செய்திகள்

கொள்ளிடம் ஆற்று பாலத்தை உடைத்துக் கொண்டு 50 அடி ஆழத்தில் விழுந்த கார்: கேரள தம்பதி பலி

திருச்சி, டிச. 8–

திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில், கார் கவிழ்ந்த விபத்தில், கேரளாவை சேர்ந்த கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கி இன்று காலை கேரளா பதிவு எண் கொண்ட ஒரு கார் புறப்பட்டு சென்றது. இந்த காரில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் இருந்தனர். இந்த கார் இன்று காலை 7 மணி அளவில் திருச்சி – சென்னை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில், கொள்ளிடம் ஆற்று பாலத்தில் சென்றபோது விபத்தில் சிக்கியது. டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள பாலத்தின் தடுப்புக் கட்டையை உடைத்துக் கொண்டு 50 அடி கீழே உள்ள ஆற்றுக்குள் பாய்ந்தது. இதில் அந்தக் கார் சுக்கு நூறாக உடைந்து அதில் இருந்த இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இது பற்றி அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே திருச்சி ஸ்ரீரங்கம் காவல்நிலைய போலீசாரும், ஸ்ரீரங்கம் தீயணைப்பு மீட்புத் துறையினரும் சம்பவ இடம் விரைந்தனர். பின்னர் ரோப் கிரேன் வாகனத்தின் உதவியுடன் காரையும், இறந்தவர்களின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தினர். விபத்தில் சிக்கிய காரில் இருந்த உடைமைகளை போலீசார் சோதனை செய்தபோது, திருச்சி விமான நிலைத்திற்கு வந்திறங்கிய, கேரள மாநிலம் இடுக்கி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பவருக்கு சொந்தமான உடைமைகள் என்பது தெரியவந்தது.

அதில் விமான நிலைய சீல்களும் இருந்தன. ஆகவே விபத்தில் இறந்தவர் ஸ்ரீநாத் மற்றும் அவரது மனைவியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய தனது கணவரை, மனைவி அழைத்து செல்ல வந்த போது விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டது. சென்னை மாநகரில் வெள்ளப்பெருக்கு காரணமாக விமான போக்குவரத்து தடைபட்டுள்ள நிலையில் ஸ்ரீநாத் திருச்சி வந்து சென்னைக்கு செல்ல நினைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த விபத்தினால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து திருச்சி மாநகர வடக்கு போக்குவரத்துக் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *