சென்னை, பிப். 22–
காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் வணிக நிறும செயலாண்மை, கணக்கியில் மற்றும் நிதியியல் துறை சார்பாக 2 நாள் இணைய வழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக ஜோர்டான் நாட்டின் அல்பல்பக்கா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளாதாரத் துறைப் பேராசிரியர் மபாஃக் டான்டன் கலந்து கொண்டு கொரோனாக்குப் (கோவிட்–-19)பிறகு உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து சிறப்புரை வழங்கினார். இந்தியப் பொருளாதாரத்தில் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து கமிட்டி மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனர் எஸ். வெங்கடமணி சிறப்பாக உரையாற்றினார்.
மேலும், திருநங்கை ஒலேகா அரோன், கொரோனா (கோவிட்-–19) பாதிப்பினால் 3ம் பாலினத்தவர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டதையும் அதிலிருந்து அவர்கள் மீண்டெழுவது குறித்தும் ஆழமாக வலியுறுத்தினார். இக்கருத்தரங்கில் பேராசிரியர் மபாஃக் டான்டன் , எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் கலையியல் புலத்தின் தலைவர் ஜெ. ஜோதிகுமார் மற்றும் துணைத்தலைவர் ஏ. துரைசாமி ஆகியோர் பன்னாட்டு கருத்தரங்க மலரை வெளியிட்டனர்.
இந்த மலரில் பல்வேறு நாடுகளிலில் இருந்து ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் சமர்பித்த 200க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பிற்பகல் நடைபெற்ற நான்கு அமர்வுகளில் கட்டுரைகள் துறைசார் வல்லுநர்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.
நிறைவு விழாவில் நைஜீரியாவில் உள்ள பைரோ பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் அகம்மது முகம்மது சுனாமி பங்கேற்று இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்குமான வணிகத் தொடர்புகள் குறித்து உரையாற்றினார்.
மேலும், பெரும்பாலான நைஜீரிய மாணவர்கள் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பயின்று உலக அளவில் தலைசிறந்து விளங்கிறார்கள் என்று பெருமையோடு எடுத்துரைத்தார். சிறப்பு அழைப்பாளராக பட்டயக் கணக்களார் கே. ஹரிகரன் நிறுமச் செயலாண்மை, கணக்கியல் மற்றும் நிதியியல் துறையில் பயிலும் மாணவர்களுக்கு நிதித்துறையில் எவ்விதமான வேலை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என்பதைப் படம் பிடித்துக் காட்டினார். முன்னதாக இந்தப் இணைய வழிப்பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், பல்கலைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரையும் துறை சார்பாக துறைத்தலைவர் செல்வசுந்தரம் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.
மேலும் முனைவர் ஏ. ஐரின் சுதா இந்தப் இணைய வழிப் பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் மையக் கரு பற்றி விளக்கினார். இக்கருத்தரங்கில் இணைய வழியில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.