செய்திகள்

வங்க தேசத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்த தேசிய புலனாய்வு முகமை

சென்னை, திருப்பூரில் என்ஐஏ ரெய்டு: வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது

போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்தவரும் கைது

சென்னை, நவ. 8–

சென்னை அடுத்த படப்பையில் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலியான ஆதார் அடையாள அட்டை வைத்திருந்த, வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் மற்றும் அடைக்கலம் கொடுத்த ஒருவர் என 4 பேரை கைது செய்து, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, பள்ளிக்ககரனை, படப்பை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்துள்ள கருநீலம் பகுதியில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியிலும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

மறைமலைநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நபரின் செல்போன் பேச்சுக்கள் சந்தேகத்திற்கு இடமான நிலையில் இருந்ததை அடுத்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையை அடுத்த தாம்பரம், பள்ளிக்கரனை, படப்பை, கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

4 பேர் கைது

இந்த நிலையில் படப்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சகாபுதீன் என்பவரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்ததை அடுத்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். சகாபுதீன் கடந்த 2 மாதங்களாக படப்பையில் தங்கியிருந்த நிலையில், என்ஐஏ அதிகாரிகள் அவரது குடியிருப்பில் சோதனை நடத்தி போலி ஆதார் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இதே போல மறைமறை நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த முன்னா மற்றும் அவருடன் தங்கியிருந்தவரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேருமே வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் திரிபுராவை சேர்ந்தவர்கள் என போலி ஆதார் அட்டை தயார் செய்து சென்னையில் தங்கி வேலை செய்து வந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்து அவர்களுக்கு வேலை கொடுத்த சாகித் உஷேன் என்பவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதே போல திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள பனியன் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதே போல புதுச்சேரியிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *