செய்திகள்

மொசாத் உளவுத்துறை தலைமையகம் மீது தாக்குதல்: ஈரானுக்கு அமெரிக்கா கண்டனம்

நியூயார்க், ஜன. 16–

ஈரான் மீதான ஈராக் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த நிலையில், அமெரிக்கா ஈரானை கண்டித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் பரவும் நிலை தொடர்ந்து உருவாகி வருவது, உலக நாடுகளிடையே அச்சத்தை அதிகரித்திருக்கிறது. ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி, இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் வரை பல்லாயிரக் கணக்கான மக்கள் பலியான நிலையில், இன்றளவும் போர் தொடந்து வருகிறது. இதற்கிடையில், சோமாலியா கடல் கொள்ளையர்களைக் கட்டுப்படுத்துவதாக ஏமன் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதும் ஐ.நா வரை பேசப்பட்டது.

இந்த நிலையில்தான், ஈராக் மீது ஈரான் தக்குதல் நடத்திய சம்பவம் விவாதப் பொருளாகியிருக்கிறது. ஈராக் குர்திஸ்தானின் தலைநகரான அர்பிலில் இயங்கும் தீவிரவாத குழுக்களின் இலக்குகள் மீதும், உளவுத்துறை தலைமையகத்தின் மீதும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்திருக்கிறது. இந்த தாக்குதலில் பிரபல தொழிலதிபர் பெஷ்ரா டிசாயீ உட்பட 4 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 6 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.

இந்த தாக்குதல் குறித்து ஈரான் கூறும்போது, “ஜனவரி 3 அன்று, கெர்மானில் உள்ள தளபதி காசிம் சுலைமானியின் சமாதிக்கு அருகில் கூடியிருந்த மக்கள் மீது, ஈராக்கின் தீவிரவாதக் குழு நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் சுமார் 90 பேர் கொல்லப்பட்டனர். கடந்த டிசம்பர் மாதம், ராஸ்கில் உள்ள ஒரு காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 11 ஈரானிய காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

ஈரான் பதிலடி

இந்த தாக்குதல்களுக்குப் பதிலடி தரும் விதமாக, அர்பிலில் இயங்கும் தீவிரவாத குழுக்களின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், உளவு நடவடிக்கைகளை அதிகரித்து நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கு மையமாகச் செயல்பட்டுவருவதால், ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள இஸ்ரேலிய உளவுப் பிரிவான ‘மொசாட் உளவு அமைப்பு’ தலைமையகம் தாக்கப்பட்டது” எனத் தெரிவித்திருக்கிறது.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருப்பதுடன் இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறி இருப்பதாவது:–

“ஈரானின் தாக்குதல்களை அமெரிக்கா வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறது. ஈராக்கின் உறுதித் தன்மையைக் குலைக்கும் இந்தப் பொறுப்பற்ற ஏவுகணைத் தாக்குதல்களை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *