செய்திகள்

குடியரசு துணைத்தலைவர் தன்கருக்கு காங்கிரஸ் எழுப்பியுள்ள 5 கேள்விகள்

டெல்லி, டிச. 21–

மாநிலங்களவை தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஜகதீப் தன்கருக்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் 5 கேள்விகளை எழுப்பி உள்ளார்.

கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்புக் குளறுபடி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதனால் ஏற்பட்ட அமளியால் 143 நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி கல்யாண் பானர்ஜி, குடியரசுத் துணை தலைவர் ஜக்தீப் தன்கரைப் போல மிமிக்ரி செய்ததும், அதை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செல்போனில் வீடியோ எடுத்ததும் பா.ஜ-வினரால் விமர்சிக்கப்பட்டது.

இத்தகைய சூழலில், ராஜ்ய சபாவில் இந்த விவகாரம் குறித்து பேசிய ஜக்தீப் தன்கர், “ஜக்தீப் தன்கரை நீங்கள் (எதிர்க்கட்சிகள்) எவ்வளவு அவமானப்படுத்தினாலும் எனக்கு கவலையில்லை. ஆனால், குடியரசு துணைத் தலைவரை, விவசாய சமூகத்தை, என்னுடைய சமூகத்தை அவமானப்படுத்துவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. என்னுடைய பதவியின் கண்ணியத்தைக் காக்க முடியவில்லை என்பதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று கூறினார்.

காங்கிரஸ் கேள்வி

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா, தனது எக்ஸ் பக்கத்தில், “எதிர்க்கட்சிகள் இல்லாத நாடாளுமன்றம், அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயல். இது ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கிறது. சபாநாயகர் ஜக்தீர் தன்கர் விவசாய சமூகத்தை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பேசியது தொடர்பாக எனக்கு சில கேள்விகள் இருக்கிறது.

1. ராஜஸ்தான், அரியானா, பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது தீவிரவாத, நக்சலைட், அராஜகவாதிகள் என பிரதமர் மோடி அரசு குறிப்பிட்டபோது, அது விவசாயிகளை அவமதிக்கவில்லையா?

2. விவசாயிகள் போராட்டத்தில் 700 விவசாயிகள் மரணமடைந்தனர். அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய போது, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். ஆனால், ஒரு பா.ஜ.க எம்.பி கூட எழுந்து நிற்கவில்லையே அது விவசாயிகளை இழிவுபடுத்தவில்லையா?

3. விவசாயிகள் போராட்டத்தின் போது, விவசாயிகள் நடந்துச் செல்லும் பாதையில் ஆணிப் பலகைகளை வைத்துக் காயப்படுத்தியதே பா.ஜ.க அரசு. அது விவசாயிகளை அவமதித்ததாக கருதப்படாதா? இதெல்லாம் உங்களின் கண்களுக்கு தெரியவில்லையா?

4. விவசாயிகளின் மகள்களான மல்யுத்த வீராங்கனைகள் பா.ஜ.க எம்.பி-யால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டபோதும், நாடாளுமன்றத்துக்கு வெளியே அவர்கள் கண்ணீர் மல்க நீதிக் கேட்டு அழுதபோதும், பா.ஜ.க அரசின் காவல்துறை அவர்களை பூட்ஸ் காலால் மிதித்து நடுரோட்டில் இழுத்துச் சென்றபோதும் விவசாய சமூகம் அவமதிக்கப்படவில்லையா?

5. ராணுவத்தில் பணியாற்றும் விவசாயிகளின் சகோதரர்கள், மகன்கள் மற்றும் மகள்கள், நாடாளுமன்றத்திற்கு வெளியே “ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்” கோரி மன்றாடியபோது, சுதந்திர தினத்துக்கு முந்தைய நாள், ஆகஸ்ட் 14-ம் தேதி மாலை அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டும், அவமானப்படுத்தி, கைது செய்தபோதும் எங்கே சென்றீர்கள்?

எனவே, பதவியின் கண்ணியம் என்பது சாதியால் வாய்க்காது. அது கடமை உணர்வால் வந்தது. அரசே அரசமைப்புச் சட்டத்தைத் தாக்கும் போது, அதை எதிர்ப்பதே உண்மையான தேசப்பற்று என பதிவிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *