முடியும், வேறு யாரும் வர முடியாது. அதேபோல, ஒவ்வொரு மாவட்டத்திலும் பார்த்தீர்களானால் அந்த மாவட்டத்தில் இருப்பவர்கள் தான் வர முடியும். மற்ற தி.மு.க.வினரெல்லாம் பாடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும். காலம் முழுவதும் அந்தக் கட்சிக்கு உழைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். பதவி மட்டும் எப்பொழுதும் கிடைக்காது. இனிமேல் எந்தப் பதவியும் கிடைக்காது என்பது வேறு விஷயம். மக்கள் முடிவு பண்ணிவிட்டார்கள்.இனிமேல் அண்ணா தி.மு.க.தான் இருக்க வேண்டுமென்று முடிவு பண்ணிவிட்டார்கள்.

பொய் பேசும் ஸ்டாலின்

எந்தப் பதவியும் உங்களுக்கு கிடைக்கப் போவதில்லை. ஏனென்றால் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலின் போது ஸ்டாலின் சொன்னார், நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டோம், சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று சொன்னார்.

எப்படி நீங்கள் ஜெயித்தீர்கள், அத்தனையும் பொய் வாக்குறுதி. விவசாயக் கடன் முழுவதும் தள்ளுபடி, எப்படித் தள்ளுபடி? தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலும் கடன் தள்ளுபடி, கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனும் தள்ளுபடி, தனியார் வங்கியில் வாங்கிய கடனும் தள்ளுபடி, எவ்வளவு பச்சைப் பொய். அதற்கு மேல் ஒரு படியாக 5 சவரனுக்குக் குறைவாக நகையை அடமானம் வைத்த தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலும் தள்ளுபடி, கூட்டுறவு வங்கியிலும் தள்ளுபடி, தனியார் வங்கியில் வைத்திருந்தாலும் தள்ளுபடி, பொய்தானே பேசுகின்றோம், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்று பேசிவிட்டார். இப்படி கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தார். நாட்டு மக்களை எப்படி ஏமாற்ற முடியும் என்ற வித்தை மூலமாக தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். அதை நம்பி மக்களும் வாக்களித்தார்கள். பிறகு, அவர் வெற்றி பெற்றார். தள்ளுபடி செய்ய வேண்டுமல்லவா? எங்கே செய்தீர்கள். நீங்கள் என்ன சொன்னீர்கள்? நாங்கள் வெற்றி பெற்றால் விவசாயக் கடன், நகைக் கடன் தள்ளுபடி செய்வோம் என்று சொன்னீர்கள், ஜெயித்து விட்டீர்கள் அல்லவா? இப்பொழுது கேட்டால் நாங்கள் ஆட்சிக்கு வரவில்லையென்று சொல்கிறீர்கள். நீங்கள் ஆட்சிக்கு வரமுடியாதென்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், பொய்யான வாக்குறுதியை கொடுத்து மக்களை ஏமாற்றி, மக்கள் மனதில் தவறான எண்ணத்தை உருவாக்கி, கவர்ச்சிகரமான திட்டத்தை வாரியிறைத்து அதன் மூலமாக பெற்ற வெற்றி நாடாளுமன்ற வெற்றி.

மக்கள் சக்தி பெற்ற அண்ணா தி.மு.க.

அண்மையில் நடைபெற்ற வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றீர்கள். அந்தத் தேர்தல் பிரச்சாரத்தின்பொழுது, ஏற்கனவே எங்களுடைய நாடாளுமன்ற வேட்பாளர் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றார். அதைவிட கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று ஸ்டாலின் அனைத்துக் கூட்டங்களிலும் பேசினார். ஆனால், வெறும் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றீர்கள். அதிலும், அந்த நாடாளுமன்றத் தொகுதியில் இருந்த 6 சட்டமன்றத் தொகுதியில் 3 தொகுதியில் அண்ணா தி.மு.க. அதிகமாக வாங்கியிருக்கிறது, இரட்டை இலை அதிகமாக வாங்கியிருக்கின்றது. குடியாத்தம் சட்டமன்ற இடைத் தேர்தல், நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடந்தது. அப்பொழுது தி.மு.க. வேட்பாளர் 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தார்.

அதற்குப் பிறகு, தள்ளி வைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தேர்தலுடன் நடந்தது. அந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை குடியாத்தத்தில் 12000 வாக்கு வித்தியாசத்தில் இருந்தது. மூன்றே மாதத்தில் திமுக 28000 வாக்கு வித்தியாசம், மூன்று மாதம் கழித்து இரட்டை இலை 12000 வாக்கு கூடுதலாக பெற்றிருக்கிறது. அப்படியென்றால் எந்த அளவுக்கு மக்கள் சக்தியுள்ள கட்சி என்பதை தள்ளிவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்றத்திலே நாம் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம்.

அம்மா இருக்கின்றபொழுது 2016-ல் சட்டமன்ற பொதுத் தேர்தலில் விக்கிரவாண்டியில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். இதயதெய்வம் அம்மா இருக்கின்றபொழுது 2016-ல் சட்டமன்ற பொதுத் தேர்தலில் நாங்குநேரியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தற்போது இரண்டிலும் அண்ணா தி.மு.க. வெற்றி பெற்றது. விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் 45000 வாக்குகள் வித்தியாசத்திலும், நாங்குநேரியில் 34000 வாக்குகள் வித்தியாசத்திலும் நாம் வெற்றி பெற்று மிகப் பெரிய வெற்றியைச் சந்தித்தோம்.

நாடாளுமன்றத் தேர்தலையும், சட்டமன்றத் இடைத்தேர்தலையும் எந்த அளவுக்கு மக்கள் பிரித்துப் பார்த்து வாக்குகளை அளித்துள்ளார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். நாடாளுமன்றத் தேர்தல் என்பது மத்தியிலே யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்கான தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என்பது இங்கே யார் நல்லாட்சி செய்கிறார்கள் என்று சான்று வழங்குகின்ற தேர்தல் அந்த இடைத்தேர்தல். ஒரு ஆட்சி சிறப்பாக இருக்கின்றதா, இல்லையா என்பதை நிரூபிக்கின்ற தேர்தல் அந்த இடைத்தேர்தல். அந்த இடைத்தேர்தல் மூலமாக அண்ணா தி.மு.க. அரசு சிறந்த அரசு என்று அந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று நல்ல நற்சான்றை மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், தி.மு.க. தேய்பிறை என்று சொன்னார். உதாரணத்திற்கு கரெக்டாகத் தான் சொன்னார். நாடாளுமன்றத் தேர்தலில் கிராமத்திலிருந்து நகரம் வரை அதிகமான வாக்குகளைப் பெற்று அதிகமான இடங்களை நீங்கள் வென்றீர்கள். அடுத்து வந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிகமான வாக்குகளை அண்ணா தி.மு.க. பெற்றது. அப்பொழுது என்ன, தேய்பிறை தானே? நீங்கள் தோற்றால் தேய்பிறை தானே. அதற்குப் பிறகு வந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அண்ணா தி.மு.க. கூட்டணி ஒருமித்த கருத்தோடு செயல்பட்டு சேலம் மாவட்டத்தில் கூட பெரும்பான்மையான இடங்களை வென்ற மாவட்டம் சேலம் மாவட்டம். தமிழ்நாடு முழுவதும் அதிகமான வெற்றிகளை பெற்றோம். நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வாக்குகளை ஒப்பிட்டுப் பார்த்துதான் மீன்வளத் துறை அமைச்சர் பேசியிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு குறைந்த ஓட்டு தான் கிடைத்தது, உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் கிடைத்தது.

ஆகவே, தி.மு.க. தேய்பிறை என்று சொல்வது சரி, உங்களுக்கு அது புரியவில்லை, நீங்கள் எழுதிவைத்து படித்துக் கொண்டிருக்கிறீர்கள், நாங்கள் என்ன செய்வது? தேய்பிறை என்பதற்கு இதைவிட என்ன விளக்கம் வேண்டும்?

காலை உதறிவிடும் தி.மு.க.

அதுமட்டுமல்ல, இன்னும் விசித்திரமானது, அண்மையில் 5 நாட்களுக்கு முன் கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டது, புகைச்சல் ஏற்பட்டவுடன் காங்கிரஸ் ஒரு அறிக்கை விட்டார்கள், தி.மு.க. பொருளாளர் அதை எதிர்த்து அறிக்கை விட்டார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தெளிவாக சொன்னார், என்ன சொன்னார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் கட்சி வாக்கில்லாத கட்சி என்று மூத்த தி.மு.க. உறுப்பினர், தி.மு.க.வின் பொருளாளர் சொல்கிறார். இதைவிட அவமானம் என்ன வேண்டும்? அவர்களுக்கு காரியம் நடக்க வேண்டுமென்றால், தி.மு.க.க்காரர்கள் காலைக் கூட பிடிப்பார்கள், காரியம் முடிந்தால் காலை உதறிவிடுவார்கள். அதுதான் அவருடைய இயற்கையான குணம், அப்படித்தானே இப்பொழுது செய்திருக்கிறார்கள். நாங்கள் கூட கூட்டணி அமைத்தோம், அமைத்தவுடன் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் அதிக இடங்களை நாங்கள் சேலத்தில் கைப்பற்றியிருக்கிறோம்.

பாட்டாளி மக்கள் கட்சி நம் கூட்டணி, குறைந்த இடத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு மாவட்டத் தலைவர் பதவியை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம், கூட்டணி தர்மம். நாங்கள் கூட்டணியை மதிப்போம். ஆனால் தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணியை எந்தக் காலத்திலும் தி.மு.க. மதித்தது கிடையாது, அதுவும் ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி எந்தக் காலத்திலும் மதிக்க மாட்டார்கள்.

பாவம், காங்கிரஸ் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. நூற்றாண்டு விழா கொண்டாடிய ஒரே கட்சி. அந்தக் கட்சி பரிதாபமான நிலைக்கு போய்விட்டது. இவ்வளவு அவமானச் சொல்லையும் தாங்கி இன்றைக்கு ஒட்டி இருக்கிறார்கள். அதுதான் மீன்வளத் துறை அமைச்சர், கண்ணாடி உடைந்து போய்விட்டது, எவ்வளவு ஒட்டினாலும் உடைந்த கண்ணாடி உடைந்த கண்ணாடிதான் என்று சொன்னார். எனவே அவர்களது கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. கூட்டணி தர்மம் என்பது அங்கே கிடையாது, கூட்டணிக்கு மரியாதை கொடுக்க மாட்டார்கள். ஆனால் அண்ணா தி.மு.க.வை புரட்சித்தலைவர் இருக்கும்பொழுதும் சரி, அம்மா இருக்கும்பொழுதும் சரி, அம்மா மறைவிற்குப் பிறகு அம்மாவினுடைய அரசும், அம்மாவின் தலைமையில் நடத்தப்படுகின்ற அண்ணா தி.மு.க.வும் சரி கூட்டணியை மதிக்கக்கூடிய ஒரே கட்சிகளாக இருக்கும் கட்சி காங்கிரஸ் கட்சி அண்ணா தி.மு.க. கட்சி.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *