செய்திகள்

‘மிக்ஜம்’ புயல் ஆந்திராவில் கரையை கடந்தது

அமராவதி, டிச.6-

சென்னையை புரட்டிப்போட்ட ‘மிக்ஜம்’ புயல் ஆந்திராவில் நேற்று பகலில் கரையை கடந்தது.

வங்கக்கடலில் கடந்த 27-ந் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ என பெயரிடப்பட்ட இந்த புயல் மெல்ல மெல்ல கரையை நோக்கி நகர்ந்தது.

இந்த புயலின் தாக்கத்தால் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பேய்மழை கொட்டியது. குறிப்பாக இந்த புயல் சென்னையை ஒட்டிய வட கடலோர பகுதிகளில் வளைந்து கடந்து சென்றதால் அதன் வேகம் குறைந்து மழை மேகங்களுடன் பயணித்தது.

இதனால் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 3ந்தேதி இரவு முதல் 4–ந்தேதி இரவு வரை இடைவிடாது கனமழை பெய்தது.

இந்த தொடர் மழையால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடானது. சாலைகள் அனைத்தும் ஆறுகளாக காட்சி அளித்தன. 4 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போனது.

‘மிக்ஜம்’ புயல் 4–ந்தேதி மாலையிலேயே சென்னையை விட்டு அகன்று ஆந்திராவை நோக்கி பயணித்தது.

பின்னர் அது தீவிர புயலாக மாறி தெற்கு ஆந்திராவின் பாபட்லா மாவட்டத்துக்கு அருகே நண்பகல் 12.30 மணி மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கு இடையே கரையை கடந்தது. நெல்லூர்–காவாலி இடையே புயல் கரையை கடந்ததாக மாநில முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்தது.

அப்போது மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வரை புயல் காற்று வீசியது. இதனால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சரிந்தன. குடிசைகளின் மேற்கூரைகள் பறந்தன. அத்துடன் பலத்த மழையும் பெய்தது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகினர். புயல் கரையை கடக்கும் நிகழ்வு 3 மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. இது அவர்களுக்கு பெரும் துயரை கொடுத்தது.

இந்த புயல் மற்றும் மழையால் ஆந்திராவின் பல மாவட்டங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்தன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகள், அரிக்கப்பட்ட சாலைகள், நிரம்பி வழியும் நீர்நிலைகள், சேதம் அடைந்த பயிர்கள் என மாநிலம் முழுவதையும் புரட்டிப் போட்டுள்ளது.

இதற்கிடையே புயல் சேதங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நிவாரணங்களை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

மேலும் நிவாரண முகாம்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் வீடுகளில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் அவர் அறிவுறுத்தினார். முதல்கட்ட நிவாரண நடவடிக்கைகளுக்காக ரூ.22 கோடியையும் அவர் ஒதுக்கீடு செய்தார்.

அங்கு அனகபள்ளி மாவட்டத்தில் மட்டுமே 52 நிவாரண முகாம்கள் நிறுவப்பட்டு உள்ளன. இவற்றில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோரை தங்கவைக்க ஏற்பாடுகள் நடந்தன.

புயல் கரை கடந்ததை முன்னிட்டு எலூரு, நெல்லூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தன.

மிக்ஜம் புயலில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை. அதேநேரம் பொருட்சேதங்களை மதிப்பிடும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *