செய்திகள்

13.23 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை

புதுடெல்லி, ஏப்.22-

96 நாளில் 13.23 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு கடந்த ஜனவரி 3ந்தேதி ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து அந்த மாதம் 16ந்தேதி முதல் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

முதல் கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கும், முன் களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. மார்ச் 1-ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுடன் போராடுகிறவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஏப்ரல் 1ந்தேதி முதல் 45 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

அடுத்த மாதம் 1ந்தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்த தகுதி படைத்தவர்கள் ஆகிறார்கள்.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தாலும், தடுப்பூசி திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாதனை அளவாக 95 நாளில் 13 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்பட்டுள்ளன. இது மிக வேகமாக தடுப்பூசி போடப்படும் நாடாக இந்தியாவை உலக அரங்கில் காட்டுவதாக அமைந்துள்ளது.

ஏனென்றால் இந்த 13 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகளைப் போடுவதற்கு அமெரிக்காவுக்கு 101 நாள் ஆனது. சீனாவுக்கு 109 நாட்கள் ஆயின.

இந்தியாவில் 96 நாளில் சரியாக 13 கோடியே 23 லட்சத்து 30 ஆயிரத்து 644 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களில் 59.33 சதவீதம், மராட்டியம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், குஜராத், மேற்கு வங்காளம், கர்நாடகம், மத்திய பிரதேசம், கேரளா ஆகிய 8 மாநிலங்களில் போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

90 சதவீதம் கோவிஷீல்டு

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசியில் 90 சதவீதம் கோவிஷீல்டு ஆகும். மற்றவை கோவாக்சின் தடுப்பூசி ஆகும்.

நாட்டில் உள்ள 15க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் சண்டிகர், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் மக்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே போடப்பட்டுள்ளது. இத்தகவல் மத்திய அரசின் கோ-வின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு மருந்துக்கான பொருட்கள் அதிகமாக கிடைப்பதால் கோவாக்சினைவிட கோவிஷீல்டு அதிகமாக தயாரிக்கப்படுகிறது என்றும் வரும் காலத்தில் கோவாக்சின் தடுப்பூசியும் அதிக அளவில் தயாரிக்கப்படும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *