செய்திகள்

சசிகலாவுக்கு போலீசாரின் 6 தடை உத்தரவுகள்: மீறியதால் நோட்டீஸ்

கிருஷ்ணகிரி, பிப். 8–

வி.கே.சசிகலாவின் தமிழக வருகையை முன்னிட்டு விதி மீறல்கள் தடுத்தல் தொடர்பான செயல்முறை ஆணைகளை கடை பிடிக்க வேண்டியது தொடர்பாக, காவல்துறை 6 ஆணைகளை வெளியிட்டது.

தற்போதுள்ள கோவிட்19 மற்றும் சட்டம் ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு 30(2) காவல் சட்டம் அமலில் இருப்பதால் 6 செயல்முறைகளை பின்பற்ற இந்த செயல்முறை ஆணையின்படி தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. வி.கே.சசிகலா வாகனத்தின் பின்பு ஐந்து வாகனங்கள் மட்டுமே பின் தொடர்ந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அமமுக கட்சியினரின் இதர வாகனங்கள் பின் தொடர்ந்து வர அனுமதி இல்லை. அவ்வாகனங்கள் வழியிலேயே நிறுத்தப்படும். வி.கே.சசிகலா உட்பட யாரும் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்துவது விதிமீறல்கள் ஆகும். ஒவ்வொரு வரவேற்பு இடத்திலும் அங்கு உள்ள கூட்டத்தில் 10 சதவீத அளவு சீருடை அணிந்த அமமுக தொண்டர்கள், கூட்டத்தை ஒழுங்கு படுத்திட வேண்டும்.

நோட்டீஸ் வழங்கிய போலீஸ்

பட்டாசு வெடிப்பதற்கும் பேண்டு வாத்தியங்கள் இசைப்பதற்கும் கண்டிப்பாக அனுமதி இல்லை. கொடி, தோரணங்கள், பேனர்கள், பிளெக்ஸ் பேனர்கள் அனுமதி இன்றி வைக்கக்கூடாது.

விதிமுறைகளை மீறும் பட்சத்தில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று 6 உத்தரவுகளை கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர், சசிகலாவுக்கு வழங்கினார்.

இந்நிலையில் ஓசூர் அருகே, போலீசார் சசிகலா காரை தடுத்து நிறுத்தினர். இதனால் பதற்றம் நிலவியது. அப்போது கிருஷ்ணகிரி போலீசார் ஒரு நோட்டீசை சசிகலாவிடம் கொடுக்க வந்தனர். சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் அந்த நோட்டீசை பெற்றுக்கொண்டார். தடையை மீறி காரில் அதிமுக கொடியுடன் வந்ததால் அதைக் கண்டித்து காவல்துறை அந்த நோட்டீசை கொடுத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *